வேலியே பயிரை மேய்வதா? கஞ்சா கடத்திய சிறைக் காப்பாளர் கைது

3 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

திருநெல்வேலி, ஆக. 25- கஞ்சா கடத்தலுடன் தொடர்பு வைத்து, தொடர் கடத்தலில் ஈடுபட்டு வந்த சிறைக் காப்பாளரை 2 கிலோ கஞ்சா மற்றும் ரூ.10 லட்சம் பணத்துடன் காவல் துறையினர் கைது செய்தனர்.

திருநேல்வேலி டவுன் – குற்றாலம் சாலையில், காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமையிலான காவல் துறையினர் நேற்று முன்தினம் (23.8.2026) வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை சோதனையிட்டதில், 2 கிலோ கஞ்சா மற்றும் ரூ.10 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்தனர்.

காரில் இருந்த 2 பேரையும் விசாரித்தபோது, அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் விட்டிலாபுரத்தைச் சேர்ந்த தமிழரசன், முறப்பநாடு நவீன் என்பதும் அவர்கள் கஞ்சாவை மொத்தமாக வாங்கி பொட்டலங்களாக பிரித்து விற்பதும் தெரியவந்தது. தமிழரசன் தூத்துக்குடி பேரூரணி சிறையில் காப்பாளராக உள்ளார் என்பதும் தெரியவந்தது.

தமிழரசன் இதற்கு முன்பு பாளையங்கோட்டை மத்திய சிறையில் பணியாற்றியபோது, அவருக்கு பிரபல கஞ்சா வியாபாரியான எஸ்டேட் மணி என்பவரின் நெருங்கிய கூட்டாளியான தினேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

தினேஷ் விடுதலையான பின்னர், அவருடன் சேர்ந்து தமிழரசன் கஞ்சா கடத்தியது தெரியவந்தது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மீண்டும் தினேஷ் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் எஸ்டேட் மணியும் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே நேற்று முன்தினம் (23.8.2026) வாகன சோதனை நடந்தாகவும், அப்போது கஞ்சாமற்றும் பணத்துடன் சிறை வார்டன் தமிழரசன் சிக்கியதாகவும் காவல் வட்டாரங்கள் தெரிவித்தன. கைதான காப்பாளர் தமிழரசனை பணியிடை நீக்கம் செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறைக் கண்காணிப்பாளர் செந்தாமரை கண்ணன் உத்தரவிட்டுள்ளார். தமிழரசனை காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

திருச்சி கிழக்கு உள்ளிட்ட
5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இல்லை

உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை, ஆக. 25- தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய அய்ந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதலமைச்சர் ஜோசப் விஜய், திருச்சி கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவி விலகினார். இதேபோன்று எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்), சி.விஜயபாஸ்கர் (விராலிமலை), ஜெயக்குமார் (பெருந்துறை) மற்றும் இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகியோரும் தங்களது பதவி விலகினர்.

இவர்களின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் சூழலில், இத்தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தத் தடை விதிக்கக் கோரி பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, அய்ந்து தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் வழக்குகள் முடியும் வரை இந்த அய்ந்து தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தும் திட்டம் இல்லை என தேர்தல் ஆணையம் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும், மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையைக் சுட்டிக்காட்டி வழக்கை விரைந்து விசாரிக்க தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் உள்ளிட்டோர் மனு குறித்து பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை செப்டம்பர் 8-ஆம் தேதிக்கு தள்ளிவைத்ததுடன், இடைத்தேர்தலுக்கான தடையையும் அதுவரை நீட்டித்து உத்தரவிட்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *