சுப.முருகானந்தம் எங்கள் இயக்கத்தின் சொத்துகளிலேயே மிக முக்கியமான சொத்து!

8 Min Read

*சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்ற நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகுதான் பல்லாயிரக்கணக்கான திருமணங்கள் நடைபெற்றன!

Contents
மணமக்கள் ல.மு.அகிலாராஜன் – ர.முஜிபா ஃபர்ஜானாஅவரது வாழ்த்துரை வருமாறு:சுப.முருகானந்தம் – தி. லதாஎளிதில் எங்கும் பார்க்க முடியாத ஓர் அமைதிப் புரட்சி – பெரியாரின் அறிவுப் புரட்சி!எங்கள் இயக்கத்தின் சொத்துகளிலேயே மிக முக்கியமான சொத்து!பெரியார் அணி – கட்டுப்பாடான அணி – பகுத்தறிவு அணி – ஆற்றல் உள்ள அணி என்பதற்கு அடையாளம்!‘‘சுயமரியாதைத் திருமணம் தத்துவமும் வரலாறும்!’’‘‘உங்கள் வாழ்க்கை சிறையிலேயே முடிந்துவிடும்’’ என்றார்கள்!சுக்கிலநத்தத்தில்தான் முதல் சுயமரியாதைத் திருமணத்தை நடத்தி வைத்தார் பெரியார்!சமத்துவத்தை, சமவாய்ப்பை, பகுத்தறிவைச் சொல்லிக் கொடுக்கிற ஒரு மணவிழா!தொண்டர்கள் எவ்வளவு உறுதியானவர்கள், தோழர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதற்கு இது ஓர் உதாரணம்!நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகுதான் பல்லாயிரக்கணக்கான திருமணங்கள் நடைபெற்றன!

* பெரியாருடைய தீர்ப்புதான் முக்கியமே தவிர,

இந்த சட்டக் கோர்ட்டினுடைய தீர்ப்புகள் எங்களுக்கு முக்கியமல்ல!

சுயமரியாதைத் திருமணங்கள், சட்டபூர்வமாகச் செல்லாது என்று சொன்ன பிற்பாடும் நில்லாது நடந்தன!  

மதுரை: ல.மு.அகிலாராஜன் – ர.முஜிபா ஃபர்ஜானா மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை

மதுரை, ஜூலை 24 சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்ற நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகுதான் பல்லாயிரக்கணக்கான திருமணங்கள் நடைபெற்றன. எங்களுக்குத் தீர்ப்பு எதுவென்றால், பெரியாருடைய தீர்ப்புதான் முக்கியமே தவிர, இந்த சட்டக் கோர்ட்டி னுடைய தீர்ப்புகள் எங்களுக்கு முக்கியமல்ல என்ற உறுதிப்பாட்டோடு, சட்டபூர்வமாகச் செல்லாது என்று சொன்ன பிற்பாடும் பல திருமணங்கள்  நில்லாது நடந்து கொண்டிருந்தன. எளிதில் எங்கும் பார்க்க முடியாத ஓர் அமைதிப் புரட்சி – பெரியாரின் அறிவுப் புரட்சி! எங்கள் இயக்கத்தின் சொத்துக்களிலேயே மிக முக்கியமான சொத்து சுப.முருகானந்தம் அவர்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

மணமக்கள் ல.மு.அகிலாராஜன் – ர.முஜிபா ஃபர்ஜானா

கடந்த 7.6.2026 அன்று மதுரையில் மணமக்கள் ல.மு.அகிலாராஜன் – ர.முஜிபா ஃபர்ஜானா ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவினை தலைமை தாங்கி நடத்தி வைத்த  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரை யாற்றினார்.

அவரது வாழ்த்துரை வருமாறு:

சுப.முருகானந்தம் – தி. லதா

அன்புச் செல்வர்கள் ல.மு.அகிலாராஜன் – ர.முஜிபா ஃபர்ஜானா ஆகிய இருவருக்கும் நடக்கக்கூடிய இணையேற்பு விழா என்கின்ற இந்த சிறப்பான நிகழ்ச்சி – ஒரு புரட்சிகரமான – அமைதி புரட்சியோடு நடக்கக்கூடிய ஓர் அறிவார்ந்த இந்த வாழ்க்கை இணையேற்பு விழாவினை தலைமை ஏற்று  நடத்தி வைப்பதிலே எல்லையற்ற மகிழ்ச்சியோடு நான் இருக்கிறேன். இந்தக் குடும்பம் நம்முடைய குடும்பம். நான் எங்களுடைய குடும்பம் என்று கூட  அழைக்கவில்லை. நம்முடைய குடும்பம் என்று உரிமையோடும், உறவோடும் இருக்கிறோம்.

இது நம்முடைய குடும்பம் என்பதற்கு என்ன பொருள் என்பதை நான் அடுத்துச் சொல்ல இருக்கிறேன். அதற்கு முன்னாலே  அன்புச் செல்வர்கள் அகிலாராஜன் – முஜிபா ஃபர்ஜானா ஆகிய இருவருடைய வாழ்க்கை இணையேற்பு விழா நிகழ்ச்சிக்கு வந்திருக்கிற உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எளிதில் எங்கும் பார்க்க முடியாத ஓர் அமைதிப் புரட்சி – பெரியாரின் அறிவுப் புரட்சி!

இது நம்முடைய குடும்பம் என்று நான் இந்த மணமக்களைப் பார்த்து அழைப்பதற்குக் காரணம், பெரியாருடைய குடும்பம் என்று சொன்னால், மிகப்பெரிய அளவிலே இந்த சுயமரியாதைத் திருமண வாய்ப்பை வழங்கக்கூடிய அளவிற்குப் பாராட்டக்கூடிய ஒரு மணவிழா இது. பாராட்டக்கூடிய மணவிழா மட்டுமல்ல, எடுத்துக்காட்டான மணவிழா! எளிதில் எங்கும் பார்க்க முடியாத அளவிற்கு ஓர் அமைதிப் புரட்சி – பெரியாரின் அறிவுப் புரட்சி – தமிழ்நாடு எவ்வளவு பண்படுத்தப்பட்ட ஒரு பூமியாக இருக்கிறது என்பதற்கு இது அடையாளம். இப்படிப்பட்ட மணவிழாவில் தமிழ்நாடு அரசின் வாழ்நாள் சாதனையாளராக – விருதாளராக வந்திருக்கக்கூடிய அய்யா திரு.பி.ஏ. அலாவுதீன் அவர்களும், நினைவில் வாழக்கூடிய மைதன் பீவி அவர்களும், நலமுடன் உள்ள ஜன்னத் அவர்களும் மற்றும் இங்கே இருக்கக்கூடிய அருமை நண்பர்கள் மணி, பவன்தாய், சுப.மாரியப்பன், முத்தழகு, செந்தில்குமார், இரா.சத்தியாலட்சுமி ஆகிய அத்துணை தோழர்களும், அத்துணை குடும்பத்தோழர்களும் பலரும் கலந்திருக்கிறார்கள்.

எங்கள் இயக்கத்தின் சொத்துகளிலேயே
மிக முக்கியமான சொத்து!

பலபேருக்கு, இந்த அழைப்பைப் பார்த்த உடனே கொஞ்சம்  மயக்கமாக இருக்கும். என்ன இந்த மாதிரி ஓர் அழைப்பிதழ் இருக்கிறதே என்று நினைப்பார்கள். ஆனால், அதுதான் புரட்சி – அதுதான்  அறிவு – அதுதான் பெரியார் மண் – தமிழ்நாட்டின் மண் என்பதற்கு அடையாளம். என்னிடம் முதலில் அழைப்பைக் கொடுத்த உடனே, அதைப் பார்த்து நானே வியந்தேன். என்னிடம் திருமணத்துக்கு தேதி கேட்டார்கள்; அதற்கு ஒப்புக்கொண்டேன். காரணம் என்ன வென்றால், சுப.முருகானந்தம் அவர்கள் எங்கள் இயக்கத்தின் சொத்துகளிலேயே மிக முக்கியமான சொத்து.

பெரியார் அணி – கட்டுப்பாடான அணி – பகுத்தறிவு அணி – ஆற்றல் உள்ள அணி என்பதற்கு அடையாளம்!

நான் எல்லோருக்கும் பயன்படக்கூடிய வாழ்வியலை கஷ்டப்பட்டு நீண்ட நேரம் இரண்டு, மூன்று பக்கம் எழுதுகிறேன். அவர் அதையே மிகச் சுலபமாக, இரண்டு வரி வாக்கியத்திலேயே படித்துவிடக்கூடிய வெண்பாவாக ஆக்குகிறார். ஆகவே,  எங்கள் தோழர்கள் எப்படி இருப்பார்கள் என்பதற்கு சுப.முருகானந்தம் ஓர் அருமையான எடுத்துக்காட்டு. அதாவது, தலைமை மிகக் கஷ்டப்பட்டு செய்வதைத் தொண்டர்கள், தோழர்கள் மிக எளிதாகச் சுருக்குவார்கள்; சாதிக்கக் கூடிய அளவுக்கு  ஆற்றல் மிகுந்த தொண்டர்கள் – இந்த அணி – அதுதான் பெரியார் அணி – அதுதான் கட்டுப்பாடான அணி – அதுதான் பகுத்தறிவு அணி – ஆற்றல் உள்ள அணி என்பதற்கு அடையாளம்.

‘‘சுயமரியாதைத் திருமணம்
தத்துவமும் வரலாறும்!’’

அந்த வகையிலே, இந்தத் திருமண முறை – சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்து 100 ஆண்டு கள் ஆகப்போகிறது. அதற்கு அடையாளமாக இங்கே புத்தகங்களைக் கொண்டு வந்திருப்பார்கள்; அவற்றை நீங்கள் படிக்க வேண்டும். ‘‘சுயமரியாதைத் திருமணம் தத்துவமும் வரலாறும்’’ என்ற ஓர் ஆவணம் போன்ற ஒரு புத்தகம் அது. இந்தச் சுயமரியாதைத் திருமணத்தினுடைய வரலாறு என்ன? வரலாறு தெரிந்தால் மட்டும் போதாது; தத்துவம் என்ன? இவற்றையெல்லாம் புரிந்து கொள்ளக்கூடிய அளவிலே, இது வந்தது. அதுவும் என்னுடைய வாழ்நாளில், நான் எத்தனையோ புத்தகங்களை எழுதி இருந்தாலும் கூட, இந்தப் புத்தகத்திற்கு ஒரு தனிச் சிறப்பு, நானே மகிழக்கூடிய அளவுக்கு ஒன்று உண்டு. என்னவென்றால் ஓராண்டு மிசா காலத்தில் சிறையில்  இருந்தபோது, அப்போது ஒரு ஆறு மாதம் கொடுங்கோன்மை இருந்தது. கடுமையான அதிர்வுகளை எல்லாம் எங்கள் கொள்கை உள்ளத்தோடு, நேரில் களங்கண்டு, களப் போராளியாகி, சகித்துக் கொண்டு அவற்றை எல்லாம் தாண்டி நின்றபோது, கிடைத்த ஓய்வு இன்னொரு ஆறு மாதம் கிடைத்தது.  ஆனால், மிசா கைதிகளுக்கு ஒரு சிறப்பு உண்டு. என்ன சிறப்பு என்றால்,  மற்ற தண்டனையாளர்களுக்கு, கைதிகளுக்கு இல்லாத ஒரு சிறப்பு உண்டு. அதைப்பற்றி பல பேருக்குத் தெரியாது. அது என்னவென்றால், ஆயுள் தண்டனைக் கைதிக்குக் கூட எந்த ஆண்டில் அவர் வெளியே போகிறார் என்று, விடுதலை ஆகின்ற நாளை ஒரு பில்லையில் அச்சடித்து, அந்தக் கைதியின் கையில் கட்டியிருப்பார்கள்.

‘‘உங்கள் வாழ்க்கை சிறையிலேயே
முடிந்துவிடும்’’ என்றார்கள்!

ஆனால் மிசாக் கைதியாகப் போனால், அப்பொழுது இருந்த சட்டம் – நெருக்கடி காலத்தில், எப்பொழுது வெளியே வரப்போகிறோம் என்று தெரியாது. அந்தச் சிறைச்சாலையின் சூப்பிரண்டெண்ட் சொல்வார், ‘‘உங்கள் வாழ்க்கை இதோடு முடிந்துவிடும். நீங்கள் கட்சியை எல்லாம் பார்க்க முடியாது’’ என்றெல்லாம் சொன்னார். ‘‘பரவாயில்லை, நாங்கள் பார்க்கிறோம்; முடிந்தால், நல்லதுதானே இந்தக் கொள்கைக்கு’’ என்று துணிவோடுதான் இருந்தோம். அந்த நேரத்தில், பிறகு ஒரு ஆறு மாதம், நல்லவிதமாகப் படிப்பதற்கு, எழுதுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. அப்படி கிடைத்த நேரத்தில் எழுதத் தொடங்கிய புத்தகம் தான் ‘‘சுயமரி யாதைத் திருமணம் தத்துவமும் வரலாறும்’’  என்பது. அப்போது எழுதி, வெளியே சிறப்பாக வந்தது.

சுக்கிலநத்தத்தில்தான் முதல் சுயமரியாதைத் திருமணத்தை நடத்தி வைத்தார் பெரியார்!

இதில், இந்தத் தத்துவத்தையெல்லாம் சொல்லும்போது, சுயமரியாதை இயக்கம் தொடங்கி நூறாண்டு ஆகப் போகிறது. மனித நேயத்தை மய்யமாகக் கொண்டிருக்கக்கூடிய இந்த இயக்கத்திற்கு நூறாண்டு. இந்த மாவட் டத்தில், அதிலும் ராமநாதபுரம், மதுரை  என்று எல்லாம் தொடர்புள்ளவர்கள்தான் இந்தக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள். கடலாடி எல்லோரும் சென்றிருப்பீர்கள். அந்த இராம நாதபுரம் மாவட்டத்தில் அன்றைக்கு அருப்புக்கோட்டைக்குப் பக்கத்திலே இருக்கக்கூடிய சுக்கிலநத்தத்தில்தான் 1928 ஆம் ஆண்டில் முதல் சுயமரியாதைத் திருமணத்தை தந்தை பெரியார் அவர்கள் நடத்தினார். 100 ஆண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அப்பேர்பட்ட சுயமரியாதைத் திருமணத்தில், வேறு ஒன்றும் பெரிதாக இல்லை. புரோகிதர் இல்லாமல் இருந்தது. சடங்குகள், சம்பிரதாயம் ஒன்றும் இல்லை.  ஆனால் அதே நேரத்தில், சிறப்பான வகையிலே அந்த மணவிழாவை பல மக்கள் அதிசயமாகப் பார்த்தனர். இன்று இங்கே,  ஒரு பெரிய மண்டபத்தில், பெரிய மாநாடு மாதிரி நடக்கிறது. அன்றைக்கு அப்படிப்பட்ட சூழ்நிலை இல்லை. அந்தத் திருமணத்தை நிறைய பேர்  வேடிக்கை பார்த்தனர், சுக்கிலநத்தத்தில். கிராமம் முழுவதும் உள்ளவர்கள் அங்கே வந்து, அது என்ன, புதுசா சுயமரியாதைத் திருமணம்? அதை எப்படி நடத்துறாங்க? அய்யர் இல்லாமல், புரோகித மந்திரம் இல்லாமல் எப்படி நடத்துறாங்க? என்றெல்லாம் கேட்டார்கள்.

சமத்துவத்தை, சமவாய்ப்பை, பகுத்தறிவைச் சொல்லிக் கொடுக்கிற ஒரு மணவிழா!

அதற்குப் பிறகு,  தொடர்ந்து தோழர்கள் தானே வந்து, இந்த மணவிழா முறையில் நடத்துகிறார்கள்.  மணமகன் எஜமான் அல்ல; மணமகள் அடிமை அல்ல. இரண்டு பேரும், உற்ற தோழர்கள் – நண்பர்கள் என்ற தத்துவத்தை, சமத்துவத்தை, சமவாய்ப்பை, பகுத்தறிவைச் சொல்லிக் கொடுக்கிற ஒரு மணவிழா.  அது அப்படியே வளர்ந்தது. ஆனால், அந்தத் திருமணம் செல்லாது என்று  உயர்நீதிமன்ற நீதிபதிகள் இரண்டு பேர், அவர்கள் மேல் ஜாதிக்காரர்களாக இருந்த காரணத்தினால், ஏதோ ஒரு காரணத்தைச் சொன்னார்கள். அதற்கு ஒரு காரணம் சொல்ல வேண்டுமே என்பதற்காகச் சொன்னார்கள்.

தொண்டர்கள் எவ்வளவு உறுதியானவர்கள், தோழர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதற்கு
இது ஓர் உதாரணம்!

அந்தத் திருமண வழக்கில் தீர்ப்பு வந்தது. எப்பொழுது தெரியுமா? 50 ஆண்டுகளுக்குப் பிறகு. இந்த மணவிழா நடந்து, ஆயிரக்கணக்கில் மணவிழாக்கள் நடந்து, அவர்களுக்குப் பிள்ளைகள் பிறந்து, அந்தப் பிள்ளைகளுக்கே மணவிழா நடத்தக்கூடிய அளவிற்கு வந்த காலத்துக்குப் பிறகு, வேண்டுமென்றே திட்டமிட்டு, இந்த மணவிழா செல்லாது என்று சொத்துக்களை மய்யமாக ஆக்கிக்கொண்டு, அன்றைக்கு இருந்த இந்து சட்டத் திருத்தம் – இதை வைத்துக்கொண்டு தேவக்கோட்டை, காரைக்குடி பகுதியை மய்யப்படுத்தி, அதுவும்  மதுரை ராமநாதபுரம் பகுதிதான் அன்றைக்கு. அப்படிப்பட்ட ஒரு இடத்தில் வழக்கு வந்தது. அந்த வழக்கின் தீர்ப்பின்படி சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்று சொன்னார்கள்.

நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகுதான் பல்லாயிரக்கணக்கான
திருமணங்கள் நடைபெற்றன!

தந்தை பெரியாருடைய தொண்டர்கள். ஏன், சுப.முருகானந்தம் போன்றவர்கள், எல்லாம் நம்முடைய குடும்பம்; தொண்டர்கள் எவ்வளவு உறுதியானவர்கள், தோழர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதற்கு இது ஓர் உதாரணம். சட்டப்படி செல்லாததாகிவிட்டதே,  இந்தத் திருமணம். இந்த முறையில் எப்படி மணவிழாக்களை செய்துகொள்வது என்று யாருமே நிறுத்தவில்லை. இந்தத் தீர்ப்புக்குப் பிறகுதான் பல்லாயிரக்கணக்கான திருமணங்கள் நடைபெற்றன. எங்களுக்குத் தீர்ப்பு எதுவென்றால், பெரியாருடைய தீர்ப்புதான் முக்கியமே தவிர, இந்தச் சட்டக் கோர்ட்டினுடைய தீர்ப்புகள் எங்களுக்கு முக்கியமல்ல என்று சொல்லி, பல திருமணங்கள், சட்டபூர்வமாகச் செல்லாது என்று சொன்ன பிற்பாடும் நில்லாது நடந்து கொண்டிருந்தது. வெல்லாத நாளில்லை என்று சொல்ல வேண்டிய ஒரு அக்கேஷன்தான், சிறப்புதான் –  மிக முக்கியமானது. அப்படிப்பட்ட மணவிழா இது என்பது சிறப்பான ஒன்றாகும்.

(தொடரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *