சென்னை, ஆக. 22- நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், உயர்ஜாதி யினருக்கான இட ஒதுக்கீடை எதிர்த்தும் தமிழ்நாடு முழுவதும் இருசக்கர வாகனப் பிரச்சாரப் பயணத்துக்குக் காவல் துறை அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்து, இரு சக்கர வாகனப் பேரணிக்கு அனுமதி அளிக்க தமிழ்நாடு காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராய ணன் முன் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது பேச்சுரிமை, கருத்துரிமை போல், போராடுவதும் மக்களின் அடிப்படை உரிமை. நீட் தேர்வுக்கு எதிரான இருசக்கர வாகனப் பேரணியை முடக்குவது ஏன்? என காவல் துறைக்கு கேள்வி எழுப்பினார்.
“இந்த வாகனப் பேரணிக்கான பெட்ரோல் செலவை அரசு வழங்கப் போவதில்லை! பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துக் காரணங்களால் இவ்வாறு அனுமதி மறுத்தால் ஹெலிகாப்டரில் சென்றா போராட முடியும்? மாநில அரசு குடிமக்களின் அடிப்படை உரிமையை நசுக்கக் கூடாது” எனவும் தெரிவித்திருந்தார். அத்துடன் அனுமதி மறுத்தது குறித்து காவல் துறை விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் வழக்கு மீண்டும் கடந்த திங்கள் அன்று விசாரணைக்கு வந்த போது அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் ஜான் சத்தியன் ஆஜராகி, தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தான் இவர்கள் அனுமதி மறுக்கப்பட்டதாகவும், தமிழ்நாடு அரசு நீட் போராட்டத்துக்கு எதிரானது அல்ல என்றும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட்டுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். போராட்டம் குறித்து புதிய மனு அளித்தால் பரிசீலிக்கத் தயார் என்றும் குறிப்பிட்டார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஜெ.ரவீந்திரன், ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மோட்டார் வாகன விதிகளைப் பின்பற்றி அனுமதிக்கப்பட்ட வேகத்தில் தான் பேரணி நடைபெறும் என்றும், தாங்கள் பைக் ரேஸ் நடத்தப் போவதில்லை எனவும் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி, எத்தனை பைக்குகள், எத்தனை பேர் பங்கேற்பார்கள், எந்த இடத்தில் தொடங்கி எங்கு முடியும் என்பன உள்ளிட்ட விவரங்களை நாளை தாக்கல் செய்யுமாறும், அதைப் பதிவு செய்து கொண்டு உத்தரவு பிறப்பிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
அடுத்த நாள், நீதிமன்றம் கேட்ட விவரங்களைத் திராவிடர் கழகத்தின் சார்பில் தாக்கல் செய்ததும், அரசு மேலும் ஒரு நாள் அவகாசம் கோரியது. அதற்குள் அனைத்து காவல் நிலையங்கள் மூலம் இரு சக்கர வாகனப் பரப்புரைக்கு அனுமதி வழங்கப்படும் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தது. அதன் அடிப்படையில், தமிழ்நாடு முழுவதும், கழகப் பொறுப்பாளர்களின் கூட்ட அனுமதி விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. பெரு நகரங்களிலும், மாவட்டங்களிலும் முறையே ஆணையர் அலுவலகத்திலிருந்தும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களிலிருந்தும் இருசக்கர வாகனங்களில் பரப்புரைப் பயணம் செய்வதற்கான பொது அனுமதிகள் வழங்கப்பட்டன.
எனினும், அடுத்த நாளான 19-ஆம் தேதி, பரப்புரையில் பங்கேற்கும் வாகனங்களின் பட்டியலை வழங்குமாறு நீதிமன்றம் கோரியது. ஆறு குழுக்களிலும் பங்கேற்கும் இருசக்கர வாகனங்களின் எண்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன. 20-ஆம் தேதி காலையில் கூடிய நீதிமன்றம், பரப்புரையில் பங்கேற்கும் தோழர்களின் பெயர்ப் பட்டியலை அன்று மதியம் 2.15 மணிக்குள் வழங்குமாறு கேட்டது. அதையும் அன்று மதியத்திற்குள் நீதிமன்றத்தில் கழகத்தின் சார்பில் வழக்குரைஞர்கள் வழங்கினர். இதற்கிடையில் அனைத்து மாவட்டங்களிலும் பரப்புரைப் பயணத் திற்குத் தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து விட்டதாக, அரசுத் தரப்பு வழக்குரைஞர் ஜான் சத்தியன் நீதிமன்றத்தில் உறுதி செய்தார். அதை ஏற்றுக் கொண்ட உயர்நீதி மன்ற நீதிபதி மாண்பமை ஜஸ்டிஸ் திரு.வி. லட்சுமி நாராயணன், திராவிடர் கழகம் கோரியவாறு, தமிழ்நாடு முழுவதும் நீட் தேர்வையும், உயர்ஜாதியினருக்கான இடஒதுக்கீட்டையும் முற்றாக ரத்து செய்ய வலியுறுத்தி இரு சக்கர வாகனப் பரப்புரைப் பயணம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுவிட்டதால், இந்த ரிட் மனுவை முடித்து வைப்பதாகத் தெரிவித்தார்.
கருத்துரிமை, பேச்சுரிமையை நிலைநாட்டும் வகையில் திராவிடர் கழகம் மேற்கொண்ட சட்டப் போராட்டம் வெற்றியடைந்து, இன்று (22.08.2026) காலை 9 மணியளவில் தமிழ்நாட்டின் ஆறு முனைகளிலிருந்து, தலா 20 வாகனங்களாக மொத்தம் 120 வாகனங்களில் 200-க்கும் மேற்பட்ட தோழர்கள் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.
திராவிடர் கழகத்தின் சார்பாக, இந்த வழக்கில் மூத்த வழக்குரைஞர் ஜெ.ரவீந்திரன், த.வீரசேகரன் ஆகியோர் வாதாடினர். மு.சென்னியப்பன், திருப்பூர் பாண்டியன், துரை. அருண், ஜெ.துரைசாமி, கே.வீரமணி, பா.மணியம்மை, சோ.சுரேஷ், தளபதி பாண்டியன் உள்ளிட்ட வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராயினர்.

