சென்னை, ஆக. 21- சென்னை – பெரியார் திடலில், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் ஒருங்கிணைப்பில் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் 12.08.2026 அன்று மாலையில் நடைபெற்றது. அன்னை மணியம்மையார் அரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் செயலாளர் முனைவர் வெ. மாரப்பன் அறிமுக உரையாற்றினார். மய்யத்தின் இணைச் செயலாளர் முனைவர் மு.தேன்மொழி கலந்துரையாடல் கூட்டத்திற்கு வந்தோரை வரவேற்று உரையாற்றினர். சென்னை மாநிலக் கல்லூரியின் வரலாற்றுத் துறை ஆய்வு மாணவர் பி.சித்திக் திராவிடத் தத்துவம் குறித்த தனது முனைவர் பட்ட ஆய்வுப் பணி குறித்து விரிவாக உரையாற்றினார். அந்த உரை குறித்து கூட்டத்தில் கலந்து கொண்ட ஆய்வு மாணவர்களின் வினாக்களுக்கு உரிய விடைகளை விளக்கமாக எடுத்துரைத்தார்.
திராவிடக் கொள்கை
விளக்க அறிக்கை
கலந்துரையாடலுக்குப் பின்னர் திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் திராவிடக் கொள்கை விளக்க அறிக்கை பற்றி சுருக்கமாக கூறினார்.
2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 23-ஆம் நாளன்று திராவிடர் கழக மாநில மாநாட்டில் திராவிடக் கொள்கை விளக்க அறிக்கையினை (Dravidian Manifesto) திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டார். 1916-ஆம் ஆண்டில் திராவிட இயக்கத்தின் முன்னோடி அமைப்பான தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எனும் நீதிக்கட்சியின் தலைவர் பிட்டி தியாகராயர், பார்ப்பனரல்லாதார் அறிக்கையினை (Non-Brahmin Manifesto) வெளியிட்டார். நூறு ஆண்டுகளைக் கடந்துள்ள திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகள் குறித்த விளக்க அறிக்கையினை திராவிட இயக்கத்தின் தாய் அமைப்பான, தந்தை பெரியார் அவர்களால் நிறுவப்பட்ட திராவிடர் கழகம் வெளியிட்டுள்ளது.
மனிதர் அனைவரும் சமமானவர்களே. அனைவருக்கும் அனைத்தும் என்பதுதான் திராவிடக் கொள்கையின் அடிப்படையாகும். ஆனால் அப்படிப்பட்ட சமத்துவ நிலைமைகள் கடந்த 2000 ஆண்டுகளாக நடைமுறையில் இல்லை. இன்றைக்கும் சமத்துவமற்ற நிலைமைகள் முழுமையாக மாறிடவில்லை. சமூகத்தில் சமத்துவ நிலைகள் ஏற்பட வேண்டும் என்பதற்காக மனிதருக்கே உரிய சுயமரியாதை உணர்வுடனும், பகுத்தறிவு அணுகுமுறையுடனும் செயல்பட மனிதர்கள் முனைய வேண்டும் என்ற அடிப்படையில் இயக்கத்தை தந்தை பெரியார் நடத்திச் சென்றார். தனக்குப் பின்னரும் இயக்கம் அதே அடிப்படையில் செயல்பட வேண்டும் என்ற நிலையினை ஏற்படுத்தியுள்ளார். சமத்துவ நிலை ஏற்படுவதற்கு எவையெல்லாம் தடைகளாக இருக்கின்றனவோ அவை எப்படிப்பட்ட ஆற்றல் உள்ளவை களாகக் கருதப்பட்டாலும், அகற்றப்பட வேண்டும். இதுதான் திராவிட இயக்கச் செயல்பாட்டின் அடிப்படை ஆதார அணுகுமுறையாகும்.
திராவிடக் கொள்கையின் உலகளாவிய பொருத்தம்
திராவிட வரலாற்று ஆய்வு மய்யத்தின் பொருளாளர் வீ. குமரேசன் தனது உரையில் குறிப்பிட்டதாவது:
திராவிட இனம் என்பது இடம் சார்ந்தது அல்ல; பண்பாடு அடிப் படையிலானது; மனிதம் சார்ந்தது. மனிதர் அனைவரும் சமம் என்ற நிலை உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது மட்டுமல்ல; அவசியம் தேவைப்படுவது. ஆனால் சமமற்ற நிலைகள், இடத்துக்கு இடம், மனித சமூகங்களுக்கு இடையில் மாறுபட்டு நிலவுகின்றன. இந்த மண்ணில் சமத்துவமற்ற நிலைக்கு அடிப்படைக் கட்டமைக்கு காரணமாக இருப்பது ஜாதி முறை. மனிதர்களுள் பாகு பாடு, பிரிவினை, உரிமை மறுப்பு ஆகியவற்றை வலியுறுத்திடும் கட்டமைப்பாக ஜாதி முறை உள்ளது. ஜாதிக் கட்டமைப்பே நம் சமுதாயத்தில் சமத்துவமின்மைக்கு வித்திடுகிறது. கூடுதலாக சமமற்ற சமத்துவமின்மைக்கு (graded inequalities) வழி ஏற்படுத்துகின்ற வகையில் சமூகத்தை மனித இயல்பிற்கே புறம்பான வகையில் நிலவுகிறது. எனவே, இந்த மண்ணில் ஜாதி ஒழிப்பே மனித சமத்துவத்திற்கான அடிப்படைச் செயல்பாடாக இருக்க வேண்டும். அதனை வலியுறுத்தும் வகையில் திராவிடக் கொள்கையை நடைமுறைப்படுத்திட திராவிட இயக்கம் பாடுபட்டு வருகிறது. உலகில் அந்தந்தப் பகுதிகளில் நிலவிடும் மனித சமத்துவமின்மைக்கான காரணங்கள் பலப்பல என்றிருந்தாலும் திராவிடக் கொள்கையின் அடிப்படைக் கோட்பாடுகளான சுயமரியாதை உணர்வு, பகுத்தறிவு செயல்பாட்டு அணுகுமுறை ஆகியவற்றின் அடிப்படையில் அந்தந்தப் பகுதிகளில் நிலவிடும் சமத்துவமற்ற நிலைமைகளை போக்கிட முடியும். அந்த வகையில் திராவிடக் கொள்கைகள் இந்த மண்ணுக்கு மட்டும் தேவைப்படுபவை அல்ல; உலகளாவிய அளவில், மனிதர்கள் வாழ்ந்துவரும் அனைத்துப் பகுதிகளுக்கும் தேவைப்படும் தத்துவமாக திராவிடச் சிந்தனையின் விரிவாக்கம் உள்ளது. அந்த நிலையினை நோக்கிய செயல்பாட்டுத் தளத்தினை திராவிட இயக்கம் – பெரியார் இயக்கம் உருவாக்கி வருகிறது. எடுத்துக்காட்டாக, திராவிடக் கொள்கை வலியுறுத்திடும் பாலின சமத்துவம் என்பது உலகளாவிய பொது பொருத்தப்பாடுடையது. திராவிடக் கொள்கை, நடைமுறை பற்றிய கூடுதல் குறிப்புகளைத் தருகின்ற வகையில் பலவகை ஆய்வு நூல்களும், பிரச்சாரப் புத்தகங்களும் பெரியார் பகுத்தறிவு ஆராய்ச்சி மய்ய நூலகத்தில் உள்ளன. திராவிடக் கொள்கை ஆய்வு மாணவர்கள் நூலகத்தினை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நிகழ்ச்சியின் நன்றியுரையினை திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் இணைச் செயலாளர் முனைவர் அ. ரஷீத்கான் வழங்கினார். கூடுதலாக, மய்யத்தின் பொறுப்பாளர்களான தொல்லியலாளர்கள் முனைவர் இனியன் இளவழகன், முனைவர் ச. தீபிகா ஆகியோர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
ஆய்வு மாணவர்கள்
கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆய்வு மாணவர்கள்: கே.அவினேஷ்ராய், கே. தங்கதுரை, ஏ. கயல்விழி, எஸ். பிரீத்தி, பி.ரித்திகா, பி. சங்கீதா, எஸ். ஷர்மி, கே. கலைச் செல்வன், ஜே. ஹாரிஷ், ஜெ. தனபால், வி. விஷால், பி. கருப்பையா, திராவிடம் பற்றிய விளக்கங்கள் பெற்ற ஆய்வு மாணவர்கள், நிகழ்ச்சியின் பயன்பாடு குறித்து மகிழ்ச்சியினைத் தெரிவித்தனர். இத்தகைய கலந்துரை யாடல் கூட்டங்களை திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் தொடர்ந்து நடத்திடவும், கருத்து விளக்கம் அளித்திடவும் வேண்டும் என்ற விழைவு ஆய்வு மாணவர்களிடம் வெளிப்படையாகத் தெரிந்தது.
