திருநெல்வேலி, மார்ச் 8- கோயில்களில் தமிழில் குடமுழுக்குக் கூடாது என்று ஹிந்து முன்னணி, பி.ஜே.பி.யினர் கூச்சலிட்டு அமளி செய்தனர்.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத் தரவுப்படி கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக பின்பற்ற வேண்டிய வழிகாட்டி நெறி முறைகளை வரையறை செய்வதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் உறுப்பினர்களாக குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், திருக்கயிலாய மரபுவழி பேரூராதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை குமரகுருபர சுவாமிகள், மு.பெ.சத்தியவேல் முருகனார், ப.குமரலிங் கனார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் ஆன்மிகப் பேச்சாளர் சுகி சிவமும் கலந்து கொண்டார் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மண்டல அளவிலான இந்த கருத்துகேட்பு கூட்டத்தை சுகி சிவம் தொடங்கி வைத்தார். குன்றக்குடி பொன்னம் பல அடிகளார் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கினார்.
தமிழில் குடமுழுக்கு நடத்த எதிர்ப்பு தெரி வித்து, பாஜக மாவட்டத் தலைவர் தயாசங்கர் தலைமையிலான பாஜகவினரும், ஹிந்து முன்னணி, ஹிந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர் களும் தொடர்ந்து கூச்சல் போட்டனர். தமிழில்தான் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்த வர்களை எதிர்த்து ஹிந்து சனாதனவாதிகள் குரல் கொடுத்தனர்.
இரு தரப்பினர் இடையே மோதல் ஏற் படாமல் தடுக்க ஏராளமான காவலர்கள் அரங்கினுள் குவிக்கப்பட்டனர். நீதிமன்ற உத்தரவுப்படி நடக்கும் கூட்டத்தை குழப்பும் வகையில் செயல்படுவது நீதிமன்றத்தை அவமதிப்பதாகும் என்று காவல்துறை அதிகாரிகள் எச்சரித்தனர்.
‘கருத்துப் படிவங்களை நிரப்பி நேரில் அளிக்கலாம், அஞ்சலிலும் அனுப்பலாம்’ என்று பொன்னம்பலம் அடிகளார் தெரி வித்தார். அப்போது சங் பரிவார்க் கும்பல் அந்தப் படிவங்களை கிழித்து எறிந்தனர். இருக்கைகளில் அமராமல் இரு தரப்பினரும் கத்தி முழக்கமிட்டதால் தொடர்ந்து கூட்டத்தை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. கருத்து கேட்புப் படிவங்களை மட்டும் குழுவினர் பெற்றுக் கொண்டனர். கூச்சலிட்டவர்களை காவலர்கள் வெளியேற்றினர்.