பொறியியல் சேர்க்கை 3ஆம் சுற்றில் 56,294 மாணவர்களுக்கு இறுதி ஒதுக்கீடு!

3 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஆக.24- தமிழ்நாட்டில் இளநிலைப் பொறியியல் படிப்பில் சேருவதற்கான 3-ஆம் சுற்றுக் கலந்தாய்வில் 56,294 மாணவர்களுக்கு இறுதி ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு தொழில்நுட்ப இயக்குநரகத்தின் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை மய்யம் (டிஎன்இஏ) 23.8.2026 அன்று தெரிவித்தது.

பி.இ., பி.டெக். பட்டப் படிப்புகளில் 3-ஆம் சுற்றுக் கலந்தாய்வில் 68,640 மாணவர்களுக்குத் தற்காலிக ஒதுக்கீடு கடந்த 21-ஆம் தேதி வழங்கப்பட்டது. இந்த ஒதுக்கீடுகளை ஆக. 22-ஆம் தேதி மாலைக்குள் உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, இந்த கால அவகாசம் முடிவுற்று முடிவுகள் 23.8.2026 அன்று வெளியிடப்பட்டன.

இந்த ஒதுக்கீடுகள் பெற்ற மாணவர்களில் அரசுப் பள்ளிகளில் படித்து ஒதுக்கீடு பெற்ற 1,172 மாணவர்கள் உள்பட மொத்தம் 48,501 மாணவர்கள் தங்களது இறுதி ஒதுக்கீட்டு ஆணைகளைப் பெற்றனர். இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிகளுக்கு நேரில் சென்று ஆக. 27-ஆம் தேதிக்குள் அசல் சான்றிதழ்களையும், கல்விக் கட்டணத்தையும் செலுத்தி சேர்க்கையைப் பெற வேண்டும்.

மேலும், இந்தச் சுற்றில் 438 அரசுப் பள்ளி ஒதுக்கீடு மாணவர்கள் உள்பட 6,183 மாணவர்கள் தங்களது ஒதுக்கீடுகளை உறுதி செய்தும், அதே சமயத்தில் விருப்பமான மற்ற கல்லூரித் தேர்வுக்கு ‘அப்வோர்ட்’ செய்துள்ளனர். இவர்கள் தற்காலிக ஒதுக்கீட்டு ஆணைகளைப் பெற்றுள்ளனர்.

இந்த மாணவர்கள் ஆக. 27-ஆம் தேதிக்குள் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை சேவை மய்யத்தில் (டிஎஃப்சி) சென்று, அசல் சான்றிதழ்களைச் சமர்ப்பித்து, கல்விக் கட்டணத்தைச் செலுத்தி சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும் என டிஎன்இஏ அறிவுறுத்தியுள்ளது. இதைப் நிறைவு செய்யாத மாணவர்கள் தங்கள் ஒதுக்கீடுகளை இழக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3-ஆம் சுற்றுக் கலந்தாய்வுக்கு மொத்தம் 1,06,583 இடங்கள் இருந்தன. இவற்றில் 1,02,719 மாணவர்கள் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டு, அவர்களில் 68,640 பேருக்குத் தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இறுதியாக 3-ஆம் சுற்றுக் கலந்தாய்வில் மொத்தம் 56,294 மாணவர்களுக்கு சேர்க்கை உறுதி செய்யப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளின்  அடிப்படை தேவைகள் பட்டியல் வெளியானது!

சென்னை, ஆக. 24- பள்ளிக்கல்விக்கு நிதிநிலை அறிக்கை ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு தேவைகள் நிறைவு செய்யப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அரசு பள்ளிகளில் 5,641 வகுப்பறைகள், 5,880 கழிவறைகள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு நிகராக கொண்டுவரும் நோக்கில், கடந்த கால அரசுகள் காட்டிய அதே முனைப்பை தற்போது புதிதாக பொறுப்பேற்று இருக்கும் அரசும் காட்டி வருகிறது. அதற்கேற்ப அரசு பள்ளிகளில் என்னென்ன உள்கட்டமைப்பு தேவைகள் இருக்கிறது? என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அரசு பள்ளிகளிடம் கேட்டு இருந்த நிலையில், அதற்கான விவரங்கள் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, உள்கட்டமைப்பு வசதிகளின் விவரங்கள் பள்ளிகளில் இருந்து பெறப்பட்டு, அதற்கு ஒரு உத்தேச செலவு பட்டியலையும் பள்ளிக்கல்வித் துறை தயாரித்திருக்கிறது.

அந்தவகையில் 2026-2027ஆம் ஆண்டில் வகுப்பறைகள் மட்டும் 5,641 என்ற எண்ணிக்கையில் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒரு வகுப்பறையின் மதிப்பு சுமார் ரூ.25.97 லட்சம் என கணக்கிடப்பட்டு, மொத்தம் சுமார் ரூ.1,465 கோடி செலவாகும் என சொல்லியுள்ளனர். அதேபோல், 3,142 எண்ணிக்கையில் மாணவர்கள் கழிவறைகளும், 2,738 எண்ணிக்கையில் மாணவிகள் கழிவறைகளும் என மொத்தம் 5 ஆயிரத்து 880 எண்ணிக்கையில் கழிவறை வசதிக்காக சுமார் ரூ.620 கோடி தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுமட்டுமல்லாமல், சுமார் ரூ.59 கோடியில் குடிநீர் வசதி 1,340 என்ற எண்ணிக்கையில் தேவைப்படுவதாகவும் கூறப்பட்டு இருக்கிறது.

மேலும் 2,361 ஆய்வகங்கள் அரசு பள்ளிகளில் தேவைப்படுவதாகவும், இதற்கு ரூ.1,598 கோடியே 24 லட்சம் வரை செலவாகும் என்றும், அரசு பள்ளி சுற்றுச்சுவர்களுக்கு என ரூ.458 கோடி செலவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆக மொத்தம் அரசு பள்ளிகளின் இந்த உள்கட்டமைப்பு தேவைகளை நிறைவு செய்ய சுமார் ரூ.4,200 கோடி வரை தேவைப்படும் என பள்ளிக் கல்வித்துறை அரசிடம் தெரிவித்திருக்கிறது. அண்மையில் வெளியான நிதிநிலை அறிக்கை அறிவிப்பில், பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.44,527 கோடி ஒதுக்கப்பட்டுள்ள சூழலில், அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளின் தேவையை பள்ளிக்கல்வித்துறை எப்படி? எப்போது? நிறைவு செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பு மாணவ-மாணவிகள், பெற்றோர், கல்வியாளர்கள் இடையே எழுந்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *