சென்னை, செப் 06 தமிழ் நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு படக்கருவி பதிவுகள் எவ்வளவு காலம் பராமரிக்கப்படும் என்பது குறித்து விளக்கமளித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ் நாடு காவல்துறை தலைமை இயக்கு நருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம் வடக்கு மல்லியக்கரையைச் சேர்ந்த சக்திவேல் என்பவரிடம், ரேசன் அரிசி கடத்த அனுமதி தருவதற்காக ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சேலம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை ஆய்வாளர் ராமராஜன், உதவி ஆய்வாளர்கள் சரவணகுமார், ராமகிருஷ்ணன் ஆகியோர் மீது சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் உண்மையை வெளிக்கொண்டு வர, தனது மற்றும் தனது தாயாரின் கைப்பேசி உரையாடல் பதிவு களையும், சேலம் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலக கண்காணிப்பு படக்கருவி கேமரா பதிவுக ளையும் பாதுகாத்து வைக்க உத்த ரவிடக்கோரி உதவி ஆய்வாளர் சரவணகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், “அலுவலகத்தில் 15 நாட்களுக்கான CCTV பதிவுகள் மட்டுமே உள்ளன” எனத் தெரி வித்தார்.
இதற்கு மனுதாரர் தரப்பில், “காவல் நிலைய கண்காணிப்பு படக்கருவி பதிவுகளை 18 மாதங் களுக்கு பாதுகாக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக, 15 நாட்களுக்கான பதிவுகள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளது சட்டவிரோதமானது” என வாதிடப்பட்டது.
18 மாதங்களுக்குப் பதிலாக 15 நாட்களுக்கான கண்காணிப்பு படக்கருவி பதிவுகள் மட்டும் பராமரிக்கப்படுவது ஏன்? தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் கண்காணிப்பு படக்கருவி பதிவுகள் எவ்வளவு காலத்திற்கு பராமரிக்கப்படும்? என்பது குறித்து விளக்கமளித்து தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக் கின் விசாரணையை செப்டம்பர் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
