திண்டுக்கல், ஆக. 17- வணிக மின் கட்டணம் 85 சதவீதம் உயர்ந்துள்ளதை ஏற்க முடியாது என்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் நேற்று (16.8.2026) வணிகர்கள் சங்க பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திண்டுக்கல்லில் புதிய பேருந்து நிலையம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அந்தப் பணிகளை அரசு விரைவாக சரி செய்ய வேண்டும். கட்டட வரி விதிப்பு கடந்த ஆட்சியில் உயர்த்தப்பட்டதால் வணிகர்கள், மக்கள் தடுமாறுகின்றனர். தற்போது புதிய அரசு பேருந்து நிலையத்திலுள்ள கட்டடங்களை முறைப்படுத்த வேண்டும் என்பதில் தற்காலிகப் பணிகளைத் தொடங்கி பின்னர் அவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். ஆனாலும் கட்டடங்களை மீண்டும் அளவீடு செய்யும் முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதேபோன்று ஜி.எஸ்.டி., பெயரில் பல்வேறு இடங்களில் சுங்கச்சாவடி அமைத்து சோதனை செய்கிறார்கள். இது சிறிய வணிகர்களை அச்சுறுத்துகிறது. அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தி, உள்நாட்டு வணிகத்தைப் பெருக்க வேண்டும்.
கருநாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். குற்றவாளிகளுக்கு கருநாடக அரசு கொடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
ஏற்காட்டில் நடைபெற உள்ள மாநில செயற்குழு கூட்டத்தில் ‘மேதகாது’ அணை விஷயம் குறித்து வணிகர்கள் முக்கிய முடிவு எடுக்க உள்ளோம். இரு மாநிலத்தை சேர்ந்தவர்களும் சகோதரர்கள் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் அதில் குந்தகம் விளைவிப்பதற்கு முயன்றால் வணிகர் சங்க பேரமைப்பு போராட்டம் அறிவிப்போம்.
ஒரு கிலோ அரிசிக்கு தற்போது ரூ.15 உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். நீர் ஆதாரத்தை பெருக்க ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அதிகாரியை நியமித்து ஏரி, குளங்களை சீரமைக்க வேண்டும்.
தராசு முத்திரை வைப்பதற்கு ஒவ்வொரு ஊர்களிலும் முகாம் அமைக்க வேண்டும். அதிகக் கட்டணம் வசூலிக்கக் கூடாது. வணிக மின் கட்டணம் 85 சதவீதம் உயர்ந்துள்ளது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது. கட்டட வரி இதற்கு மேல் அதிகரித்தால் தமிழ்நாடு முழுவதும் உள்ள திருமண மண்டபங்கள் கட்டணம் செலுத்த முடியாமல் சீல் வைக்கும் நிலை ஏற்படும். இவ்வாறு அவர் பேசினார்.
ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளித்தால்தான்
அரிசி விலையைக் கட்டுப்படுத்த முடியும்!
அரிசி விலையைக் கட்டுப்படுத்த முடியும்!
மாநில சம்மேளன தலைவர் பேட்டி!
தேனி, ஆக. 17- தமிழ்நாட்டில் அரிசி தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வணிகர்கள் சங்கங்களின் தலைவர் துளசிங்கம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வணிகர்கள் சங்கங்களின் சார்பில் மாநில பொதுக்குழு கூட்டம் தேனியில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று (ஆகஸ்ட் 16) நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் துளசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில, மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள், வணிகர்கள் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த துளசிங்கம், “தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜய் பல நலத்திட்ட உதவிகளை நமக்கு செய்துள்ளார். அதிலும் குறிப்பாக வேளாண்மை சார்ந்த தொழில்களுக்கான பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டில் அரிசி விலை அதிகரித்து வருவதாக கூறப்பட்டது.
அதன்படி, 26 கிலோவிற்கு கீழ் உள்ள அரிசி விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியினை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். அப்போது தான் தற்போது உயர்ந்துள்ள விலையை கட்டுப்படுத்த முடியும்.
தொடர்ந்து, ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு விவசாயிகள் கொண்டு செல்லும் நெல்லுக்கு ஒரு சதவீதம் மட்டுமே ஜி.எஸ்.டி. விதிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையையும் நாங்கள் தற்போது முன்வைக்கிறோம். அதாவது, வெளிமாநிலங்களில் இருந்து ஆலைகளுக்கு வரும் நெல்களுக்கு பல்வேறு வரி விதிக்கப்படுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் அரிசி தட்டுப்பாடு என்ற பேச்சிற்கே இடமில்லை. வருங்கால தேவைகளுக்கு ஏற்ப அதிகளவில் அரிசிகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. காரணம், கருநாடகா, கேரளம் மற்றும் தமிழ்நாட்டில் கூட பல இடங்களில் மழைபொழிவு இருக்கிறது. இதனால், அரிசி தேவைக்கு அதிகமாகவே சேமிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் மற்ற அத்தியாவசிய பொருட்களின் விலையை விட அரிசியின் விலை குறைவாக தான் உள்ளது. தமிழ்நாட்டில் வீடுகளில் சூரியஒளி மின்சாரத்திற்கு மானியம் வழங்கப்படுகிறது. அதேபோல், அரிசி ஆலைகளுக்கும் 50 சதவீத மானியத்தோடு சூரிய ஒளி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுத்தால் நெல் ஆலை நடத்துபவர்களுக்கு உதவியாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
ரசாயன கழிவுகள் கலப்பதால் எண்ணூர் முகத்துவாரத்தில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதந்தன!
சென்னை, ஆக.17- சென்னை எண்ணூர் முகத்துவாரத்தில் மீன்கள் இறந்து மிதப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். சென்னை எண்ணூர் முகத்துவாரத்தில் திடீரென லட்சக்கணக்கான மீன்கள் இறந்து மிதப்பதாக அப்பகுதி மக்கள் மீனவர்களுக்கும் காவல்துறையினருக்கும் நேற்று (16.8.2026) காலையில் தகவல் தெரிவித்தனர். மீன்கள் இறந்து மிதப்பதால் அப்பகுதியில் துர்நாற்றமும் வீசி வருகிறது.
இதனையடுத்து, எண்ணூர் முகத்துவாரத்துக்கு விரைந்த மீன்வளத் துறை அதிகாரிகளும் மீனவர்களும் ஆய்வு மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, இறந்த மீன்களைச் சேகரித்த மீன்வளத் துறை அதிகாரிகள், அவற்றை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். ஆய்வின் முடிவுகள் வெளிவந்தால்தான், மீன்களின் உயிரிழப்புக்கான காரணம் தெரிய வரும் என்றும் அவர்கள் கூறினர்.
அதுமட்டுமின்றி, அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் எண்ணெய்க் கழிவுகளால் மீன்கள் பாதிக்கப்பட்டனவா அல்லது ஏதேனும் சமூக விரோத செயல்களால் பாதிக்கப்பட்டனவா என்ற கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, கொசஸ்தலை ஆற்றில் தொழிற்சாலைக் கழிவுகள் கலப்பதால்தான், மீன்கள் இறப்பதாகக் கூறி 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, தாழங்குப்பம் – எண்ணூர் விரைவுச் சாலையில் மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

