பள்ளி விடுதியில் ‘பேய்’ என பரவிய வதந்தியையடுத்து இரவு முழுவதும் மாணவிகளுடன் தங்கிய மாவட்ட ஆட்சியர்!

இணையவழி கையெழுத்து இயக்கம்

மும்பை, செப்.6- அரசுப் பள்ளி விடுதியில் பேய் இருப்பதாக வதந்தி பரவிய நிலையில், மாணவிகளின் பயத்தைப் போக்க மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் இரவு முழுவதும் விடுதியில் தங்கினர்.

மகாராட்டிரத்தின் அமராவதி மாவட்டத்தில் உள்ள டோமா கிராமத்தில் அமைந்துள்ள அரசு பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளியில் ஒரு விநோத சம்பவம் நடைபெற்றது.

அப்பள்ளியின் பெண்கள் விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் சிலருக்குச் சில வாரங்களுக்கு முன் பேய் பிடித்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அந்த விடுதியில் பேய் இருப்பதாக மாணவிகள் இடையே வதந்தி பரவிய நிலையில், விடுதியில் தங்கியிருந்த மாணவிகளில் 850 பேரில் 610 பேர் தங்களின் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து, அரசு மற்றும் பள்ளி நிர்வாகம் சார்பில் விடுதியில் சோதனை நடத்தப் பட்டது. அதில், விடுதியில் பேய் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும், மாணவிகளுக்கு ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் பயம் காரணமாக அவர்கள் அவ்வாறு நடந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், சோதனை நடத்திய பின்னரும் கிட்டத்தட்ட 350 மாண விகள் விடுதிக்குத் திரும்பவில்லை. விழாக்கால விடுமுறைகள் காரணமாக அவர்கள் வராமல் இருக்க வாய்ப்புள்ளதாகப் பள்ளி நிர்வாகம் தெரிவித்தாலும், பேய் பயம் காரணமாகவே அவர்கள் விடுதிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால், மாணவிகளின் பயத்தைப் போக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. இதன்படி, அமராவதி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் யேரேகர், காவல்துறை கண்காணிப்பாளர் நிகேதன் கதம், மாவட்ட பஞ்சாயத்து தலைமை நிர்வாக அதிகாரி சத்யம் காந்தி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் அப்பள்ளியின் விடுதிக்குச் சென்று மாணவர்களுடன் இரவு முழுவதும் தங்கியிருந்தனர்.

மாணவிகளுடன் ஒன்றாக இரவு உணவு உண்ட அதிகாரிகள், அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக அவர்களுடன் கலந்துரை யாடினார்.

மாணவிகளுடன் பேசிய மாவட்ட ஆட்சியர் யேரேகர், “நான் சிறுவயதில் மாவட்ட ஆட்சியர் ஒருவரைப் பார்த்து அவரைப் போன்று ஆகவேண்டும் என்று முடிவு செய்தேன்.

இப்போது நான் அதை சாதித்துக் காட்டியுள்ளேன். முயற்சி செய்தால் நீங்களும் எங்களைப் போன்ற நிலைக்கு வர முடியும். பழங்குடியினர் சமூகம் பேய்களுக்குப் பயப்படுவர்கள் அல்ல.

காடுகளில் புலிகளையும் கரடிகளையும் எதிர்த்துப் போராடிய சமூகமான நீங்கள் பிர்சா முண்டா, தாந்தியா பில் போன்றோரின் வழித்தோன்றல்கள். உங்கள் வாழ்க்கைக்குள் மூடநம்பிக்கையை அனுமதிக்காதீர்கள். அறிவியலையும், கல்வியையும் உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள்” என்று அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்வால் மாணவிகளின் பயம் முற்றிலுமாக நீங்கியதுடன், மாணவிகள் அதிகாரிகளிடம் தங்களது சந்தேகங்களையும் கேட்டறிந்து கொண்டனர். மேலும், மாணவிகள் தங்குமிடத்தில் உள்ள நெருக்கடியைக் குறைக்கும் விதமாகப் புதிதாகக் கட்டப்பட்ட விடுதியையும் அதிகாரிகள் திறந்து வைத்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *