சாட்சியம் அளிக்க செல்லும் காவல்துறையினருக்கு சில கட்டுப்பாடுகள் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு

2 Min Read

சென்னை, ஜூலை 21-  நீதிமன்றங் களில் சாட்சியம் அளிக்கச் செல்லும் காவல் துறையினர் முறையான சீருடையில் சுய ஒழுக்கம், அர்ப்பணிப்பு உணர்வுடன் செல்லாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றறிக்கை பிறப்பி்க்குமாறு தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2014 நவம்பரில் ஒரு குற்ற வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக திருக்கோவிலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய சிறப்பு எஸ்.அய். ஆறுமுகம் ஆஜரானார்.

அவர் மதுபோதையில் இருந்தது கண்டறியப்பட்டது. மருத்துவப் பரிசோதனையில் இது உறுதி செய்யப்பட்டதால், கடந்த 2015-இல் அவருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப் பட்டது.

இதை எதிர்த்து விழுப்புரம் டிஅய்ஜியிடம் அவர் மேல்முறையீடு செய்தார். இதையடுத்து, கடந்த 2016இல் கட்டாய ஓய்வு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு, 3 ஆண்டுகளுக்கான ஊதிய உயர்வை மட்டும் நிறுத்தி தண்டனை குறைக்கப்பட்டது.

மீண்டும் பணியில் சேர்ந்த ஆறுமுகம், நிறுத்தி வைக்கப்பட்ட ஊதிய உயர்வை வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மனுதாரர் மதுபோதையில் இருந்ததை நிரூபிக்கும் வகையில் சிறுநீர், ரத்தப் பரிசோதனை செய்யப்படவில்லை என்று கூறி, ஊதிய உயர்வு நிறுத்தப்பட்ட உத்தரவை ரத்து செய்தார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர், விழுப்புரம் டிஅய்ஜி, கடலூர் எஸ்.பி. தரப்பி்ல் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், என்.செந்தில்குமார் அமர்வு விசாரித்தது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: நீதிமன்றத்தில் ஆஜரான சிறப்பு எஸ்.அய். ஆறுமுகம் போதையில் இருந்தார் என்பதற்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவ அதிகாரியின் சான்றே போதுமானது.

ஒரு காவல் உதவி ஆய்வாளர் போதையில் சாட்சியம் அளித்ததை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது. எனவே, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

‘நீதிமன்றங்களில் சாட்சியம் அளிக்கச் செல்லும் காவல் துறையினர் முறையான சீருடையில் சுய ஒழுக்கம், அர்ப்பணிப்பு உணர்வுடன் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் 4 வாரங்களில் சுற்றறிக்கை பிறப்பி்க்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவி்ட்டுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *