நேபாள வெள்ளம்: காணாமல் போன தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஒன்றிய, மாநில அரசுகள் அறிக்கை தர சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப்.3  நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போன தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த வழக்குரைஞர் பர்வேஷ் முஷ்ரப் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். பின்னர் இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கும்பகோணத்தைச் சேர்ந்த ‘சூப்பர் யாத்ரா டிராவல்ஸ்’ என்ற தனியார் நிறுவனம் மூலமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 57 பேர் கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி நேபாளத்திற்குப் பயணமானார்கள். ஆகஸ்ட் 26-ஆம் தேதி நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் இவர்கள் சிக்கிக்கொண்டனர்.

இதில் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சிவஞானம் உள்ளிட்ட பலர் காணாமல் போயுள்ளனர். எனவே, நேபாளம் சென்ற 57 பேரில் மீட்கப் பட்டவர்கள், சிகிச்சையில் உள்ளவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் குறித்த விவரங்களை அவர்களது குடும்பத்தினருக்குத் தெரிவிக்க வேண்டும்; மீட்புப் பணிகளை விரைவுபடுத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் வாதாடுகையில்:

“தமிழ்நாட்டில் இருந்து நேபாளத்திற்கு பயணம் சென்ற மொத்தம் 305 பேரில், இதுவரை 220 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 85 பேரையும் மீட்பதற்கான தீவிர நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், ஓய்வுபெற்ற நீதிபதி சிவஞானம் உள்ளிட்ட காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் அரசுச் செலவிலேயே காட்மாண்டுவிற்கு அழைத்துச் செல்லப் பட்டுள்ளனர்,” என்று தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்களை மீட்க எடுக்கப் பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்திற்குத் தள்ளிவைத்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *