புதுச்சேரி, ஆக. 28- புதுச்சேரி மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் வே. அன்பரசன், சாந்தி அன்பரசன் ஆகியோரின் இளைய மகன் அ.இளஞ்செழியன், புதுச்சேரி, சாரம் கோ. புருஷோத்தமன், பு.சரஸ்வதி ஆகியோரின் மகள் பு.கீர்த்தனா ஆகியோரின் வாழ்க்கை இணை நலன் ஏற்பு விழா 23-08-2026 அன்று காலை 8:30 மணியளவில் புதுச்சேரி, கடலூர் சாலை புனித அந்தோணியார் மகலில் சிறப்பாக நடைபெற்றது.
புதுச்சேரி மாநிலத் திராவிடர் கழகத் தலைவர் சிவ. வீரமணி தலைமையில் திருமதி .அறச்செல்வி கணபதி வரவேற்புரை ஆற்றினார். புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர். வி. முத்து திராவிடர் கழகச் செயலவைத் தலைவர் வழக்குரைஞர் வீரமர்த்தினி ஆகியோர் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினர்.
திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் மணமக்களுக்கு வாழ்த்துகள் கூறி அவர்களுக்கு இணை ஏற்பு உறுதி மொழி செய்து வைத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.
திருமண விழாவில் புதுச்சேரி மாநில முதலமைச்சர் ந.ரங்கசாமி மேனாள் முதலமைச்சர் வே. நாராயணசாமி, புதுச்சேரி திராவிட முன்னேற்றக் கழக மாநில அமைப்பாளர் இரா.சிவா, தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.செந்தில்குமார், வெ.கார்த்திகேயன் என்.ஆர். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் நேயம் மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் கோ.நேரு பாஜக முதலியார் பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஜான் குமார் சார்பில் அவருடைய மகன் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் ரிச்சர்டு ஜான் குமார், புதுச்சேரி மேனாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.பாஸ்கர், தட்சிணாமூர்த்தி, செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும், புதுச்சேரி மாநிலத்திலுள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், நண்பர்கள், சமூக நல இயக்கங்களை சேர்ந்த பொறுப்பாளர்கள், வியாபார நண்பர்கள் மற்றும் உறவினர்கள் எனப் பெருந்திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி சிறப்பித்தனர். வந்திருந்த அனைவருக்கும் பயனாடைகள் அணிவிக்கப்பட்டு, அறுசுவை விருந்துடன் மணவிழா இனிதே நடைப்பெற்றது.
நிறைவாக திருவாளர்கள் வே.அன்பரசன், சாந்தி குடும்பத்தினர் சார்பில் மூத்த மருமகள் செல்வி மதியரசன் நன்றி கூறினார்.
முன்னதாக திருமண மண்டபத்தின் வாசலில் பலவகையான பதாகைகள் மற்றும் வழிநெடுக இருபுறமும் கழகக் கொடிகள் பட்டொளி வீசி பறந்தன.
