சேலம், ஆக.2 திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிவுறுத்தலின் அடிப்ப டையிலும், வழிகாட்டுதலின் பேரிலும், 2026 ஜூலை 19 அன்று ‘விடுதலை’யில் அவரது அறிக்கையின்படியும், சேலம் மாவட்டம் கெங்கவள்ளி வட்டம், ஒதியத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் அவர்களின் சிலை மூடி மறைக்கப்பட்டது தொடர்பாகவும், அச் சிலை திறக்கப்பட வேண்டும் என்றும் திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் ஒதியத்தூர் கிராமத்தில் 2021 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட அண்ணல் அம்பேத்கர் சிலை, தங்களை ஆதிக்க ஜாதி என்று கருதிக் கொள்ளும் சிலரின் எதிர்ப்பு காரணமாகத் திறக்கப்படாமல் இருந்தது. அதனைக் கடந்த ஜூலை 12 அன்று, அவ் வூர் இளைஞர்கள் திறந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் அடுத்த நாள் முதல் பர பரப்பு ஏற்பட்டு, அச் சிலையை மூட சிலர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்படி, காவல்துறை யினர் அண்ணல் அம்பேத்கர் சிலையை மூட நடவடிக்கை எடுக்க முயன்றபோது, அக் கிராம மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இத னால், அங்கு காவல்துறையினர் தடியடி நடத்தி பதினைந்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக, ஜூலை 19 அன்று திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் அறிக்கை விடுத்ததுடன், மாவட்டக் கழகத் தோழர்கள், உடனடியாக இது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடு படுமாறு அறிவுறுத்தியிருந்தார்.
அதன்படி, 23.7.2026 அன்று மாலை 6 மணிக்குச் சேலம் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் அவர்களிடம் நேரம் பெற்று, அவரைத் திராவிடர் கழகத் தோழர்கள் சந்தித்தனர்.அப்போது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிக்கையையும், அவரது ஆலோசனை குறித்த பதிவுகளையும் கழகத் தோழர்கள் மாவட்ட ஆட்சி யரிடம் வழங்கினர். அவருடன் மாவட்ட வருவாய் அதிகாரியும், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளரும் உடனிருந்தனர்.
‘‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியவரும், ஜாதி ஒழிப்புப் போராளியுமான பாபா சாகேப் அம்பேத்கர் சிலை எக்கார ணம் கொண்டும் அகற்றப்படக் கூடாது; உடனடியாகத் திறக்கப்பட வேண்டும்’’ என்று அப்போது கழகத் தோழர்கள் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினர். அந்தச் சிலை வைக்கப்பட்ட 2021 ஆம் ஆண்டு முதல் நடந்துள்ளவற்றைக் குறித்து கழகத் தோழர்களிடம் மாவட்ட ஆட்சியர் எடுத்துரைத்தார். ஏற்கெனவே அந்தப் பகுதியில் காம ராஜர், ராஜீவ்காந்தி ஆகியோரின் சிலைகள் இருப்பதையும், அதே போல, அண்ணல் அம்பேத்கரின் சிலையும் அங்கு அமைக்கப்பட்டிருப்பதையும் கழகத் தோழர்கள் சுட்டிக்காட்டினர். இவை மூன்றுமே புறம்போக்கு நிலத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன என்றாலும், கால் மீது கால் போட்டுக் கொண்டு இருப்பதுபோல் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் சிலை அமைக்கப்பட்டிருப்பதால் சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், நின்று கொண்டிருக்கும் வழக்கமான சிலை என்றால் ஏற்றுக் கொள்வதாக அத் தரப்பினர் கூறுவதையும், அப் பிரச்சினை குறித்து இரு தரப்பின் கருத்துகளையும் பற்றிக் கூறிய மாவட்ட ஆட்சியர், அச் சிலைகளைப் பட்டா இடங்களில் அமைத்துக் கொள்ள, அச் சிலைகளின் அமைப்பா ளர்களைக் கேட்டுக் கொள்ளவும், சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.
ஒருவர் தன் காலின் மீது தானே கால் போட்டு அமர்வதால், யாருக்கு என்ன பிரச்சினை? என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்ன கருத்தை எடுத்துக் கூறிய கழகத் தோழர்கள், ஏற்கெனவே திறந்திருக்கும் தலைவர்கள் சிலையை மூடாமல், அண்ணல் அம்பேத்கரின் சிலையைத் திறப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். அனைத்துத் தரப்பினரையும் அழைத்து அமைதிக் குழு (Peace Committee) போட்டு, அண்ணல் அம்பேத்கரின் சிலை திறக்கப்படும் சுமுகமான சூழலை உருவாக்குமாறும் மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்த னர்.
மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெயராமன், சேலம் மாவட்டக் கழகத் தலைவர் வீரமணி ராஜூ, ஆத்தூர் மாவட்டக் கழகத் தலைவர் அ.சுரேஷ், மாவட்டச் செயலாளர் நீ.சேகர், மேட்டூர் மாவட்டக் கழகச் செயலாளர் ப.கலைவாணன், சேலம் மாவட்டக் கழகத் துணைத் தலைவர் இமயவரம்பன் ஆகியோர் அக் குழுவில் சென்றிருந்தனர்.
