ஊட்டி ஜூலை 18– சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படை யில், ஆவின் நிறுவனம் சார்பில் ஊட்டியில் தானியங்கி பால் விற்பனை இயந்திரம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நோக்கில் 19 வகையான நெகிழிப் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதன் தொடச்சியாக மலைப் பகுதிகளான ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் அனைத்து வகை நெகிழிப் பயன் பாட்டிற்கும் முழுமையான தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது.
சுற்றுலாப் பயணிகளாலும், உள்ளூர் மக்களாலும் பயன்படுத்தப்படும் நெகிழிக் கழிவுகள் அங்குள்ள வன விலங்குகளுக்கும், நீர்நிலைகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) சார்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், நீலகிரி மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள முக்கியப் பகுதிகளில் தானியங்கி பால் விற்பனை இயந்திரம் நிறுவப்படும். முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் கொடைக்கானல் மற்றும் ஊட்டி நகரங்களில் மக்கள் தொகை நெருக்கம் நிறைந்த பகுதிகளில் இந்த இயந்திரங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஊட்டி நகரில் சேரிங்கிராஸ் பகுதியில் உழவர் சந்தை அருகே சோதனை அடிப்படையில் ஆவின் பால் விற்பனை இயந்திரம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இது குறித்து ஆவின் நிர்வாகத்தினர் கூறும் போது, “உத்தரபிரதேசத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் ஒரு இயந்திரம் ரூ.3.60 லட்சம் என்ற விலையில் இரண்டு இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன.
இயந்திரங்களை வைத்த பிறகு, அருகில் உள்ள வீடுகள், ஓட்டல்கள் ஆகியவற்றுக்கு பாக்கெட்களில் பால் விநியோகிக்கக் கூடாது என்று மொத்த ஏஜெண்ட்டுகள், வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட உள்ளது.
இயந்திரங்களை அமைத்த பிறகு பாக்கெட்களில் பால் விற்பனை நிறுத்தப்படும். தானியங்கி விற்பனை இயந்திரங்களின் செயல்பாடு, மக்களின் வரவேற்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்படும்.
ஊட்டி உழவர் சந்தையில் இயந்திரம் அமைக்கும் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது. இதே போல் நீலகிரி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த இயந்தி ரங்கள் கொண்டுவரப்பட உள்ளன” என்றனர்
