சென்னை, செப். 14- மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் பணிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரப் பணிகளில் ஈடுபடும் இளைஞர் அணி நிர்வாகிகளையும், இளம் பேச்சாளர்களையும் ஒருங்கிணைக்க கட்சித் தலைமையின் அறிவுறுத்தலின்பேரில் மாநிலத் துணைச் செயலாளர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்படுகின்றன.
அதன்படி மதுராந்தகம் தொகுதிக்கு எஸ்.ஜோயல், நா. இளையராஜா, ப. அப்துல் மாலிக், பிரபு கஜேந்திரன், ஜி.பி. ராஜா ஆகியோர் கொண்ட குழுவும் தாராபுரம் தொகுதிக்கு இன்பா ஏ.என். ரகு, கே.இ. பிரகாஷ் எம்.பி. பி.எஸ். சீனிவாசன் எம்எல்ஏ, சி. ஆனந்தகுமார் ஆகியோர் கொண்ட குழுவும் அமைக்கப்படுகிறது.
இந்த நிர்வாகிகள், இரு தொகுதிகளையும் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு, தங்களுடைய மண்டலங்களுக்கு உட்பட்ட இளைஞர் அணி நிர்வாகிகளைப் பொறுப்பாளர்களாக நியமித்து வாக்கு சேகரிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஆம்னி பேருந்துகளில் அதிகக் கட்டணமா?
புகார் தெரிவிக்க புகார் எண், மின்னஞ்சல் அறிவிப்பு
சென்னை, செப்.14- பொதுமக்கள் மற்றும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, விழாக் காலங்களில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கவும், விதிமீறல்களை கட்டுப்படுத்தவும் இந்த சிறப்பு வாகனத் தணிக்கை தொடர்ந்து தீவிரமாக செப்.16 வரை மேற்கொள்ளப்படும்.
எதிர்வரும் நாள்களில், ஆம்னி பேருந்துகளில் அதிகக் கட்டணம் வசூலிப்பதாக புகார் வரும் பட்சத்தில், அனுமதி ரத்து போன்ற கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், பொதுமக்கள் மற்றும் பயணிகளின் அதிக கட்டண வசூல் குறித்து 9384808333 என்ற கைப்பேசி எண்ணிலும், [email protected] மின்னஞ்சல் முகவரியிலும் தங்களது புகார்களை தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளது.
