இந்நாள் – அந்நாள்

இணையவழி கையெழுத்து இயக்கம்

தம்மம்பட்டியில் மதவெறி ஆர்.எஸ்.எஸ். நடத்திய கொலை வெறித் தாக்குதலுக்குப் பிறகு ஒன்றே கால் மணி நேரம் ஆசிரியர் அவர்கள் உரையாற்றிய நாள் இன்று (28-08-1987)

 

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த தம்மம் பட்டியில் 28.8.1987 அன்று இரவு  பொதுக்கூட்டமும், மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தம்மம்பட்டியைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ்., ஹிந்து முன்னணிக்காரர்கள் 27.8.1987 மாலை தம்மம்பட்டி காவல் நிலையத்திற்குச் சென்று ‘திராவிடர் கழகத்தினர் பொதுக்கூட்டமும், ஊர்வலமும் நடத்தக் கூடாது – அனுமதிக்கக் கூடாது’ என்று சொல்லியும் உள்ளனர். இதனைக் காவல்துறை மறுத்து ‘‘திராவிடர் கழகத்தினர் முறையான அனுமதி பெற்றுத்தான் ஊர்வலமும் பொதுக்கூட்டமும் நடத்துகிறார்கள். அவற்றை தடை செய்ய முடியாது’’ என்று  கூறியுள்ளனர்.

இதைக்கேட்ட ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணிக்காரர்கள் அடியாட்களைத் தயார் செய்து கொண்டு வந்து மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தின் உள்ளே புகுந்து பொதுமக்களைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்த வன்முறை மாலை 6.30 மணி அளவில் நடைபெற்றது. ஊர்வலத்தில் கலந்துகொண்ட கழகத் தோழர் களும் கடுமையாகத் தாக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஆத்தூர் அரசினர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். பொதுக்கூட்ட மேடையைத் ‘தீ’ வைத்து எரித்தனர்.

இதற்கிடையில் ஆத்தூரிலிருந்து கார் மூலம் பதிவு எண் (எம்.எஸ் எம்.1751) புறப்பட்டு தம்மம்பட்டி பொதுக் கூட்டத்திற்கு வந்து கொண்டிருந்தார் திராவிடர் கழகத்  தலைவர்  ஆசிரியர் கி. வீரமணி. அவருடன் தோழர்கள் நால்வரும் பயணம் செய்தனர்.

6.45 மணிக்கு உடையார்பாளையம் முதன்மைச் சாலையிலுள்ள பாலத்தருகே வந்தபோது ஒரு கும்பல் திடீரென்று அந்த வாகனத்தை  சூழ்ந்துகொண்டு  கடுமையான ஆயுதங்களாலும், கற்களாலும் தாக்கினார்கள். “அடி! கொல்லு!’’ என்று ஆவேசமாகச் சத்தம் போட்டுக் கொண்டு கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு குறி வைத்துத் தாக்கினர். துரத்தி வந்து வாகனத்தை  அடித்து நொறுக்கினார்கள்.

ஓட்டுநர் வெகு சாமர்த்தியமாக வண்டியைப் பின்னாலே கொண்டு வந்து திருப்பி வெகு விரைவாக தம்மம்பட்டி காவல் நிலையத்திற்கு முன் கொண்டு வந்து நிறுத்திவிட்டார். அன்று ஓட்டுநரின் சாமர்த்தியம்தான்  ஆர்.எஸ்.எஸ். காலிகளிடமிருந்து தமிழர் தலைவர் ஆசிரியரை மயிரிழையில் உயிர் தப்பிக்க வைத்தது.

காவல் நிலையத்தில் சேலம் மாவட்ட தி.க. துணைத் தலைவர் ஆத்தூர் முருகேசனும், தம்மம்பட்டியைச் சேர்ந்த தோழர் செயராமனும் புகார் கொடுத்தனர்.

ஊரில் பதட்டநிலையும், பரபரப்பும் ஏற்பட்டது. ‘‘எப்படியும் பொதுக் கூட்டத்தில் பேசிவிட்டுத்தான் இந்த ஊரை விட்டுப் புறப்படுவேன். மேடை இல்லாவிட்டாலும் ஒலிபெருக்கி இல்லாவிட்டாலும் பேசி விட்டுத்தான் செல்வேன்’ என்று உறுதியோடு இருந்து மிகத் திரளாக கூடியிருந்த பொது மக்களிடையே 75 நிமிடம் உரையாற்றிவிட்டு அங்கிருந்து 11.45 மணிக்கு பொதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு புறப்பட்டார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.

இது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மீது நடத்தப் பெற்ற மூன்றாவது கொலை வெறித் தாக்குதல் ஆகும். அதற்குப் பிறகும் பல முறை இப்படியான தாக்குதல்கள் நடத்தப்பட்ட துண்டு.

அனைத்தையும் எதிர் கொண்டு தான் பகுத்தறிவுப் பேராசான் தந்தை பெரியார் அவர்கள் விட்டுச் சென்ற பணிகளை, அவர் போட்டுத் தந்த “ஈரோட்டுப் பாதை” யில் எவ்விதச் சபலங்களுக்கும் ஆளாகாமல் செய்து முடிப்போம் என்று தாம் ஏற்றுக் கொண்ட கொள்கை உறுதி மொழியில் இருந்து சிறிதும் வழுவாமல் வீறு நடையுடன் அவரது பகுத்தறிவுப் பிரச்சாரப் பயணம் இன்றும் “பெரியார் உலகை” நோக்கி  தொடர்கிறது!

 

திராவிட மொழிகளின் ஆய்வாளர் இராபர்ட் கால்டுவெல் நினைவு நாள் இன்று (28.8.1891)

இந்நாள் - அந்நாள்

தமிழ் கூறும் நல்லுலகம், மத வாதிகளின் பிடியில் சிக்கி சிறுமைப் படுத்தப்பட்டுக்கொண்டு இருந்த காலத்தில் தமிழ் உலகின் பழைமையான மொழி மட்டுமல்ல. திராவிடமொழிகளின் தாய் என்று ஆய்வுகள் மூலம் உறுதி செய்து திராவிட மொழிகளின் ஒப்பிலக் கணம் தந்த ஒப்பற்ற மேதை. ராபர்ட் கால்டுவெல் நினைவு நாள் இன்று!

திராவிட மொழிகளின் ஒப் பிலக்கணம் இங்கிலாந்தில் வெளியிடப்பட்ட பிறகுதான், தமிழ் என்பது ‘திராவிடம்’ என்ற ஒரு மொழிக் குடும்பத்தின் தாய் என்பதையும் அது சமஸ்கிருதத்தின் வேரில் இருந்து முற்றிலும் வேறுபட்டது என்பதையும், சமஸ்கிருதத்தின் உதவியின்றி அது தனித்து இயங்கும் வல்லமை கொண்டது என்பதையும் அய்ரோப்பிய அறிவுலகம் அறிந்து  ஏற்றது.

ராபர்ட் கால்டுவெல் 1814 மே மாதம் ஏழாம் தேதி அயர்லாந்தில் பிறந்தார். 24 வயதில் கப்பலேறி இந்தியாவிற்கு வந்தார். சென்னையில் இருந்து சிதம்பரம், மயிலாடுதுறை, தரங்கம்பாடி, கும்பகோணம், சிறீரங்கம், நீலகிரி, கோவை, மதுரை, பாளையங் கோட்டை, நாசரேத் இப்படி எல்லா ஊர்களையும் நடந்தே கடந்து இடையன்குடி என்ற ஊரில் தங்கினார்.

1838 ஜனவரி எட்டாம் தேதி சென்னைக்கு வந்த கப்பலில் பயணித்த போது ஏற்பட்ட சூறைக் காற்றால் இன் னொரு கப்பலுடன் மோதி மூழ்கியதில், கப்பலில் இருந்த 6 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். அதில் ஒருவர்தான் ராபர்ட் கால்டுவெல்.

1841 இல் திருநெல்வேலி சென்று அங்கேயே இடையன்குடியில் தங்கி 50 ஆண்டுகள், தமிழ்ப் பணியாற்றினார். திராவிட மொழிக் குடும்பத்தைத் திருந்திய மொழிகளென்றும் திருந்தா மொழிகளென்றும் இரண்டாகப் பிரிக்கிறார் ஆய்வாளர் கால்டுவெல்.

தமிழ் – மலையாளம் – தெலுங்கு – கன்னடம் – துளு – குடகு ஆகிய ஆறும் திருந்திய மொழிகளென்றும், துதம் – கோதம் – கோண்ட் – கூ – ஓரியன் – ராஜ்மகால் ஆகிய ஆறும் திருந்தா மொழிகளென்றும் ஆய்ந்து அறிவிக்கிறார். சமஸ்கிருதத்திலிருந்தே திராவிட மொழிகள் பிறந்தன எனும் கூற்று உண்மைக்குப் புறம்பானதென்பதைத் திருந்தா மொழிகளைக் கொண்டே தீர்ப்பளிக்கிறார்.

“திராவிட மொழிகளைச்  சமஸ்கிருதத்திலிருந்து பிறந்தனவாகவே கொள்ளுதல் வேண்டும் என்று கூறும் கீழைநாட்டு மொழிநூலறிஞர்கள், சமஸ்கிருதச் சொற்கள் அறவே இடம்பெறாதனவாய் திராவிட மொழிகள் இருப்பதை அறிந்தவரல்லர்.

சமஸ்கிருதச் சொற்களை மேற்கொள்ளும் திராவிட மொழிகளும் அச்சொற்களை ஆடம்பரப் பொருளாகவும், அழகுதரும் பொருளாகவும் மதிப்பதல்லது மொழி வளர்ச்சிக்கு இன்றியமை யாதனவென்று மதிப்பதில்லை.” திராவிட மொழிகளின் ‘ஒப்பிலக்கணம் முதல் பாகத்தில் கால்டுவெல் கூறும் கட்டியம் இது. இந்தக் கருத்தை வெறுப்பாருண்டு; மறுப்பாரில்லை.

சமயப் பணி ஆற்ற வந்த கால்டுவெல் தமிழ்ப் பணியும் ஆற்றி, தமிழின் சிறப்பை திராவிட மொழி களின் தனித்துவத்தை உலகறியச் செய்தவர் ஆவார்.

அவருடைய   நினைவு நாளில் நன்றியுடன் நினைவு கூர்ந்து போற்றுவோம்!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *