கரூரில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு த.வெ.க. அரசுப் பணி வழங்கியது செல்லாது!

3 Min Read

கருணை அடிப்படையில் பணியைப் பெற நூற்றுக்கணக்கானோர் காத்திருக்கும் நிலையில்,
கட்சி பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கியவர்களுக்கு அரசுப் பணி அளித்தது ஏன்?
உயர்நீதிமன்ற – மதுரைக் கிளை அதிரடி உத்தரவு! சரமாரிக் கேள்விகள்!

மதுரை, ஜூலை 28– கருணை அடிப்படையில் பணியைப் பெற நூற்றுக்கணக்கானோர் காத்திருக்கும் நிலையில், கட்சி பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கியவர்களுக்கு  அரசுப் பணி அளித்தது ஏன்? கரூரில் நடிகர் விஜய் பங்கேற்ற கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு, த.வெ.க. அரசு வழங்கிய அரசுப் பணி செல்லாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இதனால் கரூரில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரில் ஒருவருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் வழங்கிய பணி நியமன ஆணை உத்தரவுகள் ரத்தாகி இருக்கிறது.

மீண்டும் விசாரணைக்கு

உயர்நீதிமன்ற மதுரை கிளையின் இந்த அதிரடி உத்தரவு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கும், அவரது தலைமையிலான தவெக அரசுக்கும் பெரும் பின்னடை வாக மாறி இருக்கிறது. கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நேற்று (27.7.2026) மீண்டும் விசாரணைக்கு வந்தன.

விதிகளை மீறியிருக்கும்
த.வெ.க. அரசு

அப்போது சாலை விபத்தில் நாள்தோறும் உயிரி ழப்புகள் நிகழ்கிறது, விபத்தில் உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க முடியுமா? அதே போல சிவகாசியில் அவ்வப்போது நிகழும் வெடிவிபத்துகளில் ஏராளமானோர் உயிரிழந்தனர், அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க முடியுமா? என நீதிமன்றம் விதிகளை மீறி இருக்கும் ஜோசப் விஜய் அரசை பார்த்து சாட்டையை சுழற்றி இருக்கிறது.

கருணை அடிப்படையில் பணியை பெற நூற்றுக்கணக்கானோர் காத்திருக்கும் நிலையில், கரூரில் நடிகர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு முன்னுரிமை அளித்தது ஏன் என்று தமிழ்நாடு அரசிடம் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.அதற்கு சாதாரணமான அரசு வேலையே வழங்கியுள்ளதாக அரசுத் தரப்பு வாதம் வைத்தது.

அரசு தரப்பில் கூறுவதை ஏற்க இயலாது

அதற்கு “எந்தப் பணியும் சாதாரணம் அல்ல; ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் உதவும் பணியே” என நீதிபதிகள் கூறினர். பாதிக்கப்பட்டோரின் குடும்பத்துக்கு திறன் வளர் பயிற்சி வழங்கி உதவலாமே, அதை விடுத்து சாதாரண அரசுப் பணியே வழங்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறுவதை ஏற்க இயலாது.

அதே போல போகிற போக்கில் அரசுப் பணிகளை வழங்கக் கூடாது, எந்த அரசு வேலையாக இருந்தாலும் அதைப் பெறும் ஒருவர் அதற்காக பாடுபட்டிருக்க வேண்டும் என்று நியாயமான கருத்தை நீதிபதிகள் முன்வைத்து உள்ளனர்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் குளறுபடி! உயர்கல்வித் துறை அமைச்சர் புறக்கணிப்பு!

நெல்லை, ஜூலை 28 நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் அறிவுறுத்தல்படி வந்தே மாதரம் பாடலுக்கு முதலிடம் வழங்குவதில் பல்கலைக் கழகத் துணை வேந்தர் உறுதியாக இருந்ததால், மனோன்மணியம் பல்கலைக் கழக வளாகம் முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
தமிழ்த்தாய் வாழ்த்துப் புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்து பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதுதவிர, 113 பேருக்கு மட்டும்தான் ஆளுநர் பட்டம் வழங்குவார் என அறிவிக்கப்பட்டதைக் கண்டித்து மாணவர்கள் வெளிநடப்புச் செய்தனர். மாணவர்களின் போராட்டத்திற்குப் பணிந்த பல்கலைக் கழகம், முனைவர் பட்டம் பெறும் அனைவருக்கும் ஆளுநர் பட்டம் வழங்குவார் என அறிவித்தது.
அமைச்சர் புறக்கணிப்பு
தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகப் பாடப்படுவதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், பட்டமளிப்பு விழாவினை உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் புறக்கணித்தார். முனைவர் பட்டம் பெற இருந்த டிஜிபி மகேஷ்குமார் அகர்வாலும் பங்கேற்கவில்லை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *