தி.மு.க. அமைப்பில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் வரவேற்கப்பட வேண்டியவை!

12 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

செப்.17 இல், காலைச் சிற்றுண்டித் திட்டம் விரிவாக்க அறிவிப்பு வரவேற்கவேண்டியது!
பெரியார் பிறந்த நாளான சமூகநீதி நாளில், அரசு அலுவலகங்களில் உறுதி மொழி எடுக்கவேண்டும்!
கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களின்
பெயரை மாற்றவேண்டும் என்கிற அவசியம் இல்லை!

‘சன் நியூஸ்’ தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் நேர்காணல்!

திருச்சி,  ஆக.25 செப்.17 இல், காலைச் சிற்றுண்டித் திட்டம் விரிவாக்க அறிவிப்பு வரவேற்கவேண்டியது! பெரியார் பிறந்த நாளான சமூகநீதி நாளில், அரசு அலுவலகங்களில்  உறுதி மொழி எடுக்கவேண்டும்! கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களின் பெயரை மாற்றவேண்டும் என்கிற  அவசியம் இல்லை. தி.மு.க. அமைப்பில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் வரவேற்கப்பட வேண்டியவை! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

தமிழர் தலைவர் ஆசிரியர் ‘சன் நியூஸ்’ தொலைக்காட்சிக்கு நேர்காணல்

23.8.2026 அன்று திருச்சிக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘சன் நியூஸ்’ தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் முழு விவரம் வருமாறு:

கேள்வி: அய்யா, திருச்சி சிறுகனூரில் அமையவுள்ள ‘பெரியார் உலக’ப் பணி எந்த அளவில் இருக்கிறது? எப்பொழுது முடிவடையும்?

தந்தை பெரியார் இன்று மட்டுமல்ல;
என்றும் தேவைப்படுகிறார்!

தமிழர் தலைவர் ஆசிரியர்: வருகிற செப்டம்பர் 17 ஆம் தேதி, தந்தை பெரியாருடைய 148 ஆவது பிறந்த நாள் விழா, அன்று ஒரு நாள் மட்டுமல்ல, ஒரு வாரம் – திராவிடர் கழகம் மட்டுமல்ல, பகுத்தறிவாளர் கழகம் மட்டுமல்ல, பெரியாரிய சிந்தனையாளர்கள், மற்றவர்கள், பெரியாரால் பயன்பெற்றோம் என்று நினைக்கக்கூடிய நன்றியுணர்வு உள்ளவர்கள் அத்தனைப் பேரும் மிகச் சிறப்பாக இணைந்து, இளைஞர்கள், மற்றவர்கள் என்று, தந்தை பெரியார் இன்று மட்டுமல்ல; என்றும் தேவைப்படுகிறார் என்ற அளவிலே பிறந்த நாள் நிகழ்ச்சியை நடத்தக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

பெரியார் உலகத்திற்கு நல்ல ஆதரவும்,
மக்கள் மத்தியிலே வரவேற்பும் இருக்கிறது!

இப்பொழுது பெரியார் உலகத்திற்கு நல்ல ஆதரவும், மக்கள் மத்தியிலே வரவேற்பும் இருக்கிறது. இன்றைக்கு மாலையில் நடைபெறும் திறந்தவெளி மாநாட்டில், நிதி வழங்க இருக்கிறார்கள். ஆகவேதான், ஒவ்வொரு கட்டமாகத் தாண்டி, மிக முக்கியமான கட்டம் அடிக்கட்டுமானம். இந்த அடிக்கட்டுமானத்தினுடைய முடிவுகள் கிட்டத்தட்ட நிறைவேறி இருக்கிறது.

பெரியாருடைய சிலை என்பது வெளிநாட்டில் தயாராகிறது. அது 95 அடி உயரச் சிலை. அதேபோல பீடம் 60 அடிக்கு இருக்கக்கூடியது. அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் ஒரு பக்கத்திலே நடந்து கொண்டி ருக்கின்றன. மக்களுடைய ஆதரவு என்பது சிறப்பாக, கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு இருக்கிறது.

150 ஆம் ஆண்டு பிறந்த நாளில்,
பெரியார் உலகப் பணி நிறைவடையும்!

அய்யா அவர்களுடைய 150 ஆவது ஆண்டு, இன்னும் இரண்டு ஆண்டுகளில், ஒரு மிக முக்கியமான  முதல்கட்டம், அந்தப் பணிகள் நிறைவடைய இருக்கின்றன. எல்லா மக்களுடைய ஆதரவும்,  இந்தப் பணிக்கு, இதற்கு யாரும் பெரிய அளவில் எதிர்ப்பெல்லாம் ஒன்றும் கிடையாது. ஒவ்வொரு செலவும், பெரியார் இருந்தால் எப்படி அதைச் சிக்கனத்தோடும், சிறப்போடும் செய்வார்களோ அதுபோல்தான் செய்கிறோம். அதற்கு என்று தனித்தனிக் குழுக்கள் இருக்கின்றன. ஆய்வுக் குழுக்கள், தணிக்கைக் குழுக்கள் இவையெல்லாம் சிறப்பாக நடந்து கொண்டிருக்கின்றன.

கேள்வி: பெரியாரைக் கொள்கைத் தலைவராகக் கொண்டு,  தவெக  ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். அவர்க ளுடைய 100 நாள் ஆட்சி எப்படி இருக்கிறது? அந்தக் கொள்கைக்கு உண்மையாக அவர்கள் இருக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

பெரியாரைக் கொள்கைத் தலைவராக ஏற்றிருக்கிறார்கள் என்பது வரவேற்கக்கூடிய ஒன்று!

தமிழர் தலைவர் ஆசிரியர்:  நல்ல கேள்வி. பெரியாரைக் கொள்கைத் தலைவராக ஏற்றுக் கொண்டி ருக்கிறோம் என்று அவர்கள் சொன்னது மட்டுமல்ல, ஆட்சி அமைத்தவுடனே நேரே பெரியார் திடலுக்கு வந்தார்கள். பெரியாருடைய நினைவிடத்திற்குச் சென்று, முதலமைச்சர் உள்பட முழக்கமே இட்டார்கள். அவையெல்லாம் சிறப்பானது. அவர்கள், பெரியாரைக் கொள்கைத் தலைவராக ஏற்றிருக்கிறார்கள் என்பது வரவேற்கக்கூடிய ஒன்று.

காரணம், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையிலும், பெரியார்  தமிழ்நாட்டுக்கு மட்டும் உரியவர் அல்ல. உலகப் பெரியாராக, பெரியார் உலக மயம், உலகம் பெரியார் மயம் என்று ஆகிக் கொண்டிருக்கிறது. ஆகவே, அப்படிப்பட்ட  நிலையில், ஆட்சியை அமைத்து, நீட் தேர்வை எதிர்த்து,  சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய த.வெ.க. அரசு, நீட் தேர்வின் கொடுமையை மக்களிடம் எடுத்துச் சொல்ல இருசக்கர வாகனங்கள் மூலமாகப் பிரச்சாரம் செய்து, அரசு நிறைவேற்றிய தீர்மானத்திற்கு வலிமை ஊட்டக்கூடிய ஒரு செய்தியை, ஒரு செயலை எங்களுடைய தோழர்கள், இளைஞர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், மழையாக இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி நடத்துகிறபோது, ஏன் அந்தப் பிரச்சாரத்திற்குத் தடை செய்தனர் என்பதை அவர்கள் சுயபரிசோதனை செய்ய வேண்டும்.

பெரியார் வழியிலே
சிந்திக்கக்கூடியவர்கள் நாங்கள்!

இதற்கு யார் காரணம்? இந்த நாள்களை எண்ணிப் பார்க்க வேண்டும். பிறகு நாங்கள் நீதிமன்றத்திற்குச் சென்றோம். நாங்கள் நினைத்தி ருந்தால், இளைஞர்கள் ஆர்வத்தோடு, ‘இல்லை உடனே அன்றைக்கே நடத்த வேண்டும்,  சட்டத்தை மீற வேண்டும்’ என்று சொன்னார்கள். பெரியார் வழியிலே சிந்திக்கக்கூடியவர்கள் நாங்கள். ஆகவேதான் நாங்கள் சொன்னோம், ‘‘உடனடியாக நாம் உணர்ச்சிவசப்பட வேண்டாம். சட்டப்படி நமக்குள்ள நீதியை நாம் சிறப்பாகப் பெற்றுக்கொள்ளலாம். அந்த உரிமையை வலி யுறுத்த வேண்டும். நீதிமன்றமும் ஒருவேளை இதைச் சரி என்று எடுத்துக் கொள்ளவில்லை என்றால், பிறகு மக்கள் மன்றத்திலே சென்று நாம் முறையிடலாம்’’ என்று சொன்னோம். நீதிமன்றத்திலே எங்களுக்கு நீதி கிடைத்தது. அந்த அடிப்படையில் பிரச்சாரம் தொடங்கி நடைபெறுகிறது.

அறத்தையும், பகுத்தறிவையும், சுயமரியாதையையும் போதிக்கக்கூடிய, அனைத்து மக்களுக்கும் உரிய ஒரு பொது இடம்!

எங்கள் பிரச்சாரத்திற்கு அனுமதி கொடுக்காமல், பெரியார் திடலில் நூறு காவல் துறையினருக்குமேல் போட வேண்டிய அவசியம் இல்லை. பெரியார் திடல் ஒன்றும் தீவிரவாதிகளுடைய பாசறை அல்ல. பெரியார் திடல் அன்பையும், அறத்தையும், பகுத்தறிவையும், சுயமரியாதையையும் போதிக்கக்கூடிய, அனைத்து மக்களுக்கும் உரிய ஒரு பொது இடம். அதில், அலுவலகங்கள் இருக்கின்றன. இதுவரைக்கும் இல்லாத அளவில், அன்றைக்கு அவர்கள் அப்படி நடந்து கொண்டதற்கு யார் காரணம்? என்று அவர்கள் ஆராய வேண்டும்.

ஓர் ஆட்சி 100 நாள்கள் ஆட்சி என்று பெருமைப் படுத்திக் கொள்ளுகிறபோது, ஆட்சி, மற்றவர்களை சுய பரிசோதனை செய்வதை விட, இந்த 100 நாள்களில், நாங்கள் சாதித்தோம் என்பதை விட, விமர்சனத்தை யோசிக்க வேண்டும். ஒரு நல்லாட்சி, ஆக்கப்பூர்வமாக நாங்கள் ஆட்சியைத் தருவோம் என்று பதவிக்கு வந்திருக்கிறார்கள். அவர்களை மக்கள் தேர்ந்தெடுத்தது சரியா, தவறா? என்பது இனிமேல் அந்த விவாதத்துக்கு இடமில்லை.

மக்கள் தீர்ப்பு அது. அந்த மக்கள் தீர்ப்புப்படி அவர்கள் வந்தபோது, அந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு, தாங்கள் ஏற்கெனவே பிரகடனப்படுத்திய கொள்கைத் தலைவர், அந்தக் கொள்கையை, அதுவும் அரசுக்கு வலிமை சேர்க்கக்கூடிய ஒரு பிரச்சாரத்தைத் தடை செய்தது. நீதிமன்றமே ‘ஏன் நீங்கள் இப்படி நடந்து கொள்கிறீர்கள்?’ என்று  அவர்கள் தலையில் குட்டு வைத்தது மாதிரி, கேட்ட பிற்பாடு, அப்புறம் அனுமதி கொடுக்கிறோம் என்று சொல்லி, இன்றைக்குச் சிறப்பாக அந்தப் பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கிறது.

அதேபோலத்தான், அண்மையில் இடதுசாரிகள், மற்றவர்களைப் பற்றி ஒரு சுற்றறிக்கை. அந்தச் சுற்றறிக்கையை  மாவட்ட ஆட்சியருக்கே தெரியாமல், ஒரு வட்டாட்சியர் அனுப்பினார் என்று சொல்கிறார்கள். அப்புறம் கல்லூரி முதல்வருக்கு… கல்லூரியினுடைய இணைய அமைப்புகள் இயக்குநர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்கிறார்கள். அமைச்சர், இன்னொரு காரணம் சொல்கிறார். மாணவர்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றால், எல்லா மாணவர்களுக்கும் தானே போக வேண்டும்? அது என்ன குறிப்பிட்ட இடதுசாரி மாணவர்கள் என்றெல்லாம் சொல்லுகிறார்கள். அப்படியென்றால், ஆட்சி என்ன வலதுசாரியாக இருக்கிறதா? என்றெல்லாம் கேள்வி எழுகிறது அல்லவா!.

மாவட்ட ஆட்சியருக்கே தெரியாமல், வட்டாட்சியர் நடவடிக்கை இருக்கிறதா?

ஆட்சிக்கு ஆதரவு தந்து கொண்டிருக்கிற இடதுசாரி நண்பர்கள் கொதித்தெழுந்து, குறிப்பாக தலைமைச் செயலாளராக இருக்கிற ஒருவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். இதில் ஒரு பிரச்சினை சுட்டிக்காட்டப்பட வேண்டும். தலைமைச் செயலாளர் அதற்குக் காரணம் என்றால், முதலமைச்சருக்குப் பொறுப்பில்லையா? எல்லா காரியங்களுக்கும் முதலமைச்சர் பொறுப்பு. முதலமைச்சருக்கே தெரியாமல் தலைமைச் செயலாளர் நடக்கிறாரா? மாவட்ட ஆட்சியருக்கே தெரியாமல், வட்டாட்சியர் நடவடிக்கை இருக்கிறதா?

இது ஆட்சியா? காட்சியா? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியிலே இப்போதே வந்திருக்கிறது. எனவே, 100 நாள்கள் ஆட்சியிலே சாதனையைப் பற்றி நினைப்பதை விட, மக்களுடைய நியாயமான விமர்சனங்கள் எப்படி இருக்கிறது என்று பார்த்துத் தங்களைத் திருத்திக் கொள்ள முன்வர வேண்டும். தவறுகள் நடப்பது எல்லா ஆட்சியிலும் இருக்கலாம். ஆனால், சுட்டிக்காட்டப்படவுடன், தங்களைத் திருத்திக் கொள்ள முன்வர வேண்டும். அப்படி வந்தால்தான் சிறப்பாக இருக்கும்.

ஒன்றை அவர்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். சட்டம் – ஒழுங்கு திமுக ஆட்சியில் சரியில்லை, ஏராளமான கொலைகள், கொள்ளைகள் நடக்கிறது என்று சொல்லித் தான் பதவிக்கு வந்தார்கள். ஆனால், இந்த 100 நாள்களில், திமுக ஆட்சியில் 5 ஆண்டுகாலத்தில் என்ன  நடந்ததோ, அதைவிட பலமடங்கு அதிகமாக நடக்கின்றன என்பதில் இரண்டு கருத்துகளுக்கே இடமில்லை என்று எல்லாரும் சொல்கிறார்கள். அதைப்பற்றி உடனடியாக எந்தப் பதிலும் இல்லை. நாங்கள் புதிதாக ஆட்சிக்கு வந்திருக்கிறோம்; அவகாசம் கொடுக்கவேண்டும் என்று ஆட்சியாளர்கள் சொல்கிறார்கள். இதுபற்றி நான் ஏற்கெனவே இதை விளக்கிச் சொல்லியிருக்கிறேன்.

சட்டம் – ஒழுங்கு என்பதற்கு
அவகாசம் கேட்டுப் பெற முடியாது

அது என்னவென்றால், அவகாசம் கொடுக்க வேண்டிய திட்டங்கள் வேறு. ஆனால், சட்டம் – ஒழுங்கு என்பதற்கு அவகாசம் கேட்டுப் பெற முடியாது. சட்டம் – ஒழுங்கு என்பது கொலை, கொள்ளையை உடனே தடுக்க வேண்டும். அது தீயணைப்புப் பணி போன்றதாகும். தீயணைப்புக்காரர்கள் ‘லீவ் எடுத்துக்கொண்டிருக்கிறோம்; ஒரு 10 நாள்கள் அவகாசம் கொடுங்கள், நாங்கள் வந்துவிடுகிறோம். இப்பொழுதுதான், தயார் செய்கிறோம் – தீயணைப்புக் கருவிகளையெல்லாம்’ என்று சொல்ல முடியாது.

சில இடங்களில், தீயணைப்பு லாரியில், தண்ணீர் சரியாக நிரப்பாத நிலையில், அந்தத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.  ஏனென்றால், அங்கு பீய்ச்சி அடிப்பற்குத் தண்ணீர் இல்லை என்று இருக்கக்கூடாது. எல்லாம் ஆயத்தமாக இருக்க வேண்டும். தீப்பற்றி இருக்கிறது என்று ஒரு தொலைப்பேசி வந்தவுடனே, அவர்கள் மின்னல் வேகத்திலே போய் அங்கே நிற்பவர்கள்தான் தீயணைப்பு வீரர்கள். சட்டம் – ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டும் என்று சொன்னால், கொலைகளைத் தடுக்க வேண்டும், கொள்ளைகளைத் தடுக்க வேண்டும் என்று சொன்னால், அது எந்த அளவுக்குச் சென்ற ஆட்சியை விட, இதில் மாறுபட்டு இருக்கிறது என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டும்.

கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களின் பெயரை மாற்றவேண்டும் என்கிற  அவசியம் இல்லை!

இரண்டாவதாக, சில பேர் சில திட்டங்களை, பழைய ஆட்சியினுடைய திட்டங்களைத் தொடர்கிறார்கள் என்றால், வரவேற்க வேண்டி யதுதான். ஏனென்றால், முக்கியமான திட்டங்கள்.  உதாரணமாக மகளிர் உரிமைத் தொகையாக இருந்தாலும், ஆனால், அந்தத் திட்டத்தின் பெயரை மாற்றவேண்டும் என்கிற  அவசியம் இல்லை. ஏனென்றால், அந்தந்தக் கட்சியில், ஆட்சியில் இருக்கும்போது அந்தத் திட்டத்தைச் செய்கிறார்கள். நீங்கள் என்ன பெயர் மாற்றினாலும், நாம் சத்துணவு என்று கூட சொன்னோம். ஆனால், அந்தத் திட்டத்தை யார்  கொண்டு வந்தது? காமராஜருடைய சத்துணவுத் திட்டம் என்று தான் அதற்குப் பெயர் வரும், ஆகவேதான், காலை உணவா? அது மு.க.ஸ்டாலின் ஆட்சியிலே, ‘திராவிட மாடல்’ ஆட்சியிலே கொண்டு வந்தது என்பதுதான் எல்லோருடைய மனதிலேயும் பதிந்திருக்கிறது. புதிதாகத் தொடங்கக்கூடிய திட்டங்கள் இருக்கிறதா? அந்தத் திட்டத்திற்கு எந்தப் பெயர் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்;  அது ஒரு பாராட்டத்தக்க அம்சம். ஆனால், இந்த பெயர் மாற்றங்கள் செய்யவேண்டிய அவசியம் இல்லை!

பழையவர்கள் எல்லாம் செய்ததை மாற்றி அமைப்பதற்காகத்தான்  நாங்கள் வந்திருக்கிறோம் என்று சொல்கிறீர்கள். எனவே, மாற்றத்துக்குரிய ஆட்சி என்று சொல்லிவிட்டு, இன்னும் பழைய காலத்தில் நடந்த பெயர் மாற்றத்தை நியாயப்படுத்துவது என்பது இருக்கிறதே, அது ஒரு சுயமுரண்பாடு. ஆகவே, அது தேவையே இல்லை.

செப்.17 இல், காலைச் சிற்றுண்டித் திட்டம் விரிவாக்க அறிவிப்பு வரவேற்கவேண்டியது!

இன்னொரு சிறப்பு, காலை உணவுத் திட்டத்தைக் கூட, தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவிலே, செப்.17 அன்றைக்கு நாங்கள், மிகப்பெரிய அளவுக்குச் சிறப்பாக நீட்டிப்போம், விரிவாக்குவோம் என்று சொல்லியிருக்கிறார்கள். அது வரவேற்க வேண்டிய ஒன்று.

பெரியார் பிறந்த நாளான சமூகநீதி நாளில், அரசு அலுவலகங்களில்  உறுதி மொழி எடுக்கவேண்டும்!

ஒரே ஒரு வேண்டுகோள் அரசாங்கத்திற்கு. அன்றைக்குத் தந்தை பெரியார் அவர்களுடைய பிறந்தநாளிலே, முந்தைய ‘திராவிட மாடல்’ ஆட்சி – இன்னொரு ஆட்சி செய்தது என்று கருதாமல், தந்தை பெரியார் அவர்களுடைய பிறந்த நாளை, சமூகநீதி நாளாக அறிவித்தார்கள். சமூகநீதி நாளாக அறிவித்த நாளில், அரசு அலுவலகங்களில் உறுதி மொழி ஏற்பார்கள்.  சமூகநீதிதான் ஆட்சியிலே மிக முக்கியமானது. தமிழ்நாடே சமூகநீதி மண், பெரியார் மண். அந்த அடிப்படையில பெரியார் பிறந்த நாளில் எடுக்கப்படுகின்ற  உறுதிமொழி, தந்தை பெரியாருடைய வாசகங்களைக் கொண்டது. அதில் எந்த அரசியலும் கிடையாது. ஆகவேதான், ஓர் அன்பான வேண்டுகோள், முதலமைச்சர் அவர்கள், செப்டம்பர் 17 அன்று பெரியார் பிறந்தநாள் அன்றைக்குச் சிறப்பாக அந்த உறுதிமொழியை அதிகாரிகள் வைத்து, எப்படி அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்தார்களோ, அதுபோல இந்த ஆட்சி என்பது ஒரு தொடர்ச்சி என்று அமைச்சர்களே ஒப்புக்கொள்கிறார்கள், சொல்லியிருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது இதையும் அவர்கள் செய்ய வேண்டும். இதுபோல சில ஆக்கப்பூர்வமான செய்திகளையெல்லாம் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் சிறப்பாக இருக்கும்.

கேள்வி: கடந்த ஒரு 7, 8 ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் மதவாத எதிர்ப்பு, பாஜக எதிர்ப்பு வீரியமாக இருந்தது. இந்த 100 நாள்கள் ஆட்சியில், அது இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீங்களா?

மதவாத உணர்வுகள் உள்ள  அதிகாரிகள் பின்னணியில் இருக்கிறார்கள்!

தமிழர் தலைவர் ஆசிரியர்: அதாவது திராவிடர் கழகத்தினுடைய திட்டங்களை ஊக்கப்படுத்துவதற்குப் பதிலாக, அந்தக் கூட்டங்களுக்குத்  தடை போடுவது, பிறகு நீதிமன்றத்திற்குச் சென்று அனுமதி வாங்குவது, திருநெல்வேலியில் நடைபெறும் மாநாட்டிற்கு அனு மதி மறுத்தார்கள்.  அது எங்களுக்கு ஒரு வகையில் மகிழ்ச்சிதான். ஏனென்றால், சாதாரணமாக அந்தக் கூட்டம் நடந்திருந்தால், அவ்வளவு கூட்டம் வந்தி ருக்காது. அந்தக் கூட்டத்திற்கு நல்ல விளம்பரம் கொடுத்தார்கள். அதற்குக் காரணம் என்ன? மதவாத உணர்வுகள் உள்ள  அதிகாரிகள் இதன் பின்னணியில் இருக்கிறார்கள்.

ஒப்பனைகள் பயன்படாது;
உண்மைகள் தான் உலாவர வேண்டும்!

காரணம் இன்னமும் மிகப்பெரிய அளவுக்கு,  ஏன் ஒரு அதிகாரி குறிப்பிட வேண்டிய அளவுக்கு வருகிறார் என்று சொன்னால், ஒரு தலைமைச் செயலாளரைப் பற்றி, ஆளுங்கட்சிக்கு ஆதரவு கொடுக்கின்ற இடது சாரிகளே குற்றம் சொல்லி, அவர் விலக வேண்டும் என்று சொல்கிறார்கள் என்று சொன்னால், அதிலிருந்தே மதவாதம் எப்படி இருக்கிறது? எந்தப் பக்கம் சாய்ந்து கொண்டிருக்கிறது? என்பதையெல்லாம் சொல்ல வேண்டும். எனவேதான், ஒப்பனைகள் பயன்படாது. உண்மைகள் தான் உலாவர வேண்டும்.

கேள்வி: நேற்று (22.8.2026)  திமுக செயற்குழு கூடி, ஒரு முடிவு எடுத்திருக்கிறார்கள். அவர்களுடைய அமைப்பு முறைகளிலெல்லாம் நிறைய மாற்றங்கள் செய்திருக்கிறார்கள். அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

75 ஆண்டு காலம் அனுபவம் கொண்ட
இயக்கம் தி.மு.க.!

தமிழர் தலைவர் ஆசிரியர்: தி.மு.க. 75 ஆண்டு காலம் இருக்கிற கட்சி. அதனுடைய தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அழகாகச் சொல்லியிருக்கி றார்கள்.  திமுக சந்திக்காத வெற்றிகளும் இல்லை, பெறாத தோல்விகளும் இல்லை. வெற்றி – தோல்வி என்பதுதான் சுழன்றே வருவது.

ஆனால், அப்படிப்பட்ட நிலையில், இதை ஒரு நல்ல வாய்ப்பாக எடுத்துக் கொண்டால், எது ஒரு கசப்பான அனுபவமோ, எது நமக்குத் தோல்வியோ அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, திருத்துவதுதான் – வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் மிக முக்கிய மான அடிப்படை. அதை திமுக, அவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் செய்கிறார்கள். அது ஒரு தனி இயக்கம், சிறப்பான இயக்கம். 75 ஆண்டு காலம் அனுபவம் கொண்ட இயக்கம், நெருக்கடிகளையெல்லாம் சந்தித்து, அந்த நெருக்கடி நெருப்பாற்றிலெல்லாம் நீந்தி வெளியே வந்து, பல தோல்விகளையும், வெற்றிகளையும் சந்தித்த இயக்கம்.

வெற்றி பெற வேண்டும் என்பதுதான்
தாய்க் கழகத்தின் வாழ்த்துகள்!

ஆகவே, அந்த இயக்கத்தை வலுப்படுத்துவதற்கு இது நல்ல வாய்ப்பு. இது மாதிரி ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், அந்த இயக்கத்துக்கு இப்படி ஒரு புது ரத்தத்தைப் பாய்ச்சக்கூடிய வாய்ப்புகள் கிடைக்காது என்று அவர்கள் கருதிக் கொண்டு, சிறப்பான திட்டங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அதில் அவர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் தாய்க் கழகத்தின் வாழ்த்துகள்!

– இவ்வாறு ‘சன் நியூஸ்’ தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அளித்த நேர்காணலில் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *