வாஷிங்டன், செப். 12- அமெரிக்காவில் வெளிநாடுகளைச் சேர்ந்த திறன் வாய்ந்த தொழிலாளர்களுக்காக ஆண்டுதோறும் அரசு சார்பில் எச்-1பி விசா வழங்கப்பட்டு வருகின்றது. இதில் 70 சதவீதம் விசாக்களை இந்தியர்கள் பெறுகிறார்கள். இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற டிரம்ப், எச்-1பி விசாக்களைப் பெறுவதற்கான நடை முறைகளைத் தொடர்ந்து கடுமையாக்கி வருகின்றார். கடந்த சில மாதங்களுக்கு முன் எச்-1பி விசா கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது.
எச்-1பி விசா வைத்திருப்பவர்கள் வேலை இழந்த பிறகு அமெரிக்காவில் தங்கியிருப்பதற்காக 60 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. புதிய வேலைவாய்ப்புகளைத் தேடுவதற்கும் அமெரிக்காவில் தங்கியிருந்து எளிதாக வேறு நிறுவனத்திற்கு மாற்றிக்கொள்ளவும் அனுமதிக்கும் வகையில் அதிபராக ஒபாமா இருந்தபோது இந்தக் கால அவகாச வசதி சேர்க்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அதிபர் டிரம்ப் அரசு எச்-1பி விசா வைத்திருப்போருக்கு மேலும் ஒரு பெரிய நெருக்கடியைக் கொண்டுவந்துள்ளது.
அதிபர் டிரம்ப் அரசு எச்-1பி விசா வைத்திருக்கும் பணியாளர்கள் வேலை இழந்தபின் வழங்கப்பட்டு வரும் 60 நாட்கள் கால அவகாசத்தை முற்றிலுமாக ரத்து செய்வதற்கான புதிய விதியை முன்மொழிந்திருப்பது, எச்-1பி விசா வைத்திருப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதிகாரிகளின் விருப் புரிமை அடிப்படையில் வழங்கப்படும் 60 நாள் அவகாசத்தை நீக்குதல் என்ற தலைப்பிலான இந்தப் புதிய விதி அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த 60 நாட்களுக்குள் பொதுமக்கள் இது குறித்த கருத்துகளைத் தெரிவிக்குமாறு உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அழைப்பு விடுத்துள்ளது. இந்த விதி இறுதி செய்யப்பட்டால் விசா காலாவதியாகும் முன்பே வேலையை இழக்கும் வெளிநாட்டுப் பணியாளர்கள் அமெரிக்காவில் தங்குவதற்கான தனிப்பட்ட அனுமதி ஏதும் இல்லாவிட்டால் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும்.
மேலும் மற்றொரு அமெரிக்க நிறுவனத்திடமிருந்து பணிவாய்ப்பைப் பெற்ற பிறகு அமெரிக்கத் தூதரகம் அல்லது துணைத் தூதரகத்தில் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியிருக்கும். அதிபர் டிரம்பின் இந்த நடவடிக்கையானது தொழில்நுட்ப நிறுவனங்களால் பணிய மர்த்தப்பட்ட இந்தியத் தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் எச்-1பி விசாவில் உள்ள பிறர் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.
