சென்னை, ஜூலை 18– பத்தாம் வகுப்பு முடித்த பள்ளி மாணவர்களை “NEET-PA” (நீட்- ப்ரீ ஆயுர்வேதா) என்ற புதிய அகில இந்திய நுழைவுத் தேர்வுக்கு உட்படுத்தி, சமஸ்கிருதத்தை மய்யப்படுத்திய “குருகுல” கல்வி முறையைத் திணிக்க முயலும் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு இந்திய மாணவர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
15 வயதிலேயே
7½ ஆண்டு குருகுலப் படிப்பு
7½ ஆண்டு குருகுலப் படிப்பு
தேசிய இந்திய மருத்துவ முறை ஆணையத்தின் (NCISM) புதிய விதிமுறைகளின்படி, 10-ஆம் வகுப்பு முடித்த உடனேயே 7½ ஆண்டுகள் கொண்ட ப்ரீ ஆயுர்வேதா (Pre-Ayurveda) என்ற குடியிருப்புப் படிப்பைத் திணிப்பது பள்ளி மாணவர்களின் உயர்கல்விப் பாதையை அடியோடு முடக்கும் செயல் என்று இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் சி. மிருதுளா, மாநிலச் செயலாளர் தவு.சம்சீர் ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
“ஆயுர்வேத குருகுலம்” எனப் பெயரிடப்பட்டுள்ள இக்கல்வி நிறுவனங்களை டில்லியில் உள்ள மத்திய சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்துடன் மட்டுமே இணைக்க வேண்டும் என்ற விதிமுறை, கூட்டாட்சித் தத்துவத்திற்கும் சமூகநீதிக்கும் எதிரானது என்றும் அவர்கள் விமர்சித்துள்ளனர்.
தமிழ் புறக்கணிப்பு; சமஸ்கிருதத்திற்கு முன்னுரிமை
தற்போது வெளியிடப்பட்டுள்ள 2026-–2027 கல்வியாண்டுக்கான “நீட்- பிஏ” தேர்வு அறிவிப்பில், இத்தேர்வு சமஸ்கிருதம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செம்மொழியான தமிழ் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை எளிய மாணவர்கள் பெருமளவில் தமிழ்வழியில் பயின்று வரும் சூழலில், அவர்களுக்குத் தாய்மொழியில் தேர்வு எழுத வாய்ப்பளிக்காமல் சமஸ்கிருதத்தை முன்னிறுத்துவது ஒன்றிய அரசின் திட்டமிட்ட மொழிப் பாரபட்சத்தை வெளிப்படுத்துகிறது. இது தமிழ்நாட்டின் தனித்துவமான சித்தா போன்ற மருத்துவ அறிவு மரபுகளையும் புறக்கணிப்பதாகும்.
பெருகும் கோச்சிங் சென்டர் கலாச்சாரம்!
ஏற்கெனவே நீட் (NEET-UG) தேர்வு மூலம் மேல்நிலைக் கல்வி மாணவர்களை கோச்சிங் சென்டர் கலாச்சாரத்திற்குள் தள்ளிய ஒன்றிய அரசு, தற்போது பள்ளிக் கல்வியின் ஆரம்பக் கட்டத்திலேயே மாணவர்களை நுழைவுத் தேர்வுக்குத் தயாராக நிர்பந்திக்கிறது. அறிவியல் அணுகுமுறைக்கு மாற்றாக, மருத்துவக் கல்வியை ஒரு குறிப்பிட்ட பண்பாட்டு அடையாளத்துடனும் “குரு-சிஷ்ய” முறையுடனும் இணைப்பது ஆபத்தானது.
கோரிக்கைகள்
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான “நீட் – பிஏ” நுழைவுத் தேர்வை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
மருத்துவக் கல்வியில் சமஸ்கிருத மயப்படுத்தலையும், குருகுலக் கல்வி மாதிரியை ஒருதலைப்பட்சமாகத் திணிப்பதையும் நிறுத்த வேண்டும்.
மாநில உரிமைகளைப் பறிக்காமல், மாநில அரசுகள், மாணவர் அமைப்பு கள் மற்றும் மருத்துவ வல்லுநர்களுடன் விரிவான ஆலோசனை நடத்த வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
