தேசிய மருத்துவ ஆணையம் மூலம் மருத்துவர்களுக்கு தனி அடையாள எண்

3 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஆக. 19- தேசிய மருத்துவ ஆணையம் மூலம் மருத்துவர்களுக்கு தனி அடையாள எண் வழங்குவதற்கான புதிய வரைவு விதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

மருத்துவர்கள் பதிவு மற்றும் மருத்துவ உரிம திருத்த விதிமுறைகள் 2026 வரைவு விதிகளில் தேசிய மருத்துவ ஆணையம் மாற்றங்கள் செய்து அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதன்படி, மாநில மருத்துவ கவுன்சிலில் மருத்துவர் பதிவு செய்தவுடன், தேசிய மருத்துவ ஆணையத்தின் நெறிசார் வாரியம் மூலமாக அவருக்கு தனித்துவமான அடையாள எண் உருவாக்கப்படும்.

இந்த எண் வழங்கப்பட்ட பிறகு, அந்த மருத்துவர் நாட்டின் எந்த மாநிலத்திலோ அல்லது யூனியன் பிரதேசத்திலோ தனியாக மீண்டும் பதிவு செய்ய தேவையில்லாமல் இந்தியா முழுவதும் மருத்துவ பயிற்சி மேற்கொள்ள தகுதி பெறுவார். மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தின் குறியீடு, மாநில மருத்துவ கவுன்சில் பதிவு எண் ஆகியவை உள்ளடங்கியிருக்கும் வகையிலான தனித்துவ அடையாள எண்ணாக இது இருக்கும்.

தனித்துவ அடையாள எண் முறை மூலம் ஒரு மருத்துவருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை மாநில பதிவேட்டிலும், தேசிய பதிவேட்டிலும் உடனே அறிந்துகொள்ள முடியும்.

ஏற்கெனவே மாநில மருத்துவ கவுன்சில்களில் பதிவு செய்துள்ள மருத்துவர்கள், தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையதளத்தில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தங்களது விவரங்களை புதுப்பித்து தனித்துவ அடையாள எண்ணை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இதற்காக எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்படாது. இதுதொடர்பாக பொதுமக்கள் மற்றும் மருத்துவத்துறை சார்ந்தவர்கள் தங்களின் கருத்துகளையும், ஆட்சேபனைகளையும் 30 நாள்களுக்குள் சமர்ப்பிக்கலாம் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

அரசு பெண் ஊழியர்களுக்கு

3ஆவது குழந்தைக்கும் 365 நாள் மகப்பேறு விடுப்பு அறிவிப்பு!

சென்னை, ஆக. 19- ‘‘அரசு பெண் ஊழியர்களின் 3ஆவது குழந்தைக்கும் இனி ஓராண்டு மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும்’’ என்று சட்டப்பேரவையில் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று (18.8.2026) மனிதவள மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது பதிலளித்த துறை அமைச்சர் சரத்குமார் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்:

தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளிக்கும் அரசாக இருப்பதால், அரசு பெண் பணியாளர்களின் 3ஆவது குழந்தைக்குத் தற்போது வழங்கப்பட்டு வரும் மகப்பேறு விடுப்பு 12 வாரங்களில் இருந்து 365 நாட்களாக (ஓராண்டு) உயர்த்தி வழங்கப்படும். அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் ‘வெற்றிப் பாதை’ என்ற செயலி ரூ.2 லட்சம் செலவில் உருவாக்கப்படும். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தின் கீழ் ரூ.50 லட்சம் செலவில் சமூக ஊடகக் கண்காணிப்பு மய்யம் ஏற்படுத்தப்படும்.

பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் ரூ.1 கோடி செலவில் கணினி ஆய்வகம், ரூ.2.25 கோடி மதிப்பில் திறந்தவெளி விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும். அரசு சேவைகளைப் பொதுமக்களுக்கு எளிமையாகவும், விரைவாகவும் வழங்கும் வகையில் எளிமை ஆளுமை என்ற முன்முயற்சியின் கீழ் அனைத்து அரசு சேவைகள், உரிமங்கள், சான்றிதழ்கள் தடையின்மை சான்றிதழ்கள் (என்ஓசி), ஒப்புதல்கள் அனைத்தும் மறுசீரமைக்கப்பட்டு எளிமைப்படுத்தப்படும். இவ்வாறு பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் சரத்குமார் வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து பேசிய பாமக உறுப்பினர் சவுமியா அன்புமணி, ‘‘டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் தொகுப்பூதியப் பணியாளர்களாக உள்ளனர். குறிப்பாக குரூப்-4 பணி நிலையில் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றையும் விரைவாக நிரப்ப வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.

அதற்கு அமைச்சர் சரத்குமார் பதில் அளிக்கையில், ‘‘டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களை நியமிப்பது தமிழ்நாடு ஆளுநர்தான். காலி இடங்களை நிரப்புவது குறித்து முதலமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. காலி இடங்களை நிரப்ப விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *