அவர்தம் சிந்தனைகளை சுவாசிப்போம்!
திராவிடர் கழகத்தின் பணியும் கொள்கைகளும்
இந்த திராவிடர் கழகம் இன்று மூன்று முக்கிய கொள்கைகளை கொண்டதாக இருந்து வருகிறது.
அவையாவன:
திராவிட சமுதாயத்தில் இருந்து வரும் ஜாதி பிரிவு, உயர்வு – தாழ்வு பேதம், வர்ணாஸ்ரமமுறை அடியோடு ஒழிக்கப்பட்டாக வேண்டும்.
திராவிட நாடு முழு சுயேட்சையுள்ள தனி சுதந்திர நாடாக ஆக்கப்பட வேண்டும்.
அதுவரை அரசியலில் திராவிட சமுதாய மக்கள் எண்ணிக்கைகளுக்குத் தக்க அளவு உத்யோகம் முதலிய வகைகளில் வகுப்புவாரி பிரதிநிதிதுவம் பெற வேண்டும் என்பதாகும்.
முதலாவது காரியமாகிய வர்ணாஸ்ரம தர்ம முறை ஒழிக்கப்படவேண்டுமானால், வர்ணாஸ்ரம தர்மத்தை வலியுறுத்தும் சமய சாஸ்திரக் கடவு ள்கள், தத்துவங்கள் ஒழிக்கப்பட வேண்டியதாகும்.
இரண்டாவது காரியமாகிய திராவிட நாடு பூரண சுதந்திரத்துக்கு இந்திய தேசிய காங்கிரசு டனும், வடநாட்டுடனும் போராடி ஆக வேண்டும்.
மூன்றாவது காரியமாகிய வகுப்பு பிரதிநிதித்வம் அடைவதற்கு பார்ப்பன சமுதாயத்தின் தடை எதிர்ப்பு காரியங்களுடன் போராடி ஆக வேண்டும்.
இந்த மூன்று காரியங்களைத் திராவிடர் கழகம் இன்று செய்து வருகிறது.
சமய சாஸ்திர கடவுள்கள் போராட்டம் என் பது இலேசான காரியமல்ல. திராவிட மக்களின் இன்றைய எல்லாவிதமான தாழ்ந்த நிலைக்கும் இழிநிலைக்கும் இந்த சமய சாஸ்திரக் கடவுள் தன்மைகளே காரணமாகும். இவை திராவிட பாமர மக்களுக்குள் இரத்தத்தில் ஊறிப் பதிந்து விட்டதால் இதுவரையில் செய்யும் வேலை களுக்கு பார்ப்பனர்கள் எதிர்ப்பு மாத்திரமல்லாமல் திராவிட பாமர மக்கள் எதிர்ப்பையும் சமாளிக்க வேண்டியிருக்கிறது.
திராவிட மக்களுக்கும் இந்து மதம் என்ப தற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை; விளக்கமாக சொல்ல வேண்டுமானால் இந்து மதம் என்பதாக ஒரு மதமே இல்லை, இந்து மதத்திற்கென்று ஒரு குறிப்பிட்ட ஆதாரமோ, நீதியோ, கோட்பாடோ ஒன்றும் இல்லை. இந்து வேதம் என்பவை பெரிதும் ஆரியர்கள் நலத்துக்காகவே செய்யும் தெய்வப் பிரார்த்தனைகளேயாகும்.
அதுவும் தேவர்களின் அரசனான தேவேந் திரனை திராவிடர்களை அழிக்கும்படி வேண்டும் பிரார்த்தனைகளும், தங்களுக்கே மேன்மையைக் கொடுக்கும்படி வேண்டும். பிரார்த்தனைகளு மாகும். இந்துமத சாஸ்திரங்கள். ஸ்மிருதிகள் என்பவை ஆரியர்களை உயர்பிறப்பாகவும் திரா விடர்களை கீழ் ஜாதியாகவும் ஆக்கி அவை களுக்கு ஏற்றதன்மை. விதிகள் வகுத்த சட்டங் களேயாகும். இந்துமத புராணங்கள் என்பவை பெரிதும் ஆரியர் திராவிடர் ஆகிய இரு இனத் தாருக்குள்ளும், அக்காலத்தில் நடந்த போராட் டங்களை தங்கள் நலனுக்கு ஏற்ப கதைகளாக கற்பனை செய்து சித்தரித்த கட்டுக்கதைகளும், திராவிடர்கள் ஏதாவது சமுதாயக் கிளர்ச்சி நடத்தினால் அதை எப்படி அடக்கி ஒழிப்பது என்பதற்கு வழிகாட்டும் ஒருவகை வழி நூல் களுமேயாகும்.
இன்று இந்துக்கள் என்பவர்களில் திராவிடர் களுக்கு இந்து மதமாக இருப்பது இப்புராணங் களை வேதமாகக் கொண்டு, அதன் பாத்திரங் களைத் தெய்வமாகக்கொண்டு அவற்றின் நடத் தைகளை விசேஷ நாட்களாகவும், பண்டிகை களாகவும், உற்சவங்களாகவும் கொண்டாடுவது தானே ஒழிய மற்றபடி மனிதப் பொது நீதியோ சரிசமமான நடத்தைகளோ அல்ல.
இதற்கு அனுகூலமாக கோவில், குளம், நல்ல நாள், தீய நாள், பண்டிகை, விரதம், மோட்ச நரகம். மேல்லோகம் கீழ் லோகம் முதலாகிய கற்பனைகள் திராவிடர்களை மத ஆட்சி புரிகின்றன.
இவைகளில் இருந்து மீண்டால் ஒழிய திரா விடர்களுக்கு இழிவு நீங்குவதும், முன்னேற்ற மடைவதும் முடியவே முடியாத காரியம்.
திராவிடர்கள் என்பவர்கள் திராவிட நாட்டில் 100-க்கு 90 பேர்களாக இருந்து வருகிறார்கள். அதாவது சென்னை மாகாண மக்கள் 5 கோடி என்றால், இதில் 4லு கோடி மக்கள் திராவிட மக்கள் ஆவார்கள். இந்த 4லு கோடி மக்களில் கிட்டத்தட்ட 3லு கோடி மக்கள் சூத்திரர்களாக அதாவது நாலாவது ஜாதியாகவும், கிட்டத்தட்ட ஒரு கோடி மக்கள் பஞ்சமர்களாக அதாவது அய்ந்தாம் ஜாதியாகவும் ஆக்கப்பட்டு சமு தாயத்தில் கடை ஜாதியாகவும் இழிஜாதியாகவும், சமயம், சாஸ்திரம், ஸ்மிருதி, புராணம், இதிகாசம், கடவுள், சட்டம் ஆகியவைகளின் பேரால் செய்யப்பட்டு தாழ்த்தப்பட்டு கிடக்கின்றோம். இந்த இழி நிலை காரணமாகவே திராவிடர்களுக்கு கல்வியில்லை. வாழ்க்கையில், அரசியலில் சமுதாயத் துறையில் பதவியில்லை. 100-க்கு 90 பேர் உடலுழைப்பு பாட்டாளி கூலி மக்களாகவும் அடிமைகளாகவும் இருந்து, வயிறார சாப்பிட வகையின்றி துன்பம் அனுபவித்து வருகின்றோம். இந்த சமய சமுதாய இழிநிலையைப் போக்கிக் கொள்ள இந்த நாட்டிலேயே திராவிடர் கழகம் ஒன்றைத் தவிர வேறு யாருமே பாடுபடுவதில்லை. பாடுபட்டதாகவும் தெரியவில்லை. பாடுபடுவ தானாலும் அது பாடுபடுகிறவர்களுக்குப் பெருத்த கேடாக முடியும்படியான அளவுக்கு மேல் ஜாதிக்காரர்களுக்கு செல்வாக்கு இருப்பதால் யாரும் இதில் பிரவேசிக்கவே பயப்படுகிறார்கள். திராவிடர் கழகம் ஒன்றுதான் இந்த 25 ஆண்டு களாக பாடுபட்டுவருகிறது என்றாலும் நான் மேலே சொன்னதுபோல் இதற்கு பார்ப்பனர்கள் மாத்திரம் அல்லாமல் திராவிடர்களில் பலரும் எதிரிகளாக இருக்கிறார்கள். அதனாலேயே நாம் 25 ஆண்டுகளாகப் பாடுபட்டும் இன்னமும் சரியானபடி பயன்பட முடியவில்லை.
“நாம் உண்மையில் வெற்றி பெறவேண்டுமா னால், நம் முயற்சி பயனளிக்க வேண்டுமானால் மற்ற நாட்டவர்களைப்போல் மேலான ஒரு நிலையை அடையவேண்டுமானால் நாம் அனைவரும் ஒன்றுபட்டாக வேண்டும். திராவிடன் என்கிற உணர்ச்சி ஏற்படவேண்டும். ஒற்றுமைப்பட்டு ஒருமுகமாக முயற்சியில் ஈடுபட்டால் திராவிட நாடு அடைந்து நம் லட்சியங்கள் ஈடேறும்” என்பதாகக் கூறி மேலும் ஆதிதிராவிடர்களின் நிலை, திராவிட நாடு பிரிவினை ஆகிய விஷயங்கள் குறித்தும் விளக்க மாகக் கூறிவிட்டு, மற்றவைகளை தனது பின்னு ரையில் தெரிவிக்க இருப்பதாகக் கூறிக்கொண்டு தன் தலைமை முன்னுரையை முடித்துக் கொண்டார்.
‘விடுதலை’ 13.02.1950
«««
எனது அச்சம்
கடந்த 17, 18 ஆண்டு பொது வாழ்வில் எனக்கு எப்போதும் இம் மாதிரி தலைமை யேற்க வேண்டும் என்ற ஆசை இருந் ததில்லை. மக்களி டத்தில் விளம்பரம் பெற வேண்டும் என்ற ஆசை இருந்ததில்லை. ஏழெட்டு ஆண்டு களாக பொதுமக்களுக்கு என்னை நன்றாகத் தெரிந்திருக்கும். இந்த மாதிரியான நிகழ்ச்சிகளில் இருந்து தப்பித்துக் கொண்டு வந்திருக்கிறேன். ஆனால். இன்றைய நிலையில் எனக்கு இந்த மாதிரியான பொறுப்புக் கொடுக்கிறார்கள். எனக்கு அதில் விருப்பமில்லை. நம் தந்தை நம் இழிவைப் போக்க அல்லும் பகலும் அயராது, காடுமேடு சுற்றி மக்களுக்குப் பகுத்தறிவு போதித்து வரும் பெரியாரின் பக்கம் இருந்து அவருக்குத் தொண்டு செய்வதே எனது விருப்பம்.
இம்மாதிரியான பொறுப்புகளைப் பெற்றதால் மிக நல்லவர்களாய் இருந்தவர்கள்கூட இன்று கெட்டுள்ளார்கள். எனக்கு இம்மாதிரியான பதவிகள் கொடுக்கப்பட்டால் பின்னால் நானும் எங்கே கெட்டு விடுவேனோ என்று அஞ்சுகிறேன்.
‘விடுதலை’ 31.03.1950
«««
திராவிடர் கழகம்
நமக்கான இயக்கம்
திராவிடர் கழகம், நாட்டில் நம்முடைய சமுதாய மக்களுக்கே பாடுபடும் ஒரு ஸ்தாபன மாகும்.
காங்கிரசை எடுத்துக் கொண்டால் அது எல்லா மத மக்களுக்கும் பாடுபடுவதாகச் சொல்லிக் கொள்ளுகிறது. ஆனால், அந்தக் காங்கிரசில் செல்வாக்குப் பெற்றுள்ளவர்களும். பொருளும் பயனும் லாபமும் பெறுபவர்களும் பார்ப் பனர்கள்தான். காங்கிரசிலே உள்ள நம்மவர் களெல்லாம் பார்ப்பனர்களுக்கு கைக்கூலியாக இருக்கின்றார்களே தவிர, வேறில்லை. மற்றும் இந்த நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி என்று தங்களை அழைத்துக் கொள்ளும் கட்சியினரும் பார்ப் பனரின் ஏஜெண்டாகவே இருக்கின்றார்கள். அதனால்தான் நம் மக்களுக்காகவே, ஒரு ஸ்தாபனம் தேவை என்பதன் அவசியத்தைக் குறித்துத்தான் திராவிடர் கழகம் ஏற்பட்டிருக்கிறது.
இக்கழகத்துக்காக ஏற்பட்டுள்ள இந்தக் கொடியிலேயே நம் சமுதாயத்திலுள்ள இழிவைக் குறிக்கும் அறிகுறியாக கறுப்பு நிறத்தை வைத்துள்ளோம். நமது இழிவு ஒழிந்தவுடன் நமது கொடியும் மாறும். நீங்கள் திராவிடர் கழகத்தின் கொள்கைகளை நன்கு உணர்ந்து அதற்குத் தகுந்தபடி நடக்க வேண்டும்.’
‘விடுதலை’ 09.05.1954
«««
திராவிடர் கழகத்தின்
சோர்விலா தொடர்பணி
“நம்மைப் பிறவி இழிவுள்ள மக்களாக ஆக்கி வைத்திருக் கின்ற ஜாதி முறையினை ஒழிப்பது தான் திராவிடர் கழகத்தின் குறிக்கோளாகும். அதற்கு என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கத் திராவிடர் கழகம் தயாராகவுள் ளது. திராவிடர் கழகம் சென்ற ஆண்டு நடத்திய ஜாதியைப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டத்தை எரித்து, சுமார் 3,000- த்துக்கும் மேற்பட்ட கழகத்தினர் பலவித கடுங்காவல் தண்டனை அடைந்து சிறை சென்றனர். இன்னும் பலர் சிறையில் வாடிக் கொண்டுதான் இருக்கின்றனர். 15 தோழர்களுக்கு மேல் சிறைக்கு உள்ளும் வெளியிலும் பிணமாக ஆகியிருக்கின்றனர்.
இதனால் நாம் சலிப்போ, மனச் சோர்வோ அடைந்து விடவில்லை. சுயநலம் அற்ற உண் மைத் தொண்டர்களுக்கு ஒருபோதும் சோர்வு மனப்பான்மை ஏற்படாது.
இதற்கு அறிகுறியாக, அடுத்து நடக்க இருக்கும் “சுதந்திரத் தனித் தமிழ்நாடு” போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான கழகத் தோழர்கள் ஈடுபட முன்வரவேண்டும். இதற்குத் தயங்கப் போவ தில்லை.”
(பாபநாசம் தாலுகா, கோவிந்தக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்னை மணியம்மையார் அவர்கள் தலைமை வகித்து ஆற்றிய உரை) ‘விடுதலை’ 15.06.1959
«««
அய்யா அவர்கள் போட்டுத் தந்திருக்கிற பாதையில்
கழகத் தோழர் களின் குன்றாத ஆர் வத்துக்கும், உணர்ச் சிக்கும் என் நன்றி யைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக வும் பணிவன்புடன், நிச்சயமாக நாமும் கூட்டங்கள் ஏற்பாடு செய்தாக வேண்டும். அதில் எவ்விதச் சந் தேகமும் இல்லை. ஆனால், “இரங்கற் கூட்டமாக அல்ல”. இதயத்தோடு இதயமாகக் கலந்து வாழ்ந்த நம் அருமைத் தலைவரை அன்புத் தந்தையை இழந்து தவிக்கும் நாமெல்லாம் மற்றவர்களி டமிருந்து இரங்கலை, அனுதாபத்தைப் பெற்றுக் கொள்கிற நிலையிலே தான் இருக்கிறோமே தவிர, யாருக்கு நம் இரங் கலையோ, அனுதாபத்தையோ, ஆறுதலையோ தெரிவித்துவிட முடியும். சொல்ல முடியும்? எனவே தான், நாம் நடத்துகிற கூட்டங்கள் ‘இரங்கல் கூட்ட’மாக இல்லாது அய்யா அவர்கள் விட்டுச் சென்ற பணியினை, அவர் போட்டுத் தந்திருக்கிற பாதையிலே சென்று முடித்திட நாம் உறுதி எடுத்துக் கொள்ளும் கூட்டங்களாக அமைத்திட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதுவே முறை என்றும் நினைக்கிறேன்.
அன்னை மணியம்மையார்
‘விடுதலை’, 29.12.1973