மாணவர்களுக்கு பயந்து உலகத்திலேயே கடற்கரைக்கு பூட்டு போட்ட ஒரே அரசு த.வெ.க. அரசுதான்! உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப். 5- மாணவர்களுக்கு பயந்து உலகத்திலேயே கடற்கரைக்கு பூட்டு போட்ட ஒரே அரசு தவெக அரசுதான் என்று உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசினார்.

சட்டப்பேரவையில் 3.8.2026 அன்று காவல் துறை மீதான மானிய விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: நீட் தேர்வுக்கு எதிராக இந்தியா முழுவதிலும் உள்ள மாணவர்கள் போராடினார்கள். சென்னை மெரினாவில், அந்த போராட்டத்தை நடத்த தவெக அரசு அனுமதி கொடுக்கவில்லை. மாணவர்களுக்கு பயந்து உலகத்திலேயே கடற்கரைக்கு பூட்டு போட்ட ஒரே அரசு தவெக அரசுதான்.

உயர்கல்வி துறை சார்பாக அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார்கள். அதில், ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி, இடதுசாரி அமைப்புகள் நடத்துகின்ற போராட்டங்களுக்கு மாணவர்களை அனுப்பக் கூடாது. அப்படி அனுப்பினால், கல்லூரி மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் அந்த போராட்டத்தில் கலந்துகொண்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அந்த சுற்றறிக்கையில் சொல்லியிருக்கிறார்கள். இந்த அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கிற இடதுசாரி தோழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த பிறகு, அந்த சுற்றறிக்கையை திரும்பப் பெற்றுக்கொண்டார்கள்.

தலைமைச் செயலாளரும், டி.ஜி.பி.யும்தான் இதற்கெல்லாம் காரணம் என்று ஆளுங்கட்சியின் கூட்டணி கட்சியினரே வெளிப்படையாக சொல்கிறார்கள். அப்படியானால், இதெல்லாம் முதலமைச்சருக்கு தெரிந்து நடக்கிறதா, தெரியாமல் நடக்கிறதா என்கின்ற கேள்வியை இந்த அரசுக்கு நாங்கள் வைக்க விரும்புகிறோம். நாங்கள் போதைப்பொருள் ஒழிப்பை சரியாகச் செய்யவில்லை என்றால், மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் அதிகாரிகளாக அன்று செயல்பட்ட மகேஷ்குமார் அகர்வாலை நீங்கள் ஏன் இன்றைக்கு பதவி உயர்வு செய்து தமிழ்நாட்டினுடைய டிஜிபியாக பொறுப்பை கொடுத்திருக்கிறீர்கள் என்ற கேள்வியை வைக்கிறேன்.

எங்களுடைய ஆட்சி காலத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக் கைகளை மேற்கொண்ட அமல்ராஜை இன்றைக்கு ஏன் பதவி உயர்வு செய்து, சென்னை மாநகர காவல் ஆணையராக வைத்திருக்கிறீர்கள் என்ற கேள்வியையும் இந்த அரசிடம் நான் வைக்கிறேன்.

குட்டிக்கதை சொல்லாமல் முதலமைச்சர் நேரடியாக பதில் சொல்ல வேண்டும்!

‘‘சட்டம் ஒழுங்கு தொடர்பாக காவல்துறை சம்பந்தமாக இந்த கூட்டத்தொடரில் கடந்த 15 நாட்களில், நான் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் பல கேள்விகளை எழுப்பி யிருக்கிறோம். ஆனால், இதுவரைக்கும் எந்த கேள்விக்கும் முதலமைச்சர் எழுந்திருந்து பதில் சொல்லவே இல்லை. கேள்வியை கேட்டுப் பதில் வாங்கும் கடமை எங்களுடையது. வெறும் ‘ரீல்ஸ்’ கருத்தாக இல்லாமல், லாஜிக்கே இல்லாத குட்டிக் கதைகள் சொல்லாமல், மக்களுடைய கேள்விகளுக்கு, எங்களு டைய கேள்விகளுக்கு முதலமைச்சர் நேரடியாக பதில் சொல்ல வேண்டும். வழக்கமாக தொலைக்காட்சி தொடரில் நடித்துக்கொண்டிருக்கிற ஓர் கலைஞரின் காலம் முடிந்துவிட்டால், அல்லது வேறு தொடருக்கு போய்விட்டால், தலைப்பு செய்தியாக மக்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக `இவருக்கு பதிலாக இவர் வருவார்’ என்று போட்டுவிடுவார்கள். அதுபோல, இந்த அரசில் எந்த கேள்வி கேட்டாலும், வேளாண் துறை அமைச்சருக்கு பதிலாக விளையாட்டு துறை அமைச்சர், சுற்றுச்சூழல் துறை அமைச்சருக்கு பதிலாக மின்சாரத் துறை அமைச்சர் பதில் சொல்கிறார்கள்” என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

டிஜிபி நியமனத்தில் தாமதம் ஏன்?

டி.ஜி.பி நியமனத்தில் எதற்காக தாமதம் ஏற்பட்டது, ஏன் பொறுப்பு டி.ஜி.பி. போட்டிருந்தீர்கள் என்று அமைச்சர் ஆதவ் கேட்கிறார். எங்கள் ஆட்சியில் டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் ஓய்வு பெற்ற பிறகு, டிஜிபி நியமனத்திற்காக எங்களுடைய திமுக அரசு சார்பாக, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு (UPSC) ஒரு பட்டியலை தேர்வு செய்து அனுப்பியிருந்தோம். அப்போது மாநில அரசுக்கும், யுபிஎஸ்சிக்கும், டிஜிபி தேர்வு குழுவில் யார் யார் இடம் பெற வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்து இருந்தது. தமிழ்நாட்டிற்கான டிஜிபி-யை நியமிப்பதில் யுபிஎஸ்சியினுடைய பங்கு, அதாவது ஒன்றிய அரசினுடைய தலையீடு அதிகமாக இருக்கிறது என்று எங்களுடைய அரசு அன்று கருதியது.

இது மாநில உரிமைகளுக்கு எதிரானது. சட்டம் ஒழுங்கு என்பது மாநில அரசினுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது. மாநில அரசுக்கு ஏற்ற அதிகாரியை டிஜிபியாக பணியமர்த்தினால்தான் அரசோடு சேர்ந்து ஒன்றிணைந்து செயல்பட முடியும், சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியும் என்று எங்களுடைய முதலமைச்சர் அன்று அந்த முடிவை எடுத்தார்.

திமுக அரசு அதை எதிர்த்து நீதிமன்றத்திற்கும் சென்று வழக்கு போட்டது.இதற்கிடையே மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படக் கூடாது என்பதால், பொறுப்பு டி.ஜி.பி-அய் அன்று எங்களுடைய முதலமைச்சர் நியமனம் செய்தார். அவர் உடல்நிலை சரியில்லை என்று விடுப்பில் சென்றதால், மூத்த அய்பிஎஸ் அதிகாரியான அபய்குமார் சிங் டி.ஜி.பியாக நியமித்தோம். இதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறது. சட்டத்திற்கு உட்பட்டுத்தான் எங்கள் தலைவர், இதை செய்திருக்கிறார். இதில் எந்த சட்ட விரோதமும் கிடையாது என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *