இன்று ‘‘விநாயகர் சதுர்த்தி’’ – அதற்குமுன் சனி, ஞாயிறு வார விடுமுறை!
தொடர்ந்து 3, 4 நாட்கள் (வெள்ளிக்கிழமை விடுப்பு என்றும்) இப்படி அரசு – மதப் பண்டிகைகளுக்கு விடுமுறை விடுவது அப்படியே வங்கிகளையும் மூடுவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்று எண்ணிப் பார்ப்பதில்லை எவரும்!
உலகில் உள்ள நாடுகளில் இந்தியாதான் அதிகமாக அரசு விடுமுறை நாள்கள் விடும் ஒரே நாடு!
கடவுள், பக்தி என்ற பெயரால் கொண்டாடப்படும் இந்த பண்டிகைகள், பக்தர்கள் உட்பட பலரின் பகுத்தறிவைச் சூறையாடுவதாக இருக்கலாமா?
‘கடவுள் சர்வ சக்தி வாய்ந்தவர்’ – ‘எல்லாம் அவன் செயல்’,
‘கடவுள் சர்வ வியாபி’, – ‘எங்கும் நிறைந்தவர்’
‘கடவுள் சர்வ தயாபரன்’ – ‘கருணாமூர்த்தி’
இந்த பிரச்சாரங்களுக்கும் நாட்டின் நேரிடை நிகழ்வுகள் நடைமுறைக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?
அண்மைய கைலாச யாத்திரை, நேபாளத்திற்குப் போனவர்கள் கதி – ஏன் பரிதாபத்திற்குரியதாகியது? கடவுளின் சர்வ சக்தியும், ‘சர்வ வியாபமும், கருணையும் ஏன் தனது பக்தர்களைக்கூட காப்பாற்ற முடியவில்லை? சிந்தித்தீர்களா?
பிள்ளையார் உண்டியலைக்கூட பூட்டும் காவல் சக்திகளும்தான் பாதுகாக்கின்றனவே தவிர, ‘விக்னம்’ இல்லாமல் செய்யும் சதுர்த்திக் கடவுள்கள் ஏன் காக்கத் தவறுகின்றன?
‘‘பண்டிகைக் கடவுளுக்களுக்கானவை என்பவை எல்லாம் பிள்ளை விளையாட்டே’’ என்ற வடலூர் வள்ளலார் கூற்றையாவது ஆராய முன்வர வேண்டாமா?
கி.பி. 8ஆம் நூற்றாண்டிற்குப் பிறகே வடக்கே வாதாபியிலிருந்து, பரஞ்சோதி என்ற ஒரு படைத் தலைவன்மூலம் தமிழ்நாடு முதலான பல மாநிலங்களுக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஒன்று தான் ‘பிள்ளையார்’ விநாயகன் என்பதை ‘பிறந்தது எப்படியோ?’ என்ற மதுரைப் பல்கலைக் கழக துணைப் பாட நூலில் ஆழ்ந்த கடவுள் வைதீக நம்பிக்கையாளரும் பன்மொழிப் புலவருமான பேராசிரியர் முனைவர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் எழுதிய நூலில் வந்துள்ளதே! பதில் உண்டா?
முன்பு மகாராட்டிரத்தில் திலகர், மதத்தை அரசியலில் புகுத்தி, தங்களது உயர் ஜாதி ஆதிக்கத்தை நிலைநிறுத்திட ‘‘அரசியல் ரீதியாக புகுத்திய சிறப்புக்குரிய பண்டிகைதான் விநாயகர் – கணபதி திருவிழா! மகாராட்டிரத்தில் அதி தீவிரமாகக் கொண்டாடப்படும் ஒரு ஹிந்து மதப் பண்டிகைதான் – இப்போது கோலாகலமாக கொண்டாடப்படும் கணபதி பண்டிகை’’ என்கிறார்.
‘கடவுள்’ தோன்றியவர் என்றால், ஏன் எல்லோருக்கும் ஒரே மாதிரித் தோன்றாமல், மதத்திற்கு மதம், மதத்திற்குள்ளேயும் விநோதமாகத் தோன்றி சண்டை, சச்சரவுகளுக்குக் காரணமாகலாமா?
கணபதி, விநாயகர், பிள்ளையார் என்று பல பெயர்களில் கும்பிடப்படும் இந்த ‘கடவுள்’ எப்படி உற்பத்தியானார் என்பதில், ஏன் பலவித முரண்பாடுகள் நிறைந்த கதைகள்? (கற்பனையாகத்தான் அது சாத்தியப்படும்)
- பார்வதி அம்மையார் உடலில் அழுக்கை அகற்றி உருண்டை ‘பிள்ளையாரை’ காவலுக்கு வைத்து விட்டு கதவில்லாக் குளியல் அறையில் குளித்தாராம். அந்த நிலையில் பார்க்கத் துடித்தவரை தடுத்தபிள்ளையார் தலையை பரம சிவன் வெட்டி விட்டு உள்ளே போனார் என்பதும், பிறகு ‘‘தலைப் பிள்ளையைக் கொன்றுவிட்டீர்களே’’ என்று விசனித்த பார்வதியை சமாதானப்படுத்தி, காட்டிற்குச் சென்று யானைத் தலையை வெட்டி உடலில் ஒட்ட வைத்தார் என்பது நம்பத் தகுந்ததா?
இந்த லட்சணத்தில் அதனை, அக்காலத்திலே ‘Transplanation of organ’ – ‘‘உடல் உறுப்புகளை ஒட்ட வைக்கும் கலை மருத்துவத் துறை முன்னோடி’’ என்று உலக சயின்ஸ் கான்பிரான்ஸில் பிரதமர் மோடி பேச, முகம் சுளித்த விஞ்ஞானிகள் பலர் – அதில் நோபல் பரிசு பெற்றவரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் என்ற நம் நாட்டு விஞ்ஞானி உட்பட பலர்!
நம்பிக்கைகள் அறிவை விரிவு செய்வதாக இருந்தால்தானே ஏற்கத்தக்கவையாக இருக்க முடியும்.
அறிவியல் கண்டுபிடிப்புகளால் வந்த தொலைக் காட்சிகள் (T.V.) இந்த விநாயகன் பண்டிகையை அதிகமான விளம்பரத்தோடு நாள்கணக்கில் பரப்புவதுதான் இந்திய அரசியல் சட்டம் வற்புறுத்தும் அடிப்படைக் கடமையான, அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் வழியா? வெட்கக்கேடு!
கேட்டால் ‘Rating, Rating’ என்று கூறி, ஏடுகள் விளம்பர வருமானத்திற்காக வாய் பிளக்கின்றன – இவை எல்லாம் மக்களின் அறிவு, பகுத்தறிவுக்கு மிகப் பெரிய சவால்கள் அல்லவா?
இதை எதிர்கொள்ள வேண்டிய கடமை ஒவ்வொரு பகுத்தறிவுள்ள குடி மகனும், மகளுக்கும் உண்டு. செய்தால் தானே நாடு முன்னேற்றம் காணும். இன்றேல்….? தேக்கம்தான் – அறிவுக் குப்பைகளில் உழன்றுகொண்டே நாளும் பின்னோக்கிச் செல்லும் ஒரு விரும்பத்தகாத நிலையே மிஞ்சும் இல்லையா?
யோசியுங்கள்!
