சென்னை, ஜூலை 29- தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் காலியாக உள்ள உறுப்பினர் பணி யிடங்களை உடனடியாக நிரப்ப மாநில அரசுக்கு உத்தரவிடக் கோரி கோவையைச் சேர்ந்த வழக்குரைஞரும், மனித உரிமைச் செயல்பாட்டாளருமான என். பன்னீர்செல்வம் என்பவர் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் தற்போது 37,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், இதனால் ஆயிரக்கணக்கான பாதிக்கப்பட்ட மக்கள் நீதி கிடைக்காமல் காத்திருப்பதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் முன்னாள் உறுப்பினர் களான நீதிபதி ராஜா இளங்கோ மற்றும் வழக்குரைஞர் வி. கண்ண தாசன் ஆகியோரின் மூன்று ஆண்டு பதவிக்காலம் 2025 டிசம்பர் 29 அன்று நிறைவடைந்ததையடுத்து, அனுமதிக் கப்பட்ட 2 உறுப்பினர் பணியிடங்களும் காலியாகவே உள்ளன.
இது தொடர்பாக தமிழ்நாடு முதல மைச்சர் மற்றும் ஆளுநருக்கு கடந்த ஜூலை 3 அன்று மனு அனுப்பியும், பணி யிடங்களை நிரப்புவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே குறிப்பிட்ட காலக்கெடு வுக்குள் ஒரு குழுவை அமைத்து மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர்கள் காலியிடங்களை நிரப்ப அரசுக்கு உத்தரவிடக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் சு.குமாரதேவன் ஆஜராகி, இப்பணியிடங்கள் காலியாக இருப்பதால், ஆணையம் செயல்பட முடியாமல், புகார்களைத் தீர்த்து வைப்பதில் கடும் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், காவல் மரணங்கள் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான பல புகார்களில் ஆரம்பக்கட்ட விசாரணையைக் கூட தொடங்க முடியாமல் முடக்கி இருப்பதாக வாதிட்டார்.
இதனை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டதோடு, மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர்கள் பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளி.வைத்தது.
