அரசு வழக்குரைஞர் நியமனம்  லஞ்சம் கேட்பதாக வழக்குப் போட்டவர் தவெகவில் இருந்து நீக்கம்!

4 Min Read

சென்னை, ஜூலை 19 அரசு வழக்குரைஞர் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடர்ந்த விழுப்புரம் வழக்குரைஞர் ஞானசவுந்தரி, தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு, அரசு வழக்குரைஞர்கள் நியமனத்துக்கு லஞ்சம் கேட்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் தவெகவைச் சேர்ந்த விழுப்புரம் வழக்குரைஞர் ஞானசவுந்தரி.

ஒரு அரசு வழக்குரைஞர் நியமனத்துக்கு 5 லட்சம் முதல் 30 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றுள்ளதாகவும் ஞானசவுந்தரி குற்றம்சாட்டி இருந்தார்.

இம்மனுவை நேற்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முகமது ஷஃபிக், இந்த வழக்கில் இருந்து முதலமைச்சர் விஜய், அமைச்சர் ஆனந்த், தவெக விழுப்புரம் மாவட்டச் செயலாளர் என். மோகன்ராஜ் ஆகியோரது பெயர்களை நீக்கி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் சட்டத்துறைச் செயலாளர் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரை எதிர்மனுதாரராக சேர்க்க அனுமதி வழங்கினார்.

இந்த நிலையில் தவெக விழுப்புரம் மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினராக இணையவழி (Online) முறையின் மூலமாக உறுப்பினராக இணைந்துள்ள சந்திரமோகன் மனைவி ஞானசவுந்தரி, MS.No.4063/2015, எதிரிகளுடன் சேர்ந்து கொண்டு பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறியும், கட்சியின் கொள்கைகள், ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு முரணாகச் செயல்பட்ட அவரை தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து உடனடியாக நீக்கப்படுகிறார்.

மேலும் கட்சியின் எந்த நிர்வாகியும் அல்லது உறுப்பினரும் கட்சி சார்பில் இன்றிலிருந்து அவருடன் எந்தவிதக் கட்சித் தொடர்போ, ஒத்துழைப்போ வைத்துக்கொள்ளக் கூடாது என அறிவுறுத்தப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

இன்றே அமலானது

அரசுப் பேருந்துக் கட்டணம் அதிரடி உயர்வு

மும்பை, ஜூலை 19 டீசல் விலை, பராமரிப்புச் செலவு உயர்வு காரணமாக நேற்று (ஜூலை 18) முதல் பேருந்துக் கட்டணம் 13.56 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

நாட்டிலேயே மிகப்பெரிய பொதுப் போக்குவரத்து அமைப்புகளில் ஒன்றாக மராட்டிய மாநில சாலை போக்குவரத்து கழகம் விளங்குகிறது.

எம்.எஸ்.ஆர்.டி.சி. என அழைக்கப்படும் இந்த போக்கு வரத்து கழகம் வசம் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் உள்ளன. இவற்றில் நாள்தோறும் 55 லட்சத் திற்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்கிறார்கள்.

இந்தநிலையில் மாநில அரசு பேருந்து கட்டணத்தை 13.56 சதவீதம் உயர்த்துவதற்கு மாநில போக்குவரத்து ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கட்டண உயர்வு நேற்றைய முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் உடனடியாக அமலுக்கு வந்தது. இந்த தகவலை அரசுப் போக்குவரத்து கழக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

டீசல் விலை, பராமரிப்பு செலவு உயர்வு காரணமாக நேற்று (ஜூலை 18) முதல் பேருந்து கட்டணம் 13.56 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதன்படி முக்கிய நகரங்களுக்கு இடையிலான வழித்தடங்களில் பயணச்சீட்டு விலைகள் அதிகரித்துள்ளது.

டில்லியில் ஜூலை 22-இல்

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க உத்தரவிடப்படுமா?

புதுடில்லி, ஜூலை 19 காவிரி மேலாண்மை ஆணையத்தின் 53-ஆவது ஆலோசனைக் கூட்டம் வரும் ஜூலை 22-ஆம் தேதி நாட்டின் தலைநகரான புதுடில்லியில் நடைபெறவுள்ளது.

தற்போது கருநாடக அரசு தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீரைத் திறந்து விடத் தொடர்ந்து மறுப்பு தெரி வித்து வரும் நிலையில், இந்த கூட்டம் மிகுந்த முக்கி யத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இக்கூட் டத்தில், தமிழ்நாடு அரசு தனக்குரிய நீர் உரிமையைக் கேட்டுப் பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும், குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்குத் தேவையான தண்ணீரைப் பெற்றிட, தமிழ்நாட்டிற்கு உடனடியாகக் காவிரி நீரைத் திறந்து விடுமாறு கருநாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிடுமா என்ற எதிர்பார்ப்பில் தமிழ்நாடு விவசாயிகளும் ஒட்டு மொத்த தமிழ்நாடும் காத்திருக்கின்றனர்.

ஆசம் கான் பல்கலைக்கழக கட்டடங்களை இடிக்க எதிர்ப்பு

புதுடில்லி, ஜூலை 19 உத்தர பிரதேச மாநிலம் ராம்பூரில் முகமது அலி ஜவஹர் பல்கலைக்கழகம் உள்ளது. இது சிறையில் இருக்கும் சமாஜ்வாதி மூத்த தலைவர் ஆசம் கான் தலைவராக இருக்கும் முகமது அலி ஜவஹர் அறக்கட்டளையால் நடத்தப்படுகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தின் 40 கட்டடங்களில் 38 கட்டடங்களை இடிப்பதற்கான அறிவிக்கையினை ராம்பூர் மேம்பாட்டு ஆணையம் அளித்துள்ளது. இதற்கு அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், சமாஜ்வாதி கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் இந்த நடவடிக்கை நியாயமற்றது, இந்த பல்கலைக்கழகம் குறிவைத்து தாக்கப்படுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளது.

உலக அமைதி குறியீட்டில் இந்தியா எங்குள்ளது?

உலக அமைதி குறியீட்டில் இந்தியா 12 இடங்கள் சரிந்து 127-ஆவது இடத்தை பிடித்துள்ளது. மணிப்பூர் இனக்கலவரம், உள்நாட்டு மோதல்கள் & அண்டை நாடுகளுடனான எல்லைப் பதற்றங்கள் ஆகியவை இச்சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது. அதேசமயம் அய்ஸ்லாந்து மீண்டும் முதலிடத்தை தக்க வைத்துள்ளது. கடந்த 19 ஆண்டுகளாக தொடர்ந்து அந்நாடு முதலிடத்தில் உள்ளதற்கு மிக குறைந்த குற்ற விகிதம், ராணுவமின்மை ஆகியவை முக்கிய காரணமாக கூறப்பட்டுள்ளது.

 

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *