காரைக்குடி, ஆக. 4- சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே ஜெயங்கொண்டநிலை கிராமத்தில் 36 ஏக்கர் பரப்பளவில் கிரசர் கல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஜெயங்கொண்டநிலை, சித்தமல்லிப்பட்டி உள்ளிட்ட 5 கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த 31ஆம் தேதி கனிமவளத்துறை அமைச்சர் பிரபு, ஜெயங்கொண்டநிலை கிராமத்துக்கு நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது பேசிய அமைச்சர், ‘‘குவாரி அமைக்க அனுமதி கோரி மனுக்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளன. இதுவரை எந்த குவாரிக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. குவாரிக்கு அனுமதி வழங்கியதாக பரவும் தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம்’’ என்றார். தொடர்ந்து அங்கு நின்றிருந்த பெண்களிடம், ‘‘நீங்கள் நல்லா இருக்கிறீர்களா’’ என அமைச்சர் கேட்டபோது, அங்குள்ள பெண்கள், அமைச்சரிடம் ‘‘நாங்கள் ஒன்றும் நல்லா இல்லை’’ என கூறினர். இதை எதிர்பாராத அமைச்சர் பிரபு அங்கிருந்து உடனே கிளம்பிச் சென்றார்.
