கோவை பெரியார் நூலகம் கட்டி முடிக்கப்பட்டும் திறக்கப்படாதது ஏன்? சட்டமன்றத்தில் மேனாள் அமைச்சர் எ.வ.வேலு கேள்வி!

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஆக.19- சட்டமன்றத்தில் நேற்று (18.8.2026) பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் மேனாள் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:

சென்னை வள்ளுவர் கோட்டம் முதல் குமரி வள்ளுவர் சிலை வரை கலைஞரின் அடையாளம் இல்லாத ஊரே இல்லை. ஜல்லிக்கட்டு அரங்கம், சைதாப்பேட்டை எம்சி ராஜா மாணவர் விடுதி, கொளத்தூர் மருத்துவமனை உள்ளிட்ட சாதனைகள் படைக்கப்பட்டன. அதேபோல் மதுரை கலைஞர் நூலகம், சிவகங்கையில் கீழடி அருங்காட்சியகம், நெல்லையில் பொருநை அருங்காட்சியம் அமைக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமல்லாமல் மணிமண்டபங்கள், சிலைகள் கொண்டு வரப்பட்டன. டில்லியில் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளுக்காக கட்டடம், டில்லியில் திருவள்ளுவருக்கு சிலை அமைக்கப் பட்டுள்ளது.

தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியை எட்ட கல்வி அவசியம் என்பதை உணர்ந்து நூலகம் அவசியம் என்று காமராஜர் பெயரில் நூலகம் கட்டப்பட்டது. கடலூரில் அஞ்சலை அம்மாள் பெயரிலும், நெல்லையில் காயிதே மில்லத் பெயரிலும், சேலத்தில் பாரதி தாசன் பெயரிலும், கோவையில் பெரியார் நூலகம் கட்டப்பட்டு வருகிறது. இதில் கோவை பெரியர் நூலகம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படும் நிலையில் உள்ளது. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூட நேரில் சென்று ஆய்வு செய்தார். திமுக ஆட்சியின் போது 95% பணிகள் நிறைவடைந்துவிட்ட சூழலில், 3 மாத காலமாக எந்த பணிகளும் செய்யப்படாமல் உள்ளது. தற்போது வரை பெரியார் நூலகம் திறக்கப்படவில்லை.

வைக்கத்தில்…

அதேபோல் கேரளத்தின் வைக்கத்தில் பெரியார் பெயரில் கட்டப்பட்டு வந்த மணிமண்டபம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தந்தை பெரியாரை கொள்கைத் தலைவர் என்கிறீர்கள். தவெக அரசு ஆட்சிக்கு வந்து 3 மாதங்கள் ஆகிறது. ஆனால், கோவையில் கட்டப்பட்டுள்ள தந்தை பெரியார் நூலகம் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது என்பதனை அரசின் பார்வைக்குக் கொண்டு வருகிறேன்.பெரியார் தங்களின் கொள்கைத் தலைவர் என்று தம்பட்டம் அடிக்கும் அவர்கள், ஏன் பெரியார் பெயரில் கொண்டு வரப்பட்ட நூலகம், மணிமண்டப பணிகளை நிறுத்தி வைத்துள்ளார்கள் என்பதே கேள்வியாக உள்ளது.

151 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்கள் மீண்டும் கிடைக்குமா?

மாநில அரசினுடைய மருத்துவ இடங்களில் ஒன்றிய அரசுக்கு 15 சதவிகிதம் நாம் வழங்குகிறோம். 15 சதவிகிதம் வழங்கிவிட்ட பின்பு, ஒன்றிய அரசாங்கத்திலிருந்து 27 சதவிகிதங்களை மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்க வேண்டும் என்ற அந்த அடிப்படையிலும், ஏற்கெனவே doctors அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் 50 சதவிகிதம் நமக்கு மீண்டும் தர வேண்டுமென்று உச்சநீதிமன்றத்திலே எங்களுடைய தலைவர் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் வழக்குத் தொடர்ந்து, அவைகளை யெல்லாம் கொடுக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே ஒரு தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

அந்தத் தீர்ப்பின் அடிப்படையிலே, தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்தியாவில் இருக்கின்ற அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்றுதான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த அடிப்படையில், ஏறத்தாழ 151 super speciality என்று சொல்லப்படுகிற அந்த இடம் நமக்கு கிடைத்துக் கொண்டிருந்தது. இப்போது, உச்ச நீதிமன்றம் என்ன சொல்லியிருக்கிறது என்றால், 151 super speciality என்பது மாநில அரசாங்கத்திற்கு இல்லை, ஒன்றிய அரசாங்கம் எடுத்துக்கொள்ளும் என்று Supreme Court ஒரு தீர்ப்பு வழங்கியிருக்கிறது. எனவே, மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் அவர்களிடத்தில் நான் கேட்டுக்கொள்ள விரும்புவது, மீண்டும் 151 super speciality என்கிற அந்த மருத்துவ இடம் நமக்கு வருவதற்காக, நம்முடைய தமிழ்நாட்டில் இருக்கிற மருத்துவர்கள் அதாவது அரசு மருத்துவமனையிலே பணியாற்றுகிற மருத்துவர்கள் super speciality பயிற்சி பெறுவதற்கு இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பதை அறிய விரும்புகிறேன் என்று எதைச் சொன்னாலும் சரி, அதற்கு ஆதாரம் இருக்க வேண்டும்.

அப்போதுதான் நீங்கள் குறிப்பிட வேண்டுமென்று, நீங்கள் ஏற்கெனவே சொல்லியிருக்கிறீர்கள், உங்களுடைய Ruling. இது ஒன்று. அமைச்சர் அவர்கள் பதிலுரை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். நாங்கள் அனைவரும் பொறுமையாக அவருடைய பேச்சைக் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். போகிறபோக்கில், ஏற்கெனவே இருந்த அரசாங்கம் நிர்வாகத் திறமை அற்றது, நாங்கள் நிர்வாகம் நன்றாகச் செய்கிறோம் என்று சொல்வதைப் பற்றியெல்லாம், அதுதான் பொதுவான கருத்துகள். சில அரசாங்கத்தில் leakage இருக்கும். நாங்கள் leakage என்றுகூட பேசுங்கள் அல்லது நாங்கள் திறமையானவர்கள் என்று உங்களைப் பாராட்டிக் கொள்ளுங்கள். அதில் எங்களுக்கு மாற்றுக் கருத்தும் இல்லை. முதலமைச்சர் அவர்களைப் பாராட்டுகிறார்கள், அதெல்லாம் உங்களுடைய உரிமை. அதில் ஒன்றும் மாற்றம் இல்லை. நீங்கள் ஏற்கெனவே Ruling  கொடுத்திருக்கிறீர்கள்.

வளர்ச்சிக்கு காரணம்
திராவிட இயக்கம்!

இந்த நாடு இன்றைக்கு வளர்ச்சி பெற்றதற்குக் காரணம் திராவிட இயக்கம்தான். இன்றைக்கு நாம் அனைவரும் படித்திருக்கிறோம் என்று சொன்னால், அதற்குக் காரணம் திராவிட இயக்கம்தான். அமைச்சர் அவர்கள்தான் கூறினார், நான் கிராமத்தில் எங்கோ பிறந்து வளர்ந்தேன், எங்கோ சென்று, கிருஷ்ணகிரியில் ஒரு கிராமத்தில் சென்று மருத்துவராக நான் வந்தேன் என்று சொன்னால், இந்த மருத்துவம் சாதாரண கிராமத்தில் இருப்பவர்களும் படிப்பதற்கு வாய்ப்புத் தந்தது திராவிட இயக்கம்தான். திராவிட இயக்கம் இல்லையென்றால் நான் பேசியிருக்க முடியாது. யாரும் படித்திருக்க முடியாது.

எனவே, திராவிட இயக்கத்தை நீங்கள் புதிதாக வந்திருக்கிறீர்கள், கொள்கையைச் சொல்லுங்கள். மீண்டும் நாங்கள்தான் ஆட்சிக்கு வருவோம் என்று சொல்லுங்கள். 25 ஆண்டுகாலம் கட்டமைத்தோம் என்று சொல்லுங்கள் அது உங்களுடைய உரிமை. ஆனால், அடுத்தவர்களைப் பேசுகிறபொழுது, அடுத்தவர்களை கை நீட்டுகிற பொழுது, ஆதாரம் இல்லாமல் பேச வேண்டாம் என்று நீங்கள் தயவுசெய்து Ruling கொடுங்கள். இல்லையென்றால், இந்த 25 நாட்களும் இதே பிரச்சினைதான் வரும். சட்டசபையை நாம் நடத்த முடியாது”, இவ்வாறு எ.வ.வேலு பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *