தமிழ்நாட்டில் மாவட்டந் தோறும் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை நிறுவுவது குறித்த தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை 3 வார காலத்துக்குள் தெரிவிக்க வேண்டுமென கடந்த ஜூலை 17 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மாவட்டம் தோறும் ‘ஜவஹர் நவோதயா வித்யாலயா’ பள்ளியை நிறுவ வேண்டுமெனத் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக்கோரி ‘குமரி மகாசபா’ என்ற இந்துத்துவச் சார்பு அமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஜவஹர் நவோதயா பள்ளிகளைத் திறப்பதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்க உத்தரவிட்டது. இதை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கில் கடந்த 2017 டிசம்பர் 11-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற ஆணைக்கு இடைக் கால தடை விதித்து, வழக்கை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. இதற்கிடையே இவ் வழக்கு நடந்தபோது தி.மு.க அரசு கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்திருந்த பிரமாணப் பத்திரத்தில் ‘தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் இல்லாமலேயே கல்வித் தரம் சிறப்பாக உள்ளது. எனவே ‘ஜவஹர் நவோதயா’ போன்ற புதிய பள்ளிகளைத் திறப்பதற்குப் பதிலாக, சமக்ர சிக் ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையான ரூ.3,548.22 கோடி கல்வி நிதியை ஒன்றிய அரசு உடனே விடுவிக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோதுதான் நீதிமன்றம் மேற்கண்டவாறு தமிழ்நாடு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கு விசாரணையின் போது, தமிழ்நாட்டில் ஏற்கெனவே 1500 சிபிஎஸ்இ பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. பல பள்ளிகளில் மூன்று மொழிகள் கற்பிக்கப்படுகிறது. ஹிந்தியும் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழ்நாடு அரசு ஹிந்தி மொழி எதிர்ப்பைக் காரணம் காட்டி நவோதயா பள்ளிகளை நிறுவ மறுக்கிறது என்று வழக்கு தொடுத்தவர்கள் வாதிட்டபோது, குறுக்கிட்டு பேசிய நீதிபதி ஆர்.மகாதேவன், “தமிழ்நாட்டைப் பொறுத்த வரை அவர்கள் ஹிந்தியை எதிர்க்கவில்லை; ஹிந்தித் திணிப்பையே எதிர்க்கிறார்கள்” என்று விளக்கம் சொல்லியிருப்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால், நீதிபதி பி.வி.நாகரத்னா, ‘‘மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டும் கிடையாது. வேறு எந்த மொழியையும் கூட தேர்ந்தெடுத்துக் கொள்ளலாமே’’ என்று கூறியுள்ளார்.
ஹிந்தி மீது நமக்கு வெறுப்பு இல்லை. ஹிந்தி மட்டுமல்ல… மும்மொழி என்ற பெயரால் எந்த மொழி திணிக்கப்பட்டாலும் அது மாணவர்களின் கல்வியைப் பாதிக்கும் என்பதாலேயே எதிர்க்கிறோம். விருப்பத்தின் அடிப்படையில் ஒருவர் எத்தனை மொழிகளையும் கற்கலாம். ஆனால், கட்டாயப்படுத்துவது, மாணவர்களின் கற்கும் திறனைக் கேள்விக்குறியாக்கும். அதனால்தான் தெளிவாகத் தமிழ்நாடு இருமொழிக் கொள்கையைச் சட்டமாக்கியிருக்கிறது. அதை உடைக்கவே சி.பி.எஸ்.இ என்ற பெயரில் தனியார் பள்ளிகளை ஊக்குவித்து, மாநிலப் பாடத் திட்டம் பயில்வோரைக் குறைத்தும், ஹிந்தி – சமஸ்கிருதத் திணிப்பைத் தனியார் பள்ளிகள் மூலமும் ஒன்றிய அரசு மேற் கொள்கிறது. தமிழ்நாட்டு அரசின் கொள்கைக்கு மறைமுகமாகக் குழி வெட்டும் ஒன்றிய அரசின் இந்த முயற்சிக்குத் தடையில்லா சான்று வழங்குவதைச் சாதனையாகத் தனியார் பள்ளி அதிபர்கள் மூலம் விளம்பரப்படுத்துகிறது தற்போதைய மாநில அரசு.
தமிழ்நாடு நவோதயா பள்ளிகளை எதிர்ப்பது என்பது மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு – ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு மட்டுமல்ல;
நவோதயா பள்ளிகள் எதிர்ப்பும் இப்போது தொடங்கியது அல்ல; அது அறிமுகப்படுத்தப்பட்ட 1986-ஆம் ஆண்டு முதலே தமிழ்நாடு எதிர்த்து வந்துள்ளது. ‘புதிய கல்விக் கொள்கை’ என்ற பெயரில் அப்போதைய ராஜீவ்காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் கொண்டுவரப்பட்டதன் அடிப்படையில் ‘ஜவகர் நவோதயா’ பள்ளிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அப்போதே தமிழ்நாடு கடுமையாக எதிர்த்துள்ளது. நவோதயா பள்ளிகள் வேண்டாம் என்பது தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவு அல்லவா?
கல்வித் துறை மாநிலப் பட்டியலில் இருந்தது; அதனை 1976 அவசரகால நிலையைப் பயன்படுத்தி, ஒத்திசைவுப் பட்டியலுக்கு (Concurrent List) மாற்றியது அன்றைய காங்கிரஸ் அரசு. கேந்திரிய வித்யாலயாக்கள் என்பவை ஒன்றிய அரசின் துறைகளில் பணியாற்றுவோரின் குழந்தைகள் படிப்பதற்காக, அவர்கள் மாற்றல் ஆனால், கல்வியில் சிக்கல் வரக்கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்டது. மற்றபடி பள்ளிக் கல்வியிலும் ஒன்றிய அரசு தலையிடுவதற்கு என்ன வேலை இருக்கிறது? மாநில அரசுகளுக்குக் கொடுக்க வேண்டிய நிதியை, எங்களை அனுமதித்தால் தான் தருவேன் என்று மிரட்டும் ஒன்றிய அரசுக்கு, உரிய நிதியை வழங்கக் கோரி நீதிமன்றம் ஆணையிட வேண்டாமா?
40 ஆண்டுகளாக ‘ஜவகர் நவோதயா’ பள்ளி இல்லாத தமிழ்நாட்டில் என்ன குறைந்துவிட்டது? இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத ஜி.இ.ஆர். எனப்படும் Gross Enrollment Ratio தமிழ்நாட்டில் தானே அதிகம். ‘இடைநிற்றல்’ தமிழ்நாட்டில் தானே குறைவு! பள்ளிக் கல்வி தொடங்கி உயர்கல்வி வரைக்கும் அனைத்திலும் முதல் இடத்தில் இருப்பது தமிழ்நாட்டில் தானே! மாவட்டத்துக்கு ஒரே ஒரு நவோதயா பள்ளியை மட்டும், நெய்யில் பொறித்து ஒன்றிய அரசு உருவாக்கினால் போதுமா? தமிழ்நாட்டின் கல்வியில் மேலும் அக்கறை இருக்குமேயானால், கொடுக்க வேண்டிய நிதியைத் தானே ஒன்றிய அரசு கொடுக்க வேண்டும்? அதை மறுத்துவிட்டு, ‘‘என்னை வீட்டுக்குள் விடு, நான் வீடு முழுவதையும் ஆக்கிரமித்துக் கொள்வேன்’’ என்று கூக்குரலிடுவது ஏன்?
உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் மூன்று வார கால அவகாசம் முடிந்து ஆகஸ்ட் 11 அன்று மீண்டும் வழக்கு விசாரணை நடைபெறவுள்ளது. எந்தவிதக் குழப்பமும் இல்லாமல், தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும். கட்சிகளைக் கடந்து பல ஆட்சிக் காலங்களிலும் காப்பாற்றப்பட்டு வந்துள்ள தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கை, தமிழ்நாட்டுக் கல்விக் கூடங்களை ஒன்றிய அரசின் ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாப்பு, மதவாத – குருகுலக் கல்வி முறை தடுப்பு ஆகியவற்றைக் காவு கொடுத்துவிடக் கூடாது. தமிழ்நாட்டின் தனித் தன்மையை, பண்பாட்டை, கல்வியைச் சிதைக்க நினைக்கும் இந்துத்துவ, பாசிச ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஒன்றிய அரசின் சூழ்ச்சி வலைகளுக் குள் சிக்காமல் தமிழ்நாட்டை மீட்க வேண்டிய பொறுப்பு எல்லோருக்கும் உள்ளது.
