சென்னை, மார்ச் 9 மத ரீதியாக பிரிவினையைத் தூண்டும் வகை யில் ட்விட்டரில் பதிவிட்ட வழக் கில் கைது செய்யப்பட்ட பாஜகவைச் சேர்ந்த கல்யாண ராமனுக்கு 163 நாட்கள் சிறை தண்டனை விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித் துள்ளது.
அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும், மத உணர்வுகளை புண்படுத்தும் வகை யிலும் ட்விட்டரில் கருத்துகளை பதிவிட்டதாக பாஜக பிரமுகர் கல்யாணராமன் மீது சென்னை சிட்லப்பாக்கம் காவல் நிலையம் மற்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவில் 2017, 2018இ-ல் காவல் துறை யினர் வழக்குப் பதிவு செய்தனர். 2021ஆ-ம் ஆண்டு ஜனவரியில் கோவை மேட்டுப்பாளையத்திலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். தொடர்ந்து குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டார். குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், பிற மத உணர்வுகளை புண்படுத்தும் வகை யில் கருத்து பதிவிடமாட்டேன் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.
உயர் நீதிமன்றத்தில் அளித்த பிரமாணப் பத்திரத்தை மீறி இரு மதத்தினர் இடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வழக்குரைஞர் கோபிநாத் என்பவர் சென்னை மத்திய குற்றப் பிரிவிலும், பொதுச் செயலாளர் வன்னியரசு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளித்திருந்தனர்.இந்த புகார்களின் அடிப்படையில் கல்யாணராமனை மத்திய குற் றப்பிரிவு காவல்துறையினர் கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி கைது செய்தனர்.
இந்த வழக்கு சென்னை எழும் பூரில் உள்ள கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கிரிஜா ராணி முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது காவல் துறை தரப்பில், கல்யாணராமன் ட்விட்டர் பக்கத் தில் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களை புண்படுத்தும் வகையிலும், மோதல் மற்றும் கலவ ரத்தை ஏற்படுத்தும் வகையிலும் 18 பதிவுகளை பதிவிட்டதாக வாதிடப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, கல்யாண ராமனுக்கு 163 நாட்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப் பளித்தார்.