மலையாளக் கள்ளிக்கோட்டை யில் 22.08.1877 அன்று பிறந்த பொன்னுச்சாமியவர்கள் (கைவல்யம்) திருச்சியில் ஏழாம் வகுப்புவரை பள்ளிக்கல்வி பயின்றார். அறிவுக்கடலாக விளங்கினார்.
தந்தை பெரியார் அவர்களின் இளமைப் பருவத்தில், அவர்களின் கடைக்கு வரும் கணக்கற்ற ‘சாமியார்’ களோடும் ‘பாகவதர்’களோடும் தருக்கமும் கிண்டலும் செய்து கொண்டிருந்த நாள்களில் அறிமுகமானவர்தான், பிற்காலத்தில் திராவிட இயக்கத்தின் விலைமதிக்க வொண்ணா உடைமையாய்த் திகழ்ந்தார் கைவல்யம் அவர்கள்.
இவர்களின் அறிமுகம் கருத்துப் பரிமாற்றம், அன்பு, ஆர்வம், நட்பு, பற்று, உரிமை என்று கூர்தலியலின்படி ஓங்கியது. இருவரும் ஒன்றாக ஏனாம்பள்ளி ஜமீன்தாரர் திருமணத்துக்குச் சென்றனர். திருமண வீட்டில் விருந்து அருந்திக் கொண்டிருந்தபோது, தந்தை பெரியார் அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றுவதற்காக அவரின் நீர்க்குவளையைக் கையில் எடுத்த பார்ப்பனரின் மகனை அருகிலிருந்த சமையற் பார்ப்பனத் தடியன் ஒருவன், “என்னடா மடையா, சூத்திரன் குடித்த டம்ளரைக் கையில் எடுத்துவிட்டாய்!” என்று திட்ட, சீற்றத்துடன் எழுந்த கைவல்யத்துறவிதம் எச்சிற் கையினாலேயே ஓங்கி அவன் செவுளில் ஓர் அறைவிட்டு, “யாரடா சூத்திரன்?” என்று முழங்கி, அவனை மன்னிப்புக் கேட்குமாறு செய்தார் என்னும் செய்தி நம் சிந்தனைக்குப் பெரும் விருந்து!
இத்தகைய சாமியார் தந்தை பெரியார் அவர்களின் சுயமரியாதை இயக்கம் அமைக்கும் பணியில் உற்ற தோழராகத் தோள் கொடுத்தார். நாடெங்கிலும் சென்று மக்களோடு முகத்திற்கு முகம் பேசாவிட்டாலும், ‘குடிஅரசு’ கட்டுரைகளின் வாயிலாகத் தமிழர்களின் அகத்தோடு நிறையப் பேசினார். முதலாம் சுயமரி யாதை மாநாட்டின்போது, “மனுவின் காலம் எப்போதோ போய் விட்டது; பூமியானது பலவித மாறுதல்களை அடைந்து விட்டது; நதிகள் தம் சொந்த மார்க்கங்களை நீத்தன; புஷ்ப ஜாதிகளும் மிருக ஜாதிகளுமே மாறிவிட்டன; பன்றிக்கறியைத் தின்னவே பார்ப்பான் படிக்கும் படிப்பெல்லாம் பாடுபடுகிறது. இப்படியிருந்தும் ‘பிராமணர்கள்’ என்று சொல்லிக் கொண்டு நம் நாட்டில் இன்னும் அப்படியே மனுவால் எழுதப்பட்ட விதிகளுக்கும் கருமங்களுக்கும் தாராளமாக அடிமைத்தனம் வேண்டுமாம்!” என்றெழுதி நம்மின மக்கட்கு உணர்ச்சியூட்டிய இவர், “நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான ஜனங்கள் ஒன்று சேர்ந்தால், ஒருமைப்பட்டுச் சிந்தையைச் செலுத்த முடிந்தால், ஒரே பாட்டைப் படித்தாரானால், ஒரே ஒரு கொள்கையை நினைக்க வல்லவர்களானால், எந்தக் காரியத்தையும் செய்து விடலாம்!” என்று தூண்டிவிட்டு, பல்லாயிரக் கணக்கில் செங்கற்பட்டுக்குப் பயணமாக வைத்தார். தந்தை பெரியார் அவர்களின் இயக்கத்தின் எதிர்காலத்திற்கான திருமண ஏற்பாட்டின்போது அதை வரவேற்று இவர் எழுதிய கட்டுரை கருத்துக்கினிமை பயப்பதாகும்.
lll
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை சட்டம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரண்டாவது முறையாக நிறைவேற்றிய நாள் இன்று (22-08-2006).
lll
சென்னை நாள் இன்று (22-08-1639)
இந்த புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டுவ தற்காக பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்ெபனியினர் இந்நாளிலேயே ஒரு சிறு காணியை வாங்கினர்.
சென்னை நாள் என்பது தமிழ்நாட்டின் தலை நகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு நாள் ஆகும் இந்நாள் 2004 ஆம் ஆண்டில் இருந்து நினைவு க்கூரப்பட்டு வருகிறது.
கிழக்கு இந்திய கம்பெனி தாமல் வெங்கடப்பா நாயக்கரிடம் இருந்து ஒரு சிறு நிலத்தை வாங்கி சென்னை நகரத்தை உருவாக்க காரணமாக இருந்த நாளை கொண்டாடுவதே சென்னை நாளாகும். வந்தவாசியை ஆண்ட தாமல் வெங்கடப்பா நாயக்கர், பூவிருந்தவல்லியை ஆண்ட தாமல் அய்யப்ப நாயக்கர் ஆகிய சகோதரர்களின் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் சென்னை அழைக்கப்படுகிறது.
பத்திரிகையாளர்களான சசி நாயர், மயிலாப்பூர் டைம்ஸின் ஆசிரியரான வின்சண்ட் டி சொஸா, மெட்ராஸ் மியூசிங்ஸின் ஆசிரியரான முத்தையா ஆகிய மூவரும் இணைந்து உருவாக்கியதே இந்த சென்னை நாள். முதன் முதலில் ஒரு சில கருப்பு வெள்ளைப் படங்களுடன் 2004 ஆம் ஆண்டு தொடங்கிய இந்தக் கொண்டாட்டம் இன்று வளர்ச்சியடைந்து ஒளிப்படக் கண்காட்சி, உணவுத் திருவிழா, மாரத்தான் ஓட்டம் என பல பரிமாணங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.
பல மாறுதல்களைக் கண்ட சென்னை, 22 ஆகஸ்டு 2026 இல் தனது 387 வது வயதைக் கொண்டாடுகிறது.
தகவல் : பாணாவரம் பெ.வீரமணி
பிரிந்து வாழும் இணையினர் இடையே குழந்தையின் உரிமை தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்தினா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது, கோடை விடுமுறையில் குழந்தையைத் தந்தையிடம் அனுப்பத் தாய் தரப்பில் தயக்கம் தெரிவிக்கப்பட்டது. குழந்தை பாடத்திட்டம் சாராத சிறப்பு வகுப்புகளுக்குச் செல்வதால், நீண்ட நாட்கள் தந்தையுடன் அனுப்புவது கடினம் என்றும், இவ்வகுப்புகள் குழந்தையின் எதிர்காலத்திற்கு அத்தியாவசியமானது என்றும் தாய் தரப்பில் வாதிடப்பட்டது. இதை நிராகரித்த நீதிபதிகள், வழக்கில் வழங்கிய முக்கிய அறிவுரைகள் அதிகப்படியான வகுப்புகள் வேண்டாம்: குழந்தைகளை ஓய்வில்லாமல் தொடர்ச்சியாக சிறப்பு வகுப்புகளுக்கு அனுப்புவது அவர்களுக்குக் கூடுதல் அழுத்தத்தையே தரும்.
குழந்தைகளுடன் பேசி நன்னடத்தை, பண்பாடு மற்றும் கண்ணியத்தைக் கற்றுக் கொடுப்பதே அவர்களைச் சிறந்த மனிதர்களாக மாற்றும். பெண்களை மதிக்கக் கற்றுத் தர வேண்டும்: ஆண் குழந்தைகளுக்குச் சிறுமிகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும், பெண்களை எவ்வாறு மதிக்க வேண்டும் என்பதையும் பெற்றோர் கண்டிப்பாகக் கற்றுத்தர வேண்டும். விடுமுறை நாட்களில் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிட்டு, வாழ்க்கையின் நடைமுறைகளைக் கற்றுக் கொடுப்பது பெற்றோர்-குழந்தை இடையே நல்ல பிணைப்பை ஏற்படுத்தும் என்றனர்.
