110-விதியின்கீழ் வெற்று அறிவிப்புகளை அறிவிப்பது சட்டமன்றத்துக்குத் தலைக்குனிவு – எழிலன் நாகநாதன்

2 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஆக. 20- “முதலமைச்சர் ஜோசப் விஜய் நேற்று (19.8.2026) வெளியிட்டவை கவர்ச்சிக்கான அறிவிப்புகள் ஆகும். இவை விளம்பரத்துக்காகவும், செய்திகளில் இடம் பெறுவதற்காகவும் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களை எல்லாம் எவ்வாறு செயல்படுத்தப் போகிறார்கள் என்பதை அவர்கள் தெளிவாக விளக்க வேண்டும்” என திமுக மருத்துவ அணிச் செயலாளர் எழிலன் நாகநாதன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மருத்துவக் காப்பீட்டு நிதி ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், காப்பீட்டு அட்டைகளுக்கான நிதி ஒதுக்கீட்டின் விவரம் தெளிவாக இல்லை. இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை முத்தமிழறிஞர் கலைஞர்தான் முதலில் தொடங்கி வைத்தார். 2021-2026 திமுக ஆட்சிக் காலத்தில் மட்டும் 25 லட்சம் மருத்துவக் காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

பட்ஜெட்டில் காப்பீடுக்கு ரூ.1,400 கோடிதான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தும்போது காப்பீடு நிறுவனத்திற்கு நாம் கொடுக்க வேண்டிய தொகை ரூ.4,000 கோடியாக உயர இருக்கிறது. கஜானா காலி எனக் கூறிவிட்டு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் வழங்கப்படும் என அறிவிக்கின்றனர். தேர்தல் வேட்புமனுவில் யார் எல்லாம் கார் வைத்துள்ளனர்; அவர்களின் பொருளாதார நிலை பற்றி வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்.

எனவே, அதை ஆராய்ந்து கார் இல்லாத சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் கார் வழங்க வேண்டும். நமது சட்டப்பேரவையில் உள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்களில் 190 பேர் கோடிகளில் சொத்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. ஏழை, எளிய சாமானியர்களை சட்ட மன்றத்துக்குள் கொண்டு வந்திருப்பதாக சொல்லும் முதலமைச்சர் ஜோசப் விஜய், யார் கார் வைத்துள்ளனர், கார் இல்லை என வேறுபடுத்தி பார்த்து கார் வழங்கினால் உகந்ததாக இருக்கும்.

முதலமைச்சர் ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் கவர்ச்சிக்கான அறிவிப்புகள் ஆகும். இவை விளம்பரத்துக்காகவும், செய்திகளில் இடம் பெறுவதற்காகவும் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களை எல்லாம் எவ்வாறு செயல்படுத்தப் போகிறார்கள் என்பதை அவர்கள் தெளிவாக விளக்க வேண்டும்.

500 யூனிட்டுகளுக்குள்தான் 200 யூனிட் இலவச மின்சாரம் பொருந்தும் என்று தவெக அரசு சொல்கிறது. 501 யூனிட்டுக்கு மேல் சென்றால், ஒரு யூனிட்டுக்கு ரூ.4 என்று கணக்கிடப்படுவதால்தான் தற்போது மின்கட்டணம் அதிகரித்துள்ளது. இப்படித் திட்டங்களைக் கொடுப்பதுபோல் கொடுத்துவிட்டு, மக்களிடம் பணத்தைச் சுரண்டுகிறார்கள். 110ஆவது விதியின் கீழ் வெற்று அறிவிப்புகளை அறிவிப்பது சட்டமன்றத்துக்கு தலைகுனிவு” என்று அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *