கருநாடகாவில் இருந்து காவிரி நீரைப் பெறுவது சவாலாக உள்ளது: அமைச்சர் ஆனந்த் விளக்கம்!

2 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஆக. 8– கருநாடகாவிடம் இருந்து காவிரி நீரைப் பெறுவது சவாலாக இருப்பதாக சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (7.8.2026) காவிரி விவகாரம் குறித்த சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் இறுதியில் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் பேசியதாவது: காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆணை உட்பட பல்வேறு ஆணைகள் மூலம் தமிழ்நாட்டின் உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது.

எனினும், மாதவாரியாக கருநாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்குரிய பங்கை பெறுவது பல ஆண்டுகளாகவே சவாலாக உள்ளது. இந்நிலையில் காவிரி நதிநீர் பங்கீடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து கருநாடக முதலமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாடு முதலமைச்சரால் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையை பெங்களூருவில் ஆகஸ்ட் 3ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே அன்றைய  நாள் பேச்சுவார்த்தைக்கு உகந்ததல்ல. மற்றொரு நாளில் நாம் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று கருநாடக முதலமைச்சர் கூறியதால் குறிப்பிட்ட நாளில் சந்திப்பு நடைபெறவில்லை. கருநாடகாவின் 4 முக்கிய அணைகளுக்கும் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.

அதேநேரத்தில், மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து மேம்பட்டு வருகிறது. எனினும், கருநாடகாவில் இருந்து தொடர்ச்சியான நீர்வரத்து, மேட்டூர் அணையின் நீர் இருப்பு, டெல்டா பாசனத் தேவைகள் மற்றும் குடிநீர் பாதுகாப்பு ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்து ஆய்வு செய்து, நாள்தோறும் நிலைமையை தமிழ்நாடு அரசு கண்காணித்து வருகிறது.

சூழ்நிலைக்கு தகுந்தபடி பாசனத்துக்கு மேட்டூர் அணை திறப்பது பற்றி முடிவெடுக்கப்படும். காவிரி உரிமை தொடர்பாக எந்த நிலையிலும் தமிழ்நாடு அரசு சமரசம் செய்துகொள்ளாது.

சட்ட ரீதியாகவும், தொழில் நுட்ப ரீதியாகவும், நிர்வாக ரீதியா கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. டெல்டா விவசாயிகளின் நலன், குடிநீர் பாதுகாப்பு மற்றும் தமிழ்நாட்டின் சட்டப்பூர்வமான காவிரி உரிமை ஆகியவற்றை முழுமையாக பாதுகாப்பதில் உறுதியாக செயல்பட்டு வருகிறோம்.

காவிரிப் படுகையில் புதிய நீர்ப்பாசனம் மற்றும் பல்நோக்கு திட்டங்கள் தயாரிப்பதற்கான வழிகாட்டுதல்களை ஒன்றிய நீர்வளக் குழுமம் 2025 டிசம்பரில் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அனுப்பியது.

காவிரி படுகை ஒரு பற்றாக்குறை படுகையாகும். எனவே, எவ்வித புதிய திட்டம் செயல்படுத்துவதற்கும் வாய்ப்பில்லை என்பதால் இந்த வழிகாட்டுதல்களை திரும்பப் பெறுமாறு ஒன்றிய நீர்வளக் குழுமத்தையும், ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகத்தையும் கேட்டுக் கொண்டோம்.

அதேநேரம் அந்த வழிகாட்டுதல் களை திரும்பப் பெறாததால் கருநாடகா இவற்றை பயன்படுத்தி புதிய திட்டம் தயாரிக்க வாய்ப்புள்ளது.

எனவே, இந்த வழிகாட்டுதல்களை திரும்பப்பெறுமாறு ஒன்றிய நீர்வளக் குழுமத்துக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் கடந்த 3ஆம் தேதி ஒரு ரிட் மனுதாக்கல் செய்யப் பட்டுள்ளது.

தொடர்ந்து காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் மேகதாது அணையைத் தடுப்பது உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளில் தமிழ்நாடு அரசு உரிய கவனம் செலுத்தி, மாநிலத்தின் உரிமையை நீர்த்துபோகவிடாமல் தொடர் நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *