அகமதாபாத், ஆக. 28- குஜராத் மாநிலம் அகம தாபாத்தில் உள்ள ஆனந்த் நிகேதன் பள்ளி நூலகத்தில், உலகப் புகழ்பெற்ற ஆன் பிராங்கின் ‘ஒரு இளம் பெண்ணின் டைரி’ மற்றும் மலாலா யூசுப்சாயின் ‘ஐ அம் மலாலா’ ஆகிய புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இப்புத்தகங்கள் நூலகத்தில் இருந்ததற்காக, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் அப்பள்ளி நிர்வாகத்திற்கு ரூ.10,000 அபராதம் விதித்துள்ளனர். அத்துடன், பள்ளிக்கு அரசு வழங்கி வந்த அனைத்து உதவிகளையும் உடனடி யாக நிறுத்தி உத்தரவிட்டுள்ளனர்.
கல்வித்துறை அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அகமதாபாத் நகர மக்கள் பலர் ஒன்றிணைந்து பொது இடங்களில் புத்தகங்களை வாசித்துத் தங்களது அமைதியான எதிர்ப்பைப் பதிவு செய்தனர். பூங்கா உள்ளிட்ட பொது இடங்களில் ஆங்கில நூல்களை வாசித்து மக்கள் தங்களது போராட்டத்தை முன்னெடுத்தனர்.
போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அங்கு திரண்டு வந்த பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், அங்கு வந்த காவல்துறையினரும் ஹிந்துத்துவ அமைப்பினருக்கு ஆதரவாகச் செயல்பட்டு, அமைதியான முறையில் நூல் வாசிப்பில் ஈடுபட்ட சிலரைத் தாக்கியதாகப் பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையின் இந்த நடவடிக்கை அப்பகுதியில் பெரும் அதிர்வலையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி யுள்ளது.
தமிழ்நாட்டில் 150 புதிய சமூக நீதி விடுதிகள் அமைச்சர் வன்னிஅரசு அறிவிப்பு
சென்னை, ஆக. 28- சட்டப்பேரவையில், சமூகநீதித் துறை மானிய கோரிக்கை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு அமைச்சர் வன்னிஅரசு பேசினார்.
அவர் பேசியதாவது: சத்தான உணவு வழங்கும் பொருட்டு பள்ளி சமூகநீதி விடுதி மாணவர்களுக்கு தற்போது மாதம் ஒன்றுக்கு வழங்கப்பட்டு வரும் உணவுக் கட்டணம் ரூ.1,400இல் இருந்து ரூ.1,800 ஆகவும், கல்லூரி விடுதி மாணவர்களுக்கு ரூ.1,500இல் இருந்து ரூ.2 ஆயிரம் ஆகவும் உயர்த்தப்படும். விடுதிகளின் ஆண்டு பராமரிப்புத் தொகை பள்ளி விடுதிகளுக்கு ரூ.75 ஆயிரமாகவும், கல்லூரி விடுதிகளுக்கு ரூ.1 லட்சமாகவும் உயர்த்தப்படும்.
ரூ.160 கோடி மதி்ப்பீட்டில் 150 புதிய சமூகநீதி விடுதிகள் கட்டப்படும். விடுதி நிர்வாகம் மற்றும் மாண வர் பாதுகாப்பு கண்காணிக்க ‘அரன் – விடுதி பராமரிப்பு மேலாண்மை அமைப்பு’ உருவாக்கப்படும். அனைத்து விடுதிகளிலும் ‘அம்பேத்கர் படிப்பகம்’ ஏற்படுத்தப்படும். பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒரு லட்சம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின குடும்பத் தலைவிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ‘விடிவெள்ளி – மகளிர் வாழ்வாதார திட்டம்’ செயல்படுத்தப்படும்.
தூய்மைப் பணியாளர்களுக்கு அகம் திட்டம் மூலம் 2,500 காங்கிரீட் வீடுகள் வழங்கப்படும். வீடற்ற பழங்குடியினருக்கு உறையுள் திட்டம் மூலம் 2 ஆயிரம் காங்கிரீட் வீடுகள் கட்டப்படும். தகுதியின் அடிப்படையில் 5 ஆயிரம் ஆதி திராவிடர் குடும்பங்களுக்கு காங்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினரை தொழில்முனைவோராக மாற்ற ‘ஏற்றம்’ என்ற புதிய திட்டம் ரூ.50 கோடி மதிப்பீட்டில் அறிமுகப்படுத்தப்படும்.
10 ஆயிரம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நவீன ஏய் தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்படும். ஆதிதிராவிட விவசாயிகள் மேம் பாட்டுக்காக ‘வளமிகு வேளாண்மை உதவித் திட்டம்’ மூலம் 90 சதவீத மானியத்துடன் ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும்.
பழங்குடி மக்களின் விளைபொருட்களைச் சந்தைப் படுத்த ‘முல்லை’ என்ற தனி அடையாளத்துடன்மதிப்புக் கூட்டல் அலகுகள் ரூ.12.50 கோடியில் அமைக்கப்படும். சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர்களுக்கு ‘அறிவொளி விருதுகள்’ வழங்கப்படும் என்பன உள்ளிட்ட 67 புதிய அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.
சென்னை அய்.அய்.டி.,யில் சேர்ந்து மாற்றுத்திறனாளி மாணவர் சாதனை
சென்னை, ஆக. 28- சென்னையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் சந்தோஷ், 90 சதவீத உடல் ஊனத்தை கடந்து, சென்னை அய்.அய்.டி.,யில் சேர்க்கை பெற்று சாதனை படைத்துள்ளார்.
சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்த ஜெகநாதன் – பானுப்ரியா இணையரின் மகன் சந்தோஷ், 17. முதுகுத் தண்டு வடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்.
இவர், அத்திப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில், கணினி அறிவியல் பாடப்பிரிவில் படித்து, நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில், 600க்கு 531 மதிப்பெண் பெற்று, பள்ளியில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார்.
தொடர்ந்து, சென்னை அய்.அய்.டி.,யில் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன், தேர்வுக்கு தயாராகி வந்தார். இந்நிலையில், தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு மற்றும் சென்னை அய்.அய்.டி., சார்பில் நான்கு மாத பயிற்சி பெற்றார்.
தகுதித் தேர்வில் தேர்வாகி, ஜே.இ.இ., நுழைவுத்தேர்வு இல்லாமல், சென்னை அய்.அய்.டி.,யில் நான்கு ஆண்டு பி.எஸ்., தகவல் அறிவியல் பாடப் பிரிவில் சேர்க்கை பெற்றுள்ளார்.
இதுகுறித்து, சந்தோஷின் தாய் பானுப்ரியா கூறிய தாவது: என் மகன் 90 சதவீத இயக்க குறைபாடுடைய மாற்றுத்திறனாளி. கடந்த 12 ஆண்டுகளாக நாள்தோறும பள்ளிக்கு அழைத்துச் சென்று அங்கேயே காத்திருந்து, பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு அழைத்து வருவேன்.
மாற்றுத்திறனாளி என்ற நிலையை கடந்து, பல்வேறு சாதனைகளை படைக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறோம். தற்போது, சென்னை அய்.அய்.டி.,யில் சேர அவருக்கு இடம் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.
