சர்க்கரை நோய்க்கு முடிவு ஏற்படுமா?

9 Min Read

மருத்துவம்

முனைவர்
இ.ஜே.சுந்தர்

மனிதன் தோன்றிய நாள் முதல் கோடிக்கணக்கானோரைக் கொன்று குவித்த கொடிய நோய்கள் சிலவற்றை அண்மைய மருத்துவ அறிவியல் உலகை விட்டே விரட்டி அடித்துள்ளது. மேலும் சிலவற்றை இனி வராமல் தடுத்துள்ளது. வந்த சிலவற்றைக் கட்டுப்படுத்தி அடக்கியுள்ளது.

1980 முதல் பெரியம்மை என்ற வைசூரி உலகில் இனி இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. போலியோ என்ற இளம்பிள்ளை வாதம் 99% ஒழிக்கப்பட்டுவிட்டது. பிளேக், தொழுநோய், காசநோய், கிரந்தி என்ற / சிபிலிஸ் ஆகியன வந்தால் மரணம் நிச்சயம் என்ற நிலை நீங்கி இன்று மிக எளிதாக இவை குணப்படுத்தப் படுகின்றன. தொண்டை அடைப்பான் (Diphtheria), ரணஜன்னி (tetanus), கக்குவான் இருமல் (Pertussis), அம்மை நோய்கள் முதலியவற்றை வரவிடாமல் தடுப்பூசிகள் முடக்கிவிட்டன.

கோடிக் கணக்கான மக்களைக் காவு வாங்கியும், நடைபிணமாக்கியும் வந்த சர்க்கரை நோய் மருத்துவ அறிவியலுக்குச் சவாலாக இருந்து வந்தது. குறிப்பாக முதல் வகை சர்க்கரை நோய் ஒரு மரண தண்டனை போலானது. இச்சூழலில் 1921இல் கனடாவில் டாக்டர் ஃபிரெட்ரிக் பாண்டிங் (Dr. Frederick Banting) என்ற இளம் மருத்துவர், உடலியல் பேராசிரியர் ஜான் மெக்லியோட் (John Macleod) மற்றும் இரு அறிவியலாளர்களின் துணையோடு கணையத்திலிருந்து இன்சுலினை தனியாகப் பிரித்தெடுக்கும் புரட்சிகரமான சாதனையை நிகழ்த்தினார். டொராண்டோ மருத்துவமனையில் சர்க்கரை நோய் முற்றி மரணப் படுக்கையில் இருந்த லியோனார்ட் என்ற 14 வயது சிறுவனுக்கு ஜனவரி 1922இல் இந்த இன்சுலின் ஊசி செலுத்தப்பட்டது. அடுத்த 24 மணி நேரத்திற்குள் அவன் உயிர் பிழைத்தான். இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்ட புதிதில் டொராண்டோ மருத்துவமனையின் ஒரு பெரிய வார்டில் சர்க்கரை நோயால் சுயநினைவிழந்தும் சாகும் தருவாயிலிருந்த அய்ம்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் படுக்கவைக்கப்பட்டிருந்தனர். அவர்களின் பெற்றோர் அழுதுகொண்டே இறுதி நாட்களுக்காகக் காத்திருந்தனர். பாண்டிங் குழுவினர் அந்த வார்டுக்குள் சென்று, ஒவ்வொரு குழந்தைக்கும் புதிய இன்சுலின் ஊசியைச் செலுத்திக் கொண்டே வந்தனர். அவர்கள் கடைசிப் படுக்கையில் இருந்த குழந்தைக்கு ஊசி போட்டு முடிப்பதற்குள், முதல் ஊசி போடப்பட்ட குழந்தைகள் கோமாவிலிருந்து விழித்து, எழுந்து உட்காரத் தொடங்கினர். இந்த நிகழ்வு மருத்துவ உலகின் மிக உணர்ச்சிகரமான, உயிர்த்தெழுதல் (Resurrection) போன்ற ஒரு பேரதிசயமாக இன்றும் வர்ணிக்கப்படுகிறது.

1923இல் பாண்டிங் மற்றும் மெக்லியோட் ஆகியோருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இன்சுலின் காப்புரிமையை வைத்துப் பாண்டிங் நினைத்திருந்தால் உலகப் பெரும் கோமசுவரராக இருக்க முடியும். ஆனால், “இன்சுலின் எனக்குச் சொந்தமானது அன்று; அஃது உலகிற்குச் சொந்தமானது” என்று கூறி, அதன் காப்புரிமையை வெறும் 1 டாலருக்கு டொராண்டோ பல்கலைக் கழகத்திற்குக் எழுதித் கொடுத்தார். இதனால் உலகம் முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கும் இன்சுலின் மிக மலிவான விலை கிடைக்க வழிவகை பிறந்தது. இத்தகையோரே என்றும் நினைத்துப் போற்றப்பட வேண்டிய மாமனிதர்கள் ஆவர்.

சர்க்கரை நோய் ஏன் வருகிறது?

நாம் உண்ணும் உணவு குளூக்கோசாக மாற்றப்பட்டு, உடலின் செல்களுக்கு ஆற்றலை வழங்குகிறது. கணையத்தில் சுரக்கும் இன்சுலின் (Insulin) என்ற ஹார்மோன்தான். இந்தச் சர்க்கரையை இரத்தத்திலிருந்து பிரித்து செல்களுக்கு அனுப்ப உதவுகிறது. உடலில் இன்சுலின் சரியாகச் சுரக்காத போது, அல்லது வேலை செய்யாத போது சர்க்கரை நோய் ஏற்படுகிறது. சர்க்கரை நோயில், கணையத்தில் உள்ள இன்சுலினைச் சுரக்கும் பீட்டா செல்கள் சிதைந்திருக்கும் அல்லது செயலிழந்திருக்கும்.

இதில் 3 வகை உண்டு

வகை-1: கணையத்தில் இன்சுலின் சுரப்பு முற்றிலும் நின்று விடுவது. இதில் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலமே கணையச் செல்களை அழித்து விடுகிறது. வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசி தேவைப்படும் இத்தகையோர் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் ஆவர். 5% – 10% நோயாளிகள் இத்தகையோர். மரபணு மற்றும் பரம்பரை தன்மை இதற்கு முக்கிய காரணம்.

வகை-2: போதிய அளவு இன்சுலின் சுரக்காமை அல்லது இன்சுலின் சுரந்தாலும், உடல் செல்கள் அதனைச் சரியாகப் பயன்படுத்தாத நிலையே இதற்குக் காரணம். இத்தகையோர் 90% முதல் 95% வரை உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் 30 வயதைத் கடந்தவர்கள். பரம்பரை தன்மை, உடல் பருமன், சோம்பேறித்தனமான வாழ்க்கை முறை, தவறான உணவுப் பழக்கவழக்கங்கள் ஆகியவை இதன் முக்கிய காரணங்களாகும்.

வகை-3: கர்ப்ப காலத்தில் தற்காலிகமாக ஏற்படும் சர்க்கரை நோய். பிரசவம் முடிந்த 2 வாரங்களுக்குள் இன்சுலின் சுரப்பது இயல்பாகிவிடும்.

உலகில் இன்று 83 கோடி மக்கள் நீரிழிவு நோய்க்கு ஆளாகி உள்ளனர். இறப்பு விகிதத்தில் சர்க்கரை நோய் 9ஆவது இடத்தில் உள்ளது. சிறுநீரக செயலிழப்பு, மாரடைப்பு, பக்கவாதம், கண் பார்வை இழப்பு ஆகிய வற்றிற்கு இது முதன்மைக் காரணமாகவும் உள்ளது. மிகுந்த பாதிப்புக்குள்ளானோர் தெற்காசிய மக்களே. இந்தியாவில் மட்டும் 10.1 கோடி பேர் சர்க்கரை நோயினர். முன் சர்க்கரை நோய் நிலையில் 13.6 கோடி பேர் உள்ளனர். சீனா 14.8 கோடி பேருடன் முதலிடம் வகிக்கிறது. மக்கள் விகிதப்படி பாதிப்பு பாகிஸ்தானில் மிகுதி. அங்கு 30.8% பேர்கள் சர்க்கரை நோயாளிகள். தமிழ்நாட்டில் 1.2 கோடி பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1 கோடி பேர்கள் முன் சர்க்கரை நோய் நிலையினர். பாதிப்பில் தமிழ்நாடு இந்தியாவில் 6ஆவது இடத்திலும் கோவா முதலிடத்திலும், யு.பி. கடைசி இடத்திலும் உள்ளன.

இயற்கை மருத்துவங்கள்

அலோபதி என்ற அறிவியல் அடிப்படையிலான மருந்துகளைத் தவிர்த்து பாகற்காய், நாவற்கொட்டை, சிறுகுறிஞ்சான், வெந்தயம் முதலியவற்றால் இயற்கை மருத்துவ முறையில் சர்க்கரை நோயைக் குணப்படுத்த முடியுமா? யோகாசனம், நடைப்பயிற்சி, அக்குபஞ்சூர் முதலிய மாற்று மருத்துவ சிகிச்சைகள் போன்றவற்றை சர்க்கரை நோயை விரட்டி அடிக்க முடியாதா? என்ற கேள்வி பலருக்கும் எழக்கூடும். இவை சர்க்கரை நோய்க்குத் துணை மருத்துவமாகப் பயனாகும் என்பதும் இன்சுலின் தேவையை குறைக்கும் என்பதும் உண்மை. ஆனால், சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான ஆணிவேர் காரணங்களை இந்த மூலிகைகளாலும், பயிற்சிகளாலும் மாற்றியமைக்க முடியாது என்பதே உண்மையிலும் உண்மை.

வகை 1 – சர்க்கரை நோயில் இன்சுலின் சுரக்கும் கணையப் பீட்டா செல்கள் முற்றிலும் அழிந்து போயிருக்கும். அழுகிய செல்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் திறன் எந்த மூலிகைக்கும் பயிற்சிக்கும் இல்லை. இதற்கு இன்சுலின் ஊசி மட்டுமே தீர்வு. வகை-2 சர்க்கரை நோயில் உடல் செல்கள் இன்சுலினை ஏற்க மறுக்கின்றன. மூலிகைகளோ பயிற்ிகளோ சர்க்கரை அளவைத் தற்காலிகமாகக் குறைக்குமே தவிர, செல்களின் இன்சுலின் எதிர்ப்பை நிரந்தரமாக மாற்றாது. மூலிகைகளையும் கூட, நீண்ட காலம் தொடர்ந்து உட்கொள்ளும்போது, அவற்றைச் சுத்திகரிக்கும் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் கடுமையாகச் சேதமடையக்கூடும்.

போலி மருத்துவம்

‘சர்க்கரை நோயை 100% நிறுத்திக் காட்டுகிறேன்’ என்று கவர்ச்சி விளம்பரம் செய்வோர் சொன்னபடி நிரூபித்தால் அவர்களுக்கு நோபல் பரிசு காத்திருக்கிறது. உலகெங்கும் நீரிழிவை நீர்மூலமாக்க ஆண்டுக்கு ரூ.1.7 லட்சம் கோடி செலவில் செய்யப்படும் தீவிர ஆய்வுகளை இவர்கள் கேலிக் கூத்தாக்குகிறார்கள். உள்ளூர் லேகிய வியாபாரிகளும், வாட்ஸ்அப் மேதைகளும், போலி மருத்துவர்களும் விடுக்கும் கவர்ச்சி மருத்துவத்தில் மயங்கி நவீன மருத்துவ மாத்திரைகளைத் திடீரென நிறுத்திவிட்டு, முற்றிலும் மாற்று மருத்துவத்திற்கு மாறுவோர் உளர். இதனால் மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகச் செயலிழப்பு, பார்வை இழப்பு முதலியவற்றிற்கு ஆளாகி ஆயிரக்கணக்கானோர் மரணத்தைத் தழுவிவரும் பரிதாபம் தொடர்கதையாகி வருகிறது. நவீன மருத்துவரின் ஆலோசனைப்படி உடற்பயிற்சி, சர்க்கரை நோய்க்கேற்ற உணவு, அவ்வப்போது சர்க்கரை அளவைச் சரிபார்த்தல், சரியான வாழ்க்கை முறை இவற்றுடன் மருந்துகளையும் உட்கொண்டால் சர்க்கரை நோயாளிகள் நூறாண்டுகள்கூட வாழலாம்.

உலகம் முழுவதும் 2024இல் சர்க்கரை நோயாளிகள் செய்த மருத்துவ செலவு ரூ.96 இலட்சம் கோடி ஆகும். எனவே, மருந்து வணிகம் இலாப நோக்கத்திற்காகச் சர்க்கரை நோய் ஆய்வுகளைத் தாமதப்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. நோயைக் குணப்படுத்துவதைவிட மேலாண்மை செய்வதிலேயே நிறுவனங்கள் மிகுந்த கவனம் செலுத்துகிறார்கள் என்ற விமர்சனமும் உள்ளது. இதை மீறியும் நீரிழிவு ஆய்வில் உலக நாடுகள் இதற்காகப் பெருமளவில் செலவிட்டு வருகிறார்கள். ஆண்டுதோறும் சர்க்கரை நோய் ஆய்வுகளுக்குத் தோராயமாக அமெரிக்கா ரூ.12,500 கோடியும், சீனா ரூ.6,500 கோடியும், இந்தியா ரூ.850 கோடியும் செலவிடுகின்றன.

ஆய்வுகளின் விளைவாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய மருத்துவ முறைகளில் சிறப்புக்குரியவை வருமாறு:

(1) நாள்தோறும் ஊசி போடுவதற்குப் பதிலாக, வாரத்திற்கு ஒருமுறை மட்டும் Awiqli (Insulin icodec) என்ற இன்சுலினுக்கு 2026இல் அனுமதி வழங்கப் பட்டுள்ளது. (2) ஊசியாக மட்டுமே போடப்பட்ட Semaglutide மருந்துகள், தற்போது அதிக ஆற்றல் வாய்ந்த மாத்திரைகளாகவும் (Ozemic Tablets) பயன்பாட்டிற்கு வரத் தொடங்கியுள்ளன. (3) மாத்திரைகளுக்கு மாற்றாக, ஊசி இல்லாத இன்சுலினைத் தேடுபவர்களுக்காக உள்ளிமூக்கும் இன்சுலின் பவுடர் (inhaled insulin) தொழில்நுட்பம் வந்துள்ளது. இந்தியாவில் அண்மையில் Cipla நிறுவனம் Afrezza என்ற பெயரில் இன்சுலின் பவுடரை அறிமுகப்படுத்தியுள்ளது. (4) தொடர் குளூக்கோஸ் கண்காணிப்புக் கருவிகள் CGM தோலில் ஒட்டப்படும் சிறிய சென்சார்கள் மூலம் ஊசி குத்தாமல் 24 மணி நேரமும் சர்க்கரை அளவைக் கண்காணித்து, கைப்பேசிச் செயலிகளுக்குத் தகவல்களை அனுப்பு கின்றன. தற்போது குளூக்கோசுடன் சேர்த்து கீட்டோன் களையும் கண்காணிக்கும் இரட்டைக் கண்காணிப்பு சென்சார்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. (5) செயற்கை கணையம்: இது சி.ஜி.எம். சென்சார் மற்றும் இன்சுலின் பம்ப் இரண்டையும் ஒருங்கிணைக்கும் ஒரு தானியங்கி அமைப்பாகும். உடலின் சர்க்கரை நிலையைதானே கணக்கிட்டு, தேவைக்கேற்ப இன்சுலினைத் துல்லிய மாகச் செலுத்துகிறது.

நீரிழிவை முற்றிலுமாக ஒழிக்கும் ஆய்வுகள் தற்போது தீவிரமடைந்து வருகின்றன. உலகளாவிய சோதனைக்கு அமெரிக்க அரசின் Clinical Trials.gov இணையதளத்தையும், இந்தியாவில் நடக்கும் சோதனைகளுக்கு ICMR – CTRI (Clinical Trials Registry – India) இணையதளத்தையும் காணலாம்.

  1. நீரிழிவை முழுமையாக ஒழிக்கும் முயற்சியில் மரபணு மாற்றப்பட்ட ஸ்டெம் செல் சிகிச்சை (Gene-Edited Stem Cells) மற்றும் அதோடு இணைந்த காப்ஸ்யூல்ஸ் பாதுகாப்பு உறை தொழில்நுட்பம் ஆகிய இரண்டும் புரட்சிகரமான கண்டுபிடிப்புகள் ஆகும். சீன விஞ்ஞானிகள் ஸ்டெம் செல் தொழில்நுட்பம் மூலம் 25 ஆண்டுகளுக்கு மேலாக வகை-2 நீரிழிவால் பாதிக்கப்பட்ட 59 வயது முதியவருக்குச் செயற்கையாக உருவாக்கப்பட்ட கணைய செல்களைப் பொருத்தி சர்க்கரை நோயைப் பின்னடையச் செய்து சாதனை படைத்துள்ளனர். நோயாளியின் உடலிலிருந்தே ஸ்டெம் செல்கள் என்ற முதன்மைச் செல்கள் பிரித்தெடுக்கப்பட்டு ஆய்வகத்தில் வேதியியல் மாற்றங்கள் மூலம் இன் சுலினைச் சுரக்கும் கணைய பீட்டா செல்களாக (Pancreatic Beta Cells) மாற்றப்படுகின்றன. புதிய பீட்டா செல்கள் நோயாளியின் கல்லீரல் அல்லது கணையப் பகுதியில் செலுத்தப்படுகின்றன. எனவே, இன்னும் சில ஆண்டுகளில் மருத்துவ சந்தைக்கு வரவிருக்கும் சிகிச்சைகளில் காப்ஸ்யூலில் அடைக்கப்பட்ட மரபணு மாற்ற ஸ்டெம் செல்கள் தான் நீரிழிவு நோய்க்கான உலகளாவிய முதன்மைத் தீர்வாகக் கருதப்படுகிறது.

2.பன்றியின் கணையச் செயல்பாடுகளைப் பயன் படுத்தி நீரிழிவைக் குணப்படுத்தும் ஆய்வுகளும் நடந்து வருகின்றன.

  1. கல்லீரலில் உள்ள நரம்புப் பாதைகளை நோக்கி மென்மை யான மீயொலிகளைச் (Ultra Sound) செலுத்தி, உடலின் இன்சுலின் ஏற்கும் திறனை இயற்கையாகவே மிகதியாக்கி, வகை-2 நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  2. எதிர்காலத்தில் ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்பே, அதன் டி.என்.ஏ.-வில் இருக்கும் சர்க்கரை நோய் சார்ந்த மரபணுக்களை நீக்கும் தொழில்நுட்பம் முழுமையான மருத்துவப் பயன்பாட்டிற்கு வரும்போது வகை-1 நீரிழிவு முற்றிலும் நீங்கும்.

சர்க்கரை நோய்க்கு எப்போது முழுமையாகச் சாவுமணி அடிக்கப்படும்?

வகை-1 அய் இன்னும் 10-15 ஆண்டுகளிலும், வகை-2 அய் அடுத்த 5-10 ஆண்டுகளில் உலகை விட்டே ஒழிக்க முடியும் என்று அறிவியல் உலகம் எதிர்பார்க்கிறது. குவாண்டம் கணினி போன்றவற்றின் துணையால் இன்னும் விரைவாக இது நிகழக்கூடும்.அடுத்த தலைமுறை சர்க்கரை நோயின்றி வாழ்வது உறுதி.

(இக்கட்டுரை குடும்பநல மருத்துவரும் சர்க்கரை நோய்க்குத் திறம்படச் சிகிச்சை அளிப்பவருமான டாக்டர் பொன் புத்தரின் சரிபார்ப்பிற்குப் பின் வெளியிடப் படுகிறது.)

நன்றி: ‘முகம்’ ஜூலை – ஆகஸ்டு 2026

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *