சென்னை, ஆக.2-– சென்னையில் கடும் வெப்பத்தால் 1.45 லட்சம் வேலைவாய்ப்புகள் பாதிக்கும் என்று உலக வங்கி ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
முழுநேர வேலைவாய்ப்பு
பருவநிலை மாற்றத்தால் இந்திய நகரங்களில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் திறந்த வெளியில் பணிபுரிவது பாதுகாப்பற்றதாக மாறுவதுடன், தொழிலாளர்களின் வேலை நேரமும் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் கடும் வெப்பத்தால் வேலைவாய்ப்பு மற்றும் பொருளா தாரத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உலக வங்கி ஆய்வறிக்கை வெளி யிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:–
கடும் வெப்பத்தால் இந்தியாவின் முக்கிய நகரங்களில் 2030ஆ–ம் ஆண்டுக்குள் 10 லட்சத்துக்கும் அதிகமான முழுநேர வேலைவாய்ப்புகளுக்கு இணையான வேலை நேரம் இழக்கப்படும் அபாயம் உள்ளது. சென்னையில் 2030ஆ–ம் ஆண்டுக்குள் 1 லட்சத்து 40 ஆயிரம் முழுநேர வேலைவாய்ப்புகளுக்கு இணையான வேலை நேரம் இழக்கப் படலாம்.
2050ஆ–ம் ஆண்டில் இது 1 லட்சத்து 45 ஆயிரமாக அதிகரிக்கும். டில்லியில் 2030ஆ–ம் ஆண்டில் 2 லட்சத்து 41 ஆயிரம் வேலைவாய்ப்புகளுக்கு இணையான வேலை நேரம் பாதிக்கப்படும். 2050இ–ல் இது 4 லட்சத்து 18 ஆயிரமாக உயரும்.
வேலை நேரம்
கொல்கத்தாவில் இந்த எண்ணிக்கை முறையே 3 லட்சத்து 17 ஆயிரம் மற்றும் 3 லட்சத்து 41 ஆயிரமாக இருக்கும். மும்பையில் 2030இ–ல் 1 லட்சத்து 41 ஆயிரம் வேலைவாய்ப்புகளுக்கு இணையான வேலை நேரம் இழக்கப்படலாம்.
2050இ–ல் அது 2 லட்சத்து 55 ஆயிரமாக அதிகரிக்கும். அகமதாபாத்தில் 94 ஆயிரத்தில் இருந்து 1 லட்சத்து 26 ஆயிரமாகவும், சூரத்தில் 97 ஆயிரத்தில் இருந்து 1 லட்சத்து 22 ஆயிரமாகவும் அதிகரிக்கும்.
வாரணாசியில் 52 ஆயிரத்தில் இருந்து 60 ஆயிரமாக உயரும். வெப்பத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் பல நேரங்களில் இதய அல்லது சிறுநீரக செயலிழப்பாக பதிவு செய்யப்படுவதால், கடும் வெப்பத்தின் உண்மையான பாதிப்பு அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களில் முழுமையாக தெரிவதில்லை.
இந்தியாவில் ஏற்பட்ட 5 நாள் வெப்ப அலையுடன் சுமார் 30 ஆயிரம் கூடுதல் உயிரிழப்புகளுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
