சென்னை, ஆக 18- ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்கச் சட்டம் இயற்றுவதற்கான பரிந்துரைகளை வழங்க அமைக்கப்பட்டுள்ள ஜஸ்டிஸ் திரு.கே.என்.பாஷா தலைமையிலான ஆணையத்திற்குத் திராவிடர் கழகத்தின் கருத்துரைகள், பரிந்துரைகள் நேற்று (17.8.2026) அளிக்கப்பட்டன. திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில், கழகப் பொறுப்பாளர்கள் ஆணையத்தின் அலுவலகத்திற்கு நேரில் சென்று மாண்பமை ஜஸ்டிஸ் கே.என்.பாஷா அவர்களிடம் வழங்கினர்.
ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற
நீதிபதி தலைமையில்…
ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்குத் தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும், காவல்துறையில் தனிப் பிரிவு தொடங்கப்பட வேண்டும் என்றும் திராவிடர் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கடந்த ஆண்டு 2025 அக்டோபர் 4 ஆம் நாள் செங்கல்பட்டு மறைமலை நகரில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் இது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, அம் மாநாட்டில் கலந்துகொண்ட அன்றைய முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏற்று, அடுத்த சில நாள்களிலேயே அச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கான பரிந்துரைகளை வழங்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் கே.என்.பாஷா தலைமையில் ஓர் ஆணையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பைச் சட்டமன்றத்திலேயே வெளியிட்டார். அதன் படி அமைக்கப்பட்ட ஆணையம், இது தொடர்பாக பல்வேறு ஆய்வுகளையும், கலந்துரையாடல்களையும் மேற்கொள்வதுடன், பலரின் கருத்துரைகளையும் பெற்று வருகிறது.
ஆணையத்தின் சார்பில், அழைப்பு!
திராவிடர் கழகத்தின் கருத்துரைகளை வழங்கு மாறு ஆணையத்தின் சார்பில் கடந்த 12 ஆம் தேதி விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று, நேற்று (17.08.2026) நண்பகல் 12 மணியளவில் சென்னை எழும்பூர் தாளமுத்து – நடராசன் மாளிகையின் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆணையத்தின் அலுவலகத்திற்குத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேரில் சென்றார். அவருடன் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், வழக்குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன், துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் சென்றிருந்தனர்.
ஆணையத்திற்கு வருகை தந்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களையும், பொறுப்பா ளர்களையும், ஆணையத்தின் தலைவர் ஜஸ்டிஸ் திரு. கே.என்.பாஷா, ஆணையத்தின் செயலாளரும், மேனாள் மாவட்ட & செஷன்ஸ் நீதிபதியுமான திரு.ரவீந்திர போஸ், ஆணையத்தின் உறுப்பினர்கள் மேனாள் ஏ.டி.ஜி.பி. எஸ்,ராமநாதன், ஓய்வுபெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி டாக்டர் வி.பழனிக்குமார் ஆகியோர் வரவேற்றனர்.
கழகத் தலைவர் விளக்கம்!
திராவிடர் கழகத்திற்கு நேரம் ஒதுக்கி, கருத்துரைகள அளிக்க வாய்ப்பு வழங்கியமைக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள், ‘‘ஆணவக் குற்றங்கள், ஆணவக் கொலைகள், ஜாதி-தீண்டாமைக் கொடுமைகள், அதன் மூல காரணங்கள் குறித்தும், இப் பிரச்சினையில் அரசு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும், சிறப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டிய அவசியம், அதில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்தும், திராவிடர் கழகம் தயாரித்திருந்த கருத்துரைகள், பரிந்துரைகளை’’ விளக்கினார்.
பின்னர் அது தொடர்பாக ஆணைய உறுப்பினர்கள் எழுப்பிய சில அய்யங்களுக்கும் அந்தப் பரிந்துரைகளிலேயே இருப்பனவற்றை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து திராவிடர் கழகத்தின் கருத்துரைகள், பரிந்துரைகளை, ஆணையத்தின் தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்களுக்குத் திராவிடர் கழகத் தலைவர் அளித்தார். அத்துடன், தந்தை பெரியாரின் “ஜாதி ஒழிய வேண்டும் – ஏன்?”, பாபாசாகேப் அம்பேத்கரின் “ஜாதியை ஒழிக்க வழி” ஆகிய புத்தகங்களையும் அனைவருக்கும் வழங்கினார். பல முக்கிய ஆவணங்களுடன் தொகுக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை வழங்கியமைக்கு ஆணையத்தின் சார்பில் நன்றி தெரிவித்தனர்.
உடன், திராவிடர் கழக வழக்குரைஞரணிச் செயலாளர் மு.சென்னியப்பன், வழக்குரைஞர்கள் கே.வீரமணி, சோ.சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
