விழுப்புரம் ஆக. 28- ‘விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் ராயப்புதுப்பாக்கத்தில் காணப்படும் 7 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய கடல்வாழ் உயிரினங்களின் தொல்லுயிர் படிமங்களைப் பாதுகாக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
‘புவியியல் வரலாற்றில் கிரிட்டியேசியஸ் காலம் என்பது 7 கோடி முதல் 13 கோடி ஆண்டுகள் வரையிலான குறிப்பிடத்தக்க ஒன்றாகும். டைனோசர் உயிரினம் வாழ்ந்த கடைசிக் காலக்கட்டம் அது. அப்போது உலகின் பல்வேறு பகுதிகளில் கடல்கோள் எனப் படும் கடல் எழுச்சி ஏற்பட்டது.
இந்தியாவில் தமிழ்நாட்டு நிலப் பகுதியிலும் மிகப் பெரிய கடல்கோள் ஏற்பட்டுள்ளது. இதனால் புதுவைக்கு மேற்கே சுமார் 20 கி.மீ. தொலைவுக்கு அப்பால், கடல் மேலோங்கி வந்திருக்கிறது. வானூர் வட்டம் ராயப்புதுப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டப் பகுதிகள் அப்போது கடலால் சூழப் பட்டிருந்தன.
இதற்கு சாட்சியாக சிப்பி, நத்தை உள்ளிட்ட அப்போதைய கடல்வாழ் உயிரினங்களின் தொல்லுயிர் படிமங்கள், இந்த கிராமத்தில் காணப்படும் சுண்ணாம்பு பாறைகளில் படிந்துள்ளன. இவை ஷெல் லைம் ஸ்டோன் என்று ஆங்கிலத்தில் அழைக் கப்படுகின்றன. இத்தகைய பாறைகள் அரியலூர் பகுதியில் முதலில் கண்டறியப்பட்டதால், இவை அரியலூர் குழுமப் படிமங்கள் என்றும் அழைக் கப்படுகின்றன. இத்தகைய தொல்லுயிர் படிமங்கள் வரலாற்றின் அடிப்படையிலும் புவியியல் மற்றும் அறிவியல் ரீதியிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.
1840இல் ஆங்கிலேய அய்சிஎஸ் அதிகாரிகள் சி.டி.கேய், புரோக் கன்லீஃப் ஆகியோர் புதுவை சேதுராப்பட்டு பகுதியில் படிமங்களுடன் கூடிய சுண்ணாம்பு பாறைகளைக் கண்டறிந்தனர். அவை கிரிடே சியஸ் காலத்தைச் சேர்ந்தவை (7 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டவை) என்பதையும் உறுதி செய்தனர்.
தொல்லுயிர் படிமங்களுடன் கூடிய பெரிய அளவிலான சுண்ணாம்பு பாறைகள் ராயப்புதுப்பாக்கம் குளத்தில் இப்போதும் காணப்படுகின்றன. இந்தப் பாறைகளை குளக் கரைகளின் படிக்கட்டுகளாக உள்ளூர் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக இங்கு நடத்திய கள ஆய்வில் அலெக்ட் ரியோனியா, எக்ஸோ கைரா, க்ரைபியா, கேஸ்ட்ரோபோட் உள்ளிட்ட சிப்பி, நத்தை வகை படிமங்கள் மற்றும் இரும்பு தாதுக்கள் அடங்கிய தொல்லுயிர் படிமங்களைக் கண்டறிந்தோம். இவை அனைத்தும் கன்னங் குறிச்சி படிமங்களை மிக வும் ஒத்திருக்கிறது’ என புவியியலாளர் சபாரத்தினம் தெரிவித்திருக்கிறார்.
தென்னாற்க்காடு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சவுத் ஆற்க்காடு டிஸ்ட்டிரிக் மானுவல் எனும் நூல் 1878ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் கடல்வாழ் உயிரினங்களின் படிமங்களுடன் கூடிய சுண்ணாம்பு பாறைகள் வானூர் அருகே ராயப்புதுப்பாக்கத்திலும், அங்கிருந்துத் தொடங்கி வழுதாவூர் வரையிலும் பரவியிருப்பதாகத் தெரிவிக்கப் பட்டிருந்தது.
இந்தத் தகவலை ஆங்கிலேய அதிகாரிகள் உலகின் பார்வைக்குக் கொண்டு வந்து 150 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இவற்றைப் பாதுகாக்க ஒன்றிய, மாநில அரசுகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வெளிநாட்டு அறிவியல் மற்றும் புவியியலாளர்களும் நேரில் வந்து ஆய்வு செய்யும் வகையில் தொல்லுயிர் படிமப் புவியியல் பூங்கா ஒன்றை ராயப்புதுப்பாக்கம் பகுதியிலேயே அமைத்திட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாக எடுக்க வேண்டும். உள்ளூர் மக்களுக்கும் இது தொடர்பான விழிப்புணர்வை விழுப்புரம் மாவட்ட நிர்வா கம் ஏற்படுத்த வேண்டும் என்று விழுப்புரத்தைச் சேர்ந்த எழுத்தாளரும், வர லாற்று ஆய்வாளருமான கோ.செங்குட்டுவன் கேட்டுக் கொண்டுள்ளார்.
