வி.சி.வில்வம்
தமிழ்நாட்டில் திராவிடர் கழகத்தில் செயல் படுவதற்கும், பிற மாநிலங்களில் செயல்படுவதற்கும் பெரிய வேறுபாடு உண்டு. அதிலும் மகாராட்டிரா போன்ற மாநிலங்களில் பல்லாண்டுகள் இயக்கத்தை வழிநடத்தி, அதைச் சிறப்பாக வளர்த்தெடுத்து, அடுத்த தலைமுறையிடமும் ஒப்படைத்து, இன்றைக்குத் தாய்த் தமிழ்நாட்டிற்குத் திரும்பியுள்ள “மும்பை” தயாளன் அவர்களை இந்த வார ஞாயிறு மலரில் பார்ப்போம்!
வணக்கம்! தங்களைக் குறித்து அறிமுகம் செய்து கொள்ளுங்கள்?
என் பெயர் ம.தயாளன். நான் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் எனும் ஊரில் 1948ஆம் ஆண்டு பிறந்தேன். தற்போது 78 வயதாகிறது. தொழிற்கல்வி (அய்.டி.அய்) முடித்துள்ளேன். எனது தந்தையார் மும்பையில் வசித்து வந்ததால், 1969ஆம் ஆண்டு நானும் மும்பை சென்றுவிட்டேன். அங்கு தற்காலிகமாக வேலை செய்த நிலையில், 1971ஆம் ஆண்டு அய்.டி.சி (ITC) நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தேன். எனது தந்தையாரும் அங்குதான் பணி செய்தார்கள். சற்றொப்ப 39 ஆண்டுகள் மும்பையில் வசித்த நான், 2008ஆம் ஆண்டு எனது சொந்த ஊரான மேலப்பாளையம் கிராமத்திற்கே வந்துவிட்டேன்.
தங்களது கொள்கைப் பயணம் எங்கு தொடங்கியது?
நான் மும்பை சென்ற பிறகுதான் திராவிடர் கழகத்தில் உறுப்பினர் ஆனேன். காரணம் எனது தந்தையார் பெ.மந்திர மூர்த்தி அவர்கள் பெரியார் கொள்கையைப் பின்பற்றியதோடு, தீவிரமான இயக்கப் பணிகளையும் செய்தவர். தந்தை பெரியார் மும்பைக்கு வந்திருந்தபோது, எங்கள் இல்லம் வந்துள்ளார்கள். இந்தச் செய்தி “வடநாட்டில் பெரியார்” நூலில் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டத்தைப் பெரியார் அறிவித்தபோது, மும்பையில் திராவிடர் கழகத் தோழர்களும் அப்போராட்டத்தை முன்னெடுத்தனர். அதில் எனது தந்தையாரும் கலந்து கொண்டார். மும்பை காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, அப்போராட்டத்தை முடிவிற்குக் கொண்டு வந்தனர். அந்தளவிற்கு இயக்கத்தில் தீவிரமாகப் பங்காற்றியவர். பார்ப்பனர்கள் நடத்தும் உணவகத்தில் சாப்பிட மாட்டார். திருமண வீடுகளில் அவர்கள் சமைத்ததாக அறிந்தால், அங்கும் தவிர்த்துவிடுவார். நம் வீட்டு நிகழ்ச்சிகளுக்குத் தமிழர்களை அழைத்து உணவு தயார் செய்யச் சொல்வார்களா என்று கேட்பார்.
தந்தை பெரியாரைப் பார்க்கும் வாய்ப்பு
உங்களுக்குக் கிடைத்ததா?
மும்பை, தாராவி பகுதியில் 1970ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டத்திற்குத் தந்தை பெரியார் வந்திருந்தார். நான் அந்நிகழ்வில் கலந்து கொண்டேன். மேடையில் பேசிக் கொண்டிருக்கும் போதே, “அய்யோ… அம்மா… என்று சத்தம் போட்டார்கள். புத்தகங்கள் விற்பனை செய்து கொண்டிருந்த அன்னை மணியம்மையார் அவர்கள் மேடைக்கு ஓடிச்சென்று பணிவிடைகள் செய்தார். இந்தக் காட்சிகள் அனைத்தையும் நான் பார்த்துள்ளேன்.
ஆசிரியர் அவர்கள் மும்பைக்கு அடிக்கடி வந்துள்ளார்கள். மும்பையில் “செம்பூர்” பகுதியில் எங்கள் வீடு இருந்தது. ஆசிரியர் அவர்கள் எங்கள் இல்லத்தில் தங்கியுள்ளார்கள். அப்போது எனக்கு வயது 22. நான் இளைஞராக மும்பையில் இருந்த காலத்திலும் ஆசிரியர் தான் எனது தலைவர், இன்றைக்கு 78ஆவது வயதில் தமிழ்நாட்டில் மேலப் பாளையத்தில் வசிக்கிறேன், இப்போதும் எனது தலைவர் ஆசிரியர் தான்! எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஓர் இயக்கத்தின் வலிமை என்பது இதுதான்!
தங்களின் திருமணம் குறித்து நினைவு கூறுங்கள்?
1975ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி, எங்களின் சுயமரியாதைத் திருமணம் இராகு காலத்தில், தாலி அணிவிக்காமல் நடந்தது. இணையர் பெயர் சிறீவள்ளி. அவரும் இயக்கக் கொள்கையில் தொடர்ந்து பங்கெடுப்பவர். மும்பையில் ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். எங்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர். மகன் திருமணம் தமிழர் தலைவர், ஆசிரியர் தலைமையில், எனது தந்தையார் முன்னிலையில் மும்பையில் நடைபெற்றது. இதுதவிர எனது சகோதரிக்கும் 1980ஆம் ஆண்டு ஆசிரியர் தான் சுயமரியாதைத் திருமணம் செய்து வைத்தார்கள். எனது சகோதரரும் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டவர்தான்!
மும்பைத் திராவிடர் கழகத்தில் தாங்கள் வகித்த பொறுப்புகள் யாவை?
மும்பைத் திராவிடர் கழகத்தில் ஆரிய சுப்பையா தலைவராக இருந்த போது, 1969இல் நான் உறுப்பினராக இணைந்தேன். பிறகு துணைச் செயலாளராகப் பணியாற்றி, தலைவராகப் பொறுப்பேற்றேன். மும்பைத் திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் அறிவிக்கப்படும் அனைத்து நிகழ்ச்சிகளையும் செய்து முடித்துவிடுவோம். ஆசிரியர் அவர்களை அழைத்து கருத்தரங்குகள், அரங்கக் கூட்டங்கள், மாநாடுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளோம். தவிர இயக்கத் தோழர்களின் திருமணங்ளையும் ஆசிரியர் நடத்தி வைத்துள்ளார்கள்.
நான் தலைவராகத் தொடர்ந்த போதே, பெ.கணேசன் செயலாளராக நியமிக்கப்பட்டார். அதேபோல பகுத்தறிவாளர் கழகத் தலைவராக அ.இரவிச்சந்திரன் செயல்பட்டார். திராவிடர் கழகமும், பகுத்தறிவாளர் கழகமும் இணைந்து பல்வேறு பகுத்தறிவுப் பணிகளிலும் ஈடுபடுவோம். தந்தை பெரியார் பிறந்தநாள், நினைவு நாள், அரங்க நிகழ்ச்சிகள் என ஆண்டுதோறும் இயக்க நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இதுதவிர தமிழ்நாட்டில் நடைபெறும் மாநாடுகளிலும் மும்பைத் தோழர்கள் கலந்து கொள்வோம். இன்றைய நிலையில் ஜே.வில்சன், பெரியார் பாலா, இ.அந்தோணி, அ.கண்ணன், அய்.செல்வராஜ், மு.கணேசன், கோ.ஆசைத் தம்பி, சோ.சவுந்தரபாண்டியன் உள்ளிட்ட பல தோழர்களும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்.
திராவிடர் கழகச் செயல்பாட்டிற்கு மும்பையில் எதிர்ப்பு இருந்திருக்கிறதா?
சில நேரங்களில் எதிர்ப்புகள் வரும். எனினும் நமது அணுகுமுறை, பழக்க வழக்கங்கள், எதையும் உரிய அனுமதியோடு செய்வது, அனைவருடனும் நட்புடன் இருப்பது ஆகியவற்றால் நமக்கு ஆதரவு நிலைதான் அதிகம் இருக்கும். 2003ஆம் ஆண்டு மும்பையில் தந்தை பெரியார் சதுக்கம் நிறுவ முயற்சி செய்தோம். தொடக்கத்தில் கொஞ்சம் எதிர்ப்புகள் வந்தன. ஆசிரியர் அவர்களின் ஆலோசனையின் பேரில் அதை முழுமையாக நிறுவி, தாராவி நாடாளுமன்ற உறுப்பினர் ஏக்நாத் கெய்க்வாட் அவர்களை வைத்துத் திறப்பு விழா நடத்தினோம். தவிர மகாராட்டிரா மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளோம். திராவிடர் கழகத்தின் கழகப் பேச்சாளர்களில் பெரும்பான்மையோர் மும்பை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளனர்.
ஆசிரியர் அவர்கள் குறித்த நினைவுகளைக் கூறுங்கள்?
முன்பே கூறியதைப் போல எனது 22ஆவது வயதில் தொடங்கி, 56 ஆண்டு காலமாக ஆசிரியரின் தலைமையின் கீழ் பணியாற்றி வருகிறேன். எவ்வளவோ அடுக்கடுக்கான நிகழ்வுகள் மனதில் இருக்கின்றன. உலக நாத்திகர்கள் மாநாடு 1999ஆம் ஆண்டு, நான்கு நாட்கள் மும்பையில் நடைபெற்றது. அப்போது ஆசிரியர் அவர்கள், எங்கள் இல்லத்திற்கு அருகிலேயே தங்கியிருந்தார்கள். எனது தந்தையாருடன் அனைத்து செயல்களிலும் நானும் கூடவே இருப்பேன்.
ஒருமுறை ஆசிரியர் அவர்களும், மோகனா அம்மையாரும் மும்பைக்கு வந்திருந்தனர். நிகழ்ச்சி முடிந்ததும் இரவு உணவு கொடுக்கப்பட்டது. அடுத்த நாள் காலையில் சிற்றுண்டி கொடுக்க அறைக்குப் போனோம். அப்போது முதல் நாள் உணவு (சோறு) கூடுதலாக இருந்தது. அதில் தண்ணீர் ஊற்றி வைத்துள்ளோம். அதையே காலை உணவாகச் சாப்பிட்டுக் கொள்கிறோம் என்று கூறினார்கள். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பின்னாளில் நான் சிக்கனமாக வாழ்வதற்கு, அந்த நிகழ்வே முக்கியக் காரணமாக அமைந்தது.
அதேபோல ஆசிரியர் அவர்களுக்கு நான்கு நாட்களுக்கும் வாகனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்தோம். அதன் ஓட்டுநராகத் தமிழர் ஒருவர் வந்திருந்தார். இறுதி நாளில் விமான நிலையத்தில் வழியனுப்பும் போது ஆசிரியர் அவர்கள் வணக்கம் கூறி, அந்த ஓட்டுநருக்குப் பணம் கொடுத்தார். அப்போது அந்த ஓட்டுநர் நெகிழ்ந்து போய், எவ்வளவோ பேருக்கு நான் வாகனம் ஓட்டி இருக்கிறேன். உங்கள் தலைவரிடம் போல அன்பும், பணிவும், மரியாதையும் நான் பெற்றதே இல்லை என்றார். அதன் பிறகான திராவிடர் கழகக் கூட்டங்களில் அவரும் தொடர்ந்து கலந்து கொண்டார்.
இப்போது திராவிடர் கழகச் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன?
ஆசிரியரின் வேகத்திற்கு முன்னால் நம்மால் ஓடமுடியவில்லை. நேற்றைய தினம் சென்னை என்றால், இன்றைய தினம் திருநெல்வேலி. வயது 93 என்றாலும் அனைத்துப் பணிகளையும் ஆசிரியரே செய்து வருகிறார். உலகளவில் பெரியார் கொள்கைகள் சென்றுவிட்டன. பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ தமிழர் தலைவரின் பணிகள் அளப்பரியன. தந்தை பெரியாருக்குப் பின் இந்த இயக்கம் இருக்குமா என நினைத்தவர்கள் ஏராளம். ஆனால் இன்றைக்கு இளைஞர்களும், மாணவர்களும் திராவிடர் கழகம் நோக்கி வருவதைப் பார்க்கும் போது நெகிழ்ச்சியாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் தங்களின் இயக்க நடவடிக்கைகள் எப்படி இருக்கிறது?
2008ஆம் ஆண்டு தமிழ்நாடு வந்த புதிதில், அனைத்து ஊர்களுக்கும் சென்று வந்தேன். இப்போது பயணங்கள் சற்றுக் குறைந்துவிட்டன. மாவட்ட அளவிலான அனைத்து நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு வருகிறேன். போராட்டங்களிலும் பங்கேற்று இரண்டு, மூன்று முறை சிறை சென்றுள்ளேன். எனது இணையர் மாவட்ட மகளிரணி செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார். எனது தந்தையார் காலத்தில் இருந்தே பெரியார் கொள்கைகள், எங்களின் வாழ்க்கை நெறியாக இருந்து வருகிறது. மும்பையின் இயக்க வளர்ச்சிக்கு ஏராளமான பெரியார் பெருந்தொண்டர்கள் அடித்தளமாக இருந்து, இன்றைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்கள்” என ம.தயாளன் கூறினார்.
