அனிதா நினைவேந்தல் நிகழ்வில் ‘இனமுரசு’ சத்யராஜ் முழக்கம்!
சென்னை, செப்.6 சமூகநீதிக்காகவும், உரிமைக்காகவும் குரல் எழுப்பப்படும்போது, தடைக்கற்கள் வீசப்பட்டால், அதற்கு அடைக்கலமாக எங்கள் பெரியார் திடல் இருக்கிறது என்றார் ‘இனமுரசு’ சத்யராஜ்.
நீட் தேர்வின் கொடூரத்திற்குத் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட அனிதாவின் 9 ஆம் ஆண்டு நினைவுநாளான கடந்த 1.9.2026 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் மாணவர் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் ‘இனமுரசு’ சத்யராஜ் உரையாற்றினார்.
அவரது நினைவேந்தல் உரை வருமாறு:
எங்கள் ஆசிரியர் அய்யா வீரமணி அவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தலைவர்களுக்கும், மாணவர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் என்னுடைய வணக்கத்தை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். அனிதாவிற்கு என்னுடைய வீர வணக்கத்தை செலுத்திக் கொள்கிறேன்.
கல்வி மாநில அரசின் உரிமையாக
இருக்கவேண்டும்!
இருக்கவேண்டும்!
நீட் என்பது நிச்சயமாக ஒழிக்கப்படவேண்டும். கல்வி என்பது மாநில அரசின் உரிமையாக இருக்கவேண்டும் என்பது நியாயமான ஒரு நேர்மையான விசயமாகும்.
பிளஸ் டூ தேர்வில் 1200 மதிப்பெண்ணுக்கு, 1176 மதிப்பெண் வாங்கியும், அனிதாவிற்கு மருத்துவப் படிப்பிற்கு இடம் கிடைக்காமல், தன்னுயிரையே மாய்த்துக் கொண்டிருக்கிறார்.
ஒரு சமூகம் என்பதும், ஓர் அரசாங்கம் என்பதும், மேலே இருக்கும் மக்களை, மேலும் மேலும் மேலே கொண்டு செல்வதற்காக அல்ல. கீழே உள்ள மக்களை, கைகொடுத்துத் தூக்கி, சமமாகக் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்பதுதான் அரசாங்கத்தின் கடமை; சமூகத்தின் கடமை. அதை நோக்கித்தான் செயல்பட வேண்டும்.
பெரியார் மண் போராடிக் கொண்டிருக்கிறது!
இட ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து சமூக நீதிச் சட்டங்களும் அதற்காகத்தான் இருக்கின்றன. அதற்காகத்தான் இந்தப் பெரியார் மண் போராடிக் கொண்டிருக்கிறது.
சமூகநீதிக்காகவும், உரிமைக்காகவும் குரல் எழுப்பப்படும்போது, தடைக்கற்கள் எங்கு வீசப்பட்டா லும், அதற்கு அடைக்கலமாக எங்கள் பெரியார் திடல் இருக்கிறது என்பதை, ஆசிரியர் அவர்கள் தலைமையில், அதை நிரூபித்து விட்டார்கள்.
எங்களுக்கு ஓர் இடம் நிரந்தரமாக இருக்கிறது!
ஆகவே, அனைவருக்கும் இதன்மூலம் ஒரு செய்தி என்னவென்றால், எங்களுக்கு ஓர் இடம் நிரந்தரமாக இருக்கிறது. நீங்கள், எங்கு தடை விதித்தாலும், இங்கு நாங்கள் வந்து, எங்களுடைய கோரிக்கையையும், எங்களுடைய நியாயத்தையும் எடுத்துச் சொல்லி, எங்களுக்கான நீதியைக் கேட்போம் என்று கூறி, அனைவருக்கும் நன்றி கூறி, விடைபெறுகிறேன்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு இனமுரசு சத்யராஜ் அவர்கள் நினைவேந்தல் உரையாற்றினார்.
