சென்னை, ஆக.1 நீட் தேர்வு சமூக நீதிக்கும், மாநில உரிமைகளுக்கும், ஏழை, எளிய மாணவர்களுக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும் எதிரானது என்பதை கடந்த 15 ஆண்டுகளாக திராவிடர் கழகம் எச்சரித்து வருகிறது.
கடந்த ஜூலை 4 ஆம் தேதி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், ஜூலை 30 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் 6 முனைகளில் இருந்து திராவிடர் கழக இளைஞர் அணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை சார்பில் இருசக்கர வாகனப் பிரச்சாரப் பயணத்திற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டு, ஆறு முனைகளாகப் பிரிக்கப்பட்டு, ‘விடுதலை’யில் பிரச்சாரப் பயணப் பட்டியல் வெளியிடப்பட்டது.
இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணத்திற்கான அனுமதி மற்றும் பாதுகாப்பு வேண்டி காவல்துறை தலைமை இயக்குநரிடம் (டிஜிபி) திராவிடர் கழகத்தின் சார்பாக கடந்த 18.7.2026 அன்று மனு அளிக்கப்பட்டது.
காவல் துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து 27.7.2026 அன்று கடிதம் ந. க. எண்/4909650 பொது 2 (2) 2026 திராவிடர் கழகத் தலைவருக்குக் கொடுத்தனர். அக்கடிதத்தில், ‘‘தாங்கள் பரப்புரை பயணம் மேற்கொள்ளும் வழிகளில் உள்ள காவல் அலுவலகங்களில் சென்று அனுமதியும், பாதுகாப்பும் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது . அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் கழகப் பொறுப்பாளர்கள் பரப்புரைப் பயணப் பட்டியலில் உள்ள பகுதியைச் சேர்ந்த காவல் நிலையங்களில் அனுமதி வேண்டி கடிதங்களை கொடுத்திருந்தனர்.
இந்நிலையில் பரப்புரைப் பயணத்திற்கான அனைத்து ஆயத்தப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு, கழகத் தோழர்கள் பயணம் தொடங்கும் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர்.
இந்த நிலையில் தான் கழகத்தின் பரப்புரைப் பயணத்திற்கு காவல் துறையினரால் அனுமதி மறுக்கப்பட்டது.
திராவிடர் கழகம் என்பது அரசியல் சாராத சமூக நீதியையும், சமூக சீர்திருத்தத்தையும் நோக்கமாகக் கொண்ட பகுத்தறிவு, சுயமரியாதை சமத்துவ இயக்கம். மக்களிடம் கருத்துகளைப் பரப்பி விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்பது தந்தை பெரியார் காலத்தில் இருந்து தொடரும் நடைமுறையாகும். இப்பொழுது நடத்தத் திட்டமிட்டு இருந்த நீட் எதிர்ப்பு பிரச்சாரப் பயணம் என்பது இது முதன் முறையல்ல. 2010 ஆம் ஆண்டு நீட் அறிவிக்கப்பட்ட நாள் முதல் தொடர்ந்து நீட் எதிர்ப்புப் பிரச்சாரம் நடத்தப்பட்டு வந்துள்ளது.
2017 ஆம் ஆண்டு மார்ச் 18 முதல் 21 ஆம் தேதி வரை அய்ந்து முனைகளில் இருந்து புறப்பட்டு 5 நாள்கள் நீட் எதிர்ப்பு இருசக்கர வாகனப் பரப்புரைப் பிரச்சாரம் நடைபெற்று விருத்தாசலத்தில் நிறைவு பெற்றது.
2020 ஆம் ஆண்டு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 10 நாள்கள் 2700 கிலோ மீட்டர் பயணித்து நீட் எதிர்ப்புப் பரப்புரை மேற்கொண்டார்.
2022 ஆம் ஆண்டு 03.04.2022 முதல் 25.4.2022 வரை நாகர்கோயிலில் தொடங்கி சென்னை வரை இத்தகைய நீட் எதிர்ப்பு பிரச்சாரம் தமிழர் தலைவர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.
கடந்த 2024 இல் ஜூலை 1 முதல் ஜூலை 15 வரை திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகத்தினர் மீண்டும் அய்ந்து முனைகளில் இருந்து இரு சக்கர வாகனப் பரப்புரைப் பயணத்தைச் சேலம் வரை நடத்தியுள்ளார்கள். எந்த ஆட்சிக் காலத்திலும் இத்தகைய சமூக நீதிப் பிரச்சாரப் பயணத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது இல்லை.
முந்தைய ஆட்சியாளர்கள் போலவே, தற்போது இருக்கும் தமிழ்நாடு அரசும் நீட் வேண்டாம் எனும் நிலைப்பாட்டில் இருப்பதாகச் சொல்லும் வேளையில், போதிய கால அவகாசம் கொடுத்து அனுமதி கோரி இருந்தும் நீட் எதிர்ப்புப் பிரச்சாரப் பயணம் புறப்படும் நாளில் (30.7.2026) அனுமதி மறுத்துள்ளது.
இதனைக் கண்டித்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், முதலில் சட்ட ரீதியாக இப்பிரச்சினையைக் கழகம் அணுகும் என்று அறிவித்திருந்தார். அதன்படி, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீட் எதிர்ப்பு இருசக்கர வாகனப் பிரச்சாரப் பயணத்திற்கு காவல்துறை வழங்கிய அனுமதி மறுப்பினை ரத்து செய்ய வேண்டி திராவிடர் கழகம் சார்பில் கழகத் துணைத் தலைவர்
கலி. பூங்குன்றன் நீதிப்பேராணை (ரிட் மனு) தாக்கல் செய்துள்ளார். இம் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
