திருச்சி, ஆக. 2- திருச்சி கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில், கடந்த ஜூலை 19 ஆம் நாள் அரவிந்த் காவல் அகாடமி சார்பில் “கற்பனையின் சிறகுகள்” (Wings of Imagination) என்னும் சிறப்பு கருப்பொருளை மய்யமாகக் கொண்டு மாபெரும் ஓவியக் கலை மற்றும் படைப்பாற்றல் போட்டி மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது.
இம்மாபெரும் நிகழ்வில் அய்நூறுக்கும் மேற்பட்ட இளம் ஓவியக் கலைஞர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து 1 மணி 1 நிமிடம் 1 வினாடி வரை சோர்வின்றி விடாமுயற்சியோடு ஓவியம் வரைந்து அவர்கள் அனைவரும் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தனர். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டு தங்களது தனித்துவமான கலைத் திறமையை உலகிற்கு வெளிப்படுத்தினர்.
இளம் வயதிலேயே அயராத முயற்சியை மேற்கொண்டு உலக சாதனைச் சான்றிதழுடன் தங்கப் பதக்கமும் வென்று, நமது பள்ளிக்கும் திருச்சி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ள இளம் சாதனையாளர்களின் விவரங்கள்:
எம். வருண் வைரம் – 7 ஆம் வகுப்பு
எம். சிவசிறீ வைரம் – 3 ஆம் வகுப்பு
டி. ரைஃபா அன்சாரி – 4 ஆம் வகுப்பு
டி. அரிஷ்ஃபா அன் சாரி – 1 ஆம் வகுப்பு
பள்ளியின் நற் பெயரை உயரச் செய்த இந்தச் சின்னஞ்சிறு சாதனையாளர்களின் வெற்றிக்குப் பக்கபலமாய் நின்று வழிகாட்டிய அன்புப் பெற்றோருக்கும், அரவணைத்து ஊக்க மளித்த பள்ளித் தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரிய பெருமக்களுக்கும் அனைத் துத் தரப்பினரிடமிருந்தும் பாராட்டுகளும் வாழ்த்து களும் குவிந்து வருகின்றன.
