சென்னை, ஜூலை. 24– சட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நுழைவுத்தேர்வு மூலம் மேற்கொள்ள லாம் என இந்திய பார் கவுன்சில் வரைவு மசோதாவை வெளியிட்டுள்ளது.
சட்டக் கல்லூரிகள்
தமிழகத்தில் 15 அரசுச்சட்டக் கல்லூரி, தமிழ்நாடு பல்கலைக்கழகத்தின் இணைப்பை பெற்ற 14 தனியார் சட்டக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த கல்லூரிகளில் 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு சட்டப்படிப்புகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. 5 ஆண்டு சட்டப்படிப்பு பொறுத்தமட்டில் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையிலும், 3 ஆண்டு சட்டப்படிப்பு பொறுத்த மட்டில் பட்டப்படிப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடை பெறுகிறது.
சட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் மாற்றம் கொண்டுவரும் வகையில் இந்திய பார் கவுன்சில், வக்கீல்கள் திருத்த மசோதா-2026 எனும் வரைவு மசோதாவை வெளியிட்டுள்ளது.
இந்த வரைவு மசோதாவில், வக்கீல் தொழில், சட்டக்கல்வி, பார் கவுன்சில் நிர்வாகம் மற்றும் சட்டத் தொழில் தொடர்பான பல்வேறு அம்சங்களிலும் திருத்தங்கள் முன்மொழியப்பட்டு உள்ளன.
நுழைவுத்தேர்வு
அந்தவகையில், சட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நுழைவுத்தேர்வு மூலம் மேற்கொள்ளலாம் என இந்த வரைவு மசோதா வலியுறுத்துகிறது.
நீட் தேர்வு போன்ற தேசிய நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் நுழைவுத்தேர்வு அடிப்படையில் சட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கையை மேற்கொள்வது என்ற பரிந்துரை பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த வரைவு மசோதா தற்போது பொதுமக்கள் மற்றும் சட்டத்துறை யினரின் கருத்துக்காக வெளியிடப்பட்டு உள்ளது.
கருத்து தெரிவிக்கலாம்
இதில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு அம்சத்தையும் ஆராய்ந்து, தேவையான கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை இந்திய பார் கவுன்சிலுக்கு தெரிவிக்க அனைத்துதரப்பினருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. [email protected] என்ற மின்னஞ்சலில் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை வருகிற 31-ந்தேதிக்குள் தெரிவிக்கலாம் என பார் கவுன்சில் அறிவித்துள்ளது.
சட்டப்படிப்புக்கு நுழைவுத்தேர்வு என்ற பார் கவுன்சிலின் வரைவு மசோதா குறித்து கல்வியாளர்கள் கூறும்போது, “தற்போது வரை இது, வரைவு மசோதா மட்டுமே. இதுவரை சட்டமாக அமலுக்கு வரவில்லை. இந்த வரைவு மசோதா குறித்து மாநில பார் கவுன்சில்கள், வக்கீல் சங்கங்கள், வக்கீல்கள், சட்டப் பல்கலைக்கழகங்கள், சட்டக்கல்லூரிகள், சட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் கருத்துகள் மற்றும் யோசனைகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மன அழுத்தம்
தமிழ்நாட்டில் சட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கையைப் பொறுத்த மட்டில் தற்போது வரை எந்தவித சிக்கலும் இல்லாமல் செல்கிறது. நுழைவுத்தேர்வு என வரும்போது அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்களா? என்பதை பார்க்க வேண்டும். நுழைவுத்தேர்வு என்றாலே மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.
இந்த வரைவு மசோதாவை, பொதுமக்களின் கருத்து அடிப்படையில் தான் இந்திய பார் கவுன்சிலில், ஒன்றிய சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரைக்கும். எனவே, சட்டப்படிப்புக்கு நுழைவுத் தேர்வு அவசியம் என பார் கவுன்சில் பரிந்துரைக்குமா? என்பதை பொறுத்தி ருந்துதான் பார்க்க வேண்டும்” என தெரிவித்தனர்.
