முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ்
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelleigence-Al) தொழில் நுட்பத்திலும் வர்ணாசிரமம் நுழையும் பேராபத்தினை பெரியாரியத் தோழர்கள் குறிப்பாக சைபர் சமூக ஆர்வலர்கள் (cyber social activists) உலக அரங்கில் விவாதிக்கத் தொடங்கி விட்டனர். செயற்கை நுண்ணறிவு, என்பது வெறுமனே ஒரு தொழில்நுட்பம் பற்றியதல்ல. இது அறிவியல், சமூகம், சமத்துவம், அதிகாரம், மற்றும் மனித உரிமைகள் ஆகிய அனைத்திலும் ஆதிக்கம் செலுத்துகின்ற முக்கியமான தொழில்நுட்பக் கருவி.
செயற்கை நுண்ணறிவு மனிதனை ஆளும் கருவியாக அல்ல, மனிதனை விடுவிக்கும் கருவியாக இருக்க வேண்டும். அதற்கு, தந்தை பெரியாரின் பகுத்தறிவு, சமூக நீதி, மார்க்ஸின் சுரண்டல் எதிர்ப்பு, அம்பேத்கரின் சமூகநீதி, ஆகிய மூன்றும் ஒன்றிணைய வேண்டும். அறிவியலை மனிதநேயம் வழிநடத்த வேண்டும்; தொழில்நுட்பத்தை அரசியலமைப்பின் சமத்துவக் கொள்கைகள் நெறிப்படுத்த வேண்டும். இல்லையெனில், செயற்கை நுண்ணறிவு புதிய காலத்தின் “டிஜிட்டல் மனுதர்மம்” என்ற ஆபத்தை உருவாக்கக் கூடும்.
செயற்கை நுண்ணறிவு (AI)
என்றால் என்ன?
என்றால் என்ன?
செயற்கை நுண்ணறிவு என்பது மனிதர்களின் சிந்தனை, கற்றல், முடிவெடுத்தல் போன்ற செயல்பாடுகளைக் கணினிகள் மூலம் மேற்கொள்ளச் செய்யும் தொழில்நுட்பமாகும். செயற்கை நுண்ணறிவு இன்று,கல்வி,மருத்துவம், நீதித்துறை, வேலைவாய்ப்பு, வங்கித் துறை, காவல்துறை, அரசின் நலத்திட்டங்கள் என அனைத்துத் துறைகளிலும் முடிவெடுக்கும் சக்தியாக மாறி வருகிறது. எனவே செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு சாதாரண மென்பொருள் அல்ல; அது நாளைய சமூகத்தை வடிவமைக்கும் அதிகாரமாக மாறியுள்ளது.
தொழில்நுட்பம்
நடுநிலையானதா?
நடுநிலையானதா?
‘மெஷின் எந்த பாகுபாட்டையும் காட்டாது’ என்ற பார்வையில் பலர், ‘தொழில்நுட்பம் பாகுபாடற்றது’ என்று நம்புகின்றனர். ஆனால் உண்மை என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
செயற்கை நுண்ணறிவு (AI) தன்னிச்சையாகச் சிந்திப்பதில்லை. அது, தனக்குக் கொடுக்கப்படும்/கிடைக்கும் தரவுகளைக் (Data) கொண்டே முடிவெடுக்கிறது. தரவுகள் என்பது, அவற்றை சேகரித்து கொடுப்பவர்களது சமூகப் பொருளாதாரப் பின்புலம், அதன் விளைவாக அவர்களது சமூக மற்றும் உலகப் பார்வை போன்றவற்றை பொறுத்தே அமையும். அவற்றைக் கொண்டு Programme உருவாக்கி செயலாக்கம் செய்பவர்களை பொறுத்தே செயற்கை நுண்ணறிவு உருவாகும். இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்குபவர்களிடம் சார்புத் தன்மை இருந்தால், தொழில்நுட்பத்திலும் சார்புத் தன்மை இருக்கும் (“Bias in Bias out”) என்பது தரவு அறிவியல் (Data science) மற்றும் Programmingஇல் உள்ள ஓர் அடிப்படைக் கொள்கையாகும். ஓர் அமைப்பை (organisation) பயிற்றுவிக்க பயன்படுத்தப்படும் தரவுகள் அல்லது முன் சார்புடையதாக இருந்தால், அதன் விளைவாக கிடைக்கும் பயன்கள், கணிப்புகள் அல்லது முடிவுகள் (Inferences/outcomes), தவிர்க்க இயலாதவாறு அதே சார்பு நிலையை மீண்டும் உருவாக்கும் அல்லது பெருக்கும் என்ற அடிப்படை உண்மை செயற்கை நுண்ணறிவு உலகில் மிகவும் முக்கியமானது.
சதுர்வர்ண மனப்பான்மை எவ்வாறு செயற்கை நுண்ணறிவில் நுழைய முடியும்?
இந்தியச் சமூகத்தின் பல நூற்றாண்டுகளாக நிலவி வரும் வருணாசிரம அமைப்பு அதன் விளைவுகளான ஜாதி மற்றும் பாலியல் பாகுபாடுகள் இணையத் தரவுகளிலும் பிரதிபலிக்கிறது. செயற்கை நுண்ணறிவு பயிற்சி பெறும் தரவுகளில், ஜாதிய வெறுப்பு, பெண்கள் மீதான பாகுபாடு, மத ஆதிக்க சிந்தனை, தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் எதிர்ப்பு/வெறுப்பு கருத்துகள் அதிகமாக இருந்தால், செயற்கை நுண்ணறிவு அவற்றை உண்மை எனக் கற்றுக்கொள்ளும் அபாயம் உள்ளது. அதாவது, மனிதனின் பாகுபாடு (Discrimination), வெறுப்பு (Hate), இயந்திரத்தின் முடிவாக மாறுகிறது. எடுத்துக்காட்டாக, தேடுபொறிகளில் (Search engine)சமூக ஊடகங்களில் ஒரு குறிப்பிட்ட சமூகங்களைப் பற்றிய எதிர்மறைத் தகவல்கள் அதிகமாக முன்னிலைப்படுத்தப்படுதல், ஒரு குறிப்பிட்ட கட்சியைப் பற்றி புகழ்ந்து பரப்பப்படும் செய்திகளை முன்னிலைப்படுத்தப்படுதல். இவற்றை நாம் அன்றாடம் சமூக வலைத்தளங்களில் பார்த்து அனுபவிக்கிற உண்மைகள். இவை அனைத்தும் செயற்கை நுண்ணறிவின் (AI-யின்) தவறு அல்ல. அதற்குக் கொடுக்கப்பட்ட தரவுகளின் விளைவு.
இந்தியச் சூழலில் இருக்கும் பேராபத்து
இந்தியாவில், அரசியல் அமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு தீண்டாமை ஒழிக்கப்பட்டு, பிறப்பின் அடிப்படையிலான பேதங்கள் நீக்கப்பட்டன. ஆயினும், ஜாதி, வர்க்கம்,மொழி, பிரதேசம்,மதம் அடிப்படையிலான அடிப்படை வாத எண்ணங்கள் சிலரிடம் மிகஆழமாகப் பதிந்துள்ளன என்பது எதார்த்தம். இவற்றை சில அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் தங்களது அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தி வருவது நடைமுறையில் உள்ள நிலையில், AI-யில் சமூகநீதிக்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு இல்லாவிட்டால், பல நூற்றாண்டுகளாக இருந்து வருகின்ற பிறவி பேதங்கள், ஏற்றத்தாழ்வுகள் டிஜிட்டல் வடிவில் மீளுருவாக்கப்படும் பேராபத்து உருவாகியுள்ளது.
இந்த நிலையில், உலக அளவில் “டிஜிட்டல் ஜாதிய அமைப்பு” (Digital Caste System) அல்லது “டிஜிட்டல் மனுதர்மம்” (Digital Manu Dharma) என்ற கருத்துகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. மனிதர்களை பிறப்பின் அடிப்படையில் உயர்வு-தாழ்வாகப் பிரிக்கும் எந்த சிந்தனையும், அமைப்பும் மனிதநேயத்திற்கு எதிரானது, என்று தந்தை பெரியார் நூற்றாண்டுகளுக்கு முன்பே எச்சரித்தது இப்போது நினைவு கூறத்தக்கது. தந்தை பெரியார் எந்த அதிகாரத்தையும் விமர்சனமின்றி ஏற்கக் கூடாது என்றார். AI மனிதனை ஜாதி அடிப்படையில் பார்க்கத் தொடங்கினால், அது அறிவியல் அல்ல. அது தொழில்நுட்பத்தின் பெயரில் மனுதர்மத்தை மீண்டும் நிறுவுவதற்கு ஒப்பாகும்.
கடவுள், மதம், சாஸ்திரம், ஆகியவை எவ்வாறு மனித சமத்துவத்திற்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டனவோ, அதேபோல் AI தொழில்நுட்பமும் சமத்துவத்திற்கு எதிரானதாக மாறிவிடக்கூடாது. Al தொழில்நுட்பமும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாகக் கருதப்படக் கூடாது.
“AI சொல்வது சரி” என்ற கண்மூடித்தனமான நம்பிக்கை, “சாஸ்திரம் சொல்வது சரி” என்ற பழைய மனப்பான்மையின் புதிய வடிவமாக மாறிவிடக்கூடாது.தந்தை பெரியாரின் பகுத்தறிவு சமூகப் பார்வை, AI-யையும் கேள்விக்குள்ளாக்க வேண்டும் என்று நமக்குக் கற்பிக்கிறது.
“சமூக ஜனநாயகம் இல்லாமல் அரசியல் ஜனநாயகம் ஒரு கேலிக்குரியது ஆகும். இதை இன்றைய சூழலில் பொருத்தினால், டிஜிட்டல் ஜனநாயகம் இல்லாமல் சமூக ஜனநாயகமும் முழுமையடையாது. ஜாதி என்பது வேலை பிரிவினை (Division of labour) அல்ல; மாறாக தொழிலாளர்களின் பிரிவினை (Division of labourers), வேலை செய்பவர்களை பிரிக்கின்ற அமைப்பு என்றார் டாக்டர் அம்பேத்கர். அந்த அடிப்படையில் ஜாதி மனிதனின் திறமையை அல்லாமல், அவன் பிறப்பை அடிப்படையாகக் கொண்டு தொழில் வாய்ப்புகளை நிர்ணயிக்கிறது. டாக்டர் அம்பேத்கரின் பார்வையில் தொழில் நுட்பம் அரசியலமைப்பு சமத்துவத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். காரல் மார்க்ஸ், சமூக அநீதியின் மூல காரணமாக பொருளாதாரச் சுரண்டலைக் கண்டார். உற்பத்திச் சாதனங்களை யார் கட்டுப்படுத்துகிறார்களோ, அவர்களே அரசியல், கல்வி, கலாச்சாரம், சிந்தனை ஆகியவற்றையும் கட்டுப்படுத்துகிறார்கள் என்றார். இன்றைய உலகில் தரவு (Data), அல்காரிதம் (Algorithm), கணினி வளங்கள் (Computing Power) ஆகியவை புதிய உற்பத்திச் சாதனங்களாக மாறிவிட்டன. சில நிறுவனங்கள் மட்டுமே Al தொழில்நுட்பத்தைக் கட்டுப்படுத்தினால், அறிவு மற்றும் அதிகாரம் அவர்களிடமே குவிந்து, டிஜிட்டல் காலத்தின் புதிய வர்க்க ஆதிக்கத்தை உருவாக்கும் நிலை உருவாகும்.
செயற்கை நுண்ணறிவு AI என்பது, மனு தர்மத்தின் டிஜிட்டல் வடிவமாக மாறிவிடக்கூடாது. அது அம்பேத்கரின் சமத்துவம், தந்தை பெரியாரின் பகுத்தறிவு, சமூக நீதி இந்திய தொழில்நுட்பத்துடன் Social justice, liberty, equality and fraternity ஆகிய விழுமியங்களை முன்னெடுக்கும் கருவியாக மாற வேண்டும். அறிவியல் மனிதநேயம் இணைந்தால்தான் தொழில்நுட்பம் மனிதகுலத்திற்கு நன்மை செய்யும். இந்நிலையில் தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், மாமேதை மார்க்ஸ் ஆகியோரின் சிந்தனைகள் புதிய பொருத்தப்பாட்டைப் பெறுகின்றன. இந்த அடிப்படையில், அரசும் பல்கலைக்கழகங்களும் முக்கிய கடமைகளை ஆற்ற வேண்டியது அவசியமும் அவசரமும் ஆகிறது.
அரசின் பொறுப்பு என்ன?
அரசுகள் செய்ய வேண்டியது என்ன?
அரசுகள் செய்ய வேண்டியது என்ன?
E செயற்கை நுண்ணறிவு சம்பந்தமான சரியான கொள்கைகளை/ சட்டங்களை உருவாக்குதல்,
E அவற்றில் இந்திய அரசியல் சாசனத்தின் சமூக நீதி விழுமியங்களை இணைத்தல்.
E தற்போது செயல்பட்டு வரும் செயற்கை நுண்ணறிவு AI அமைப்புகளுக்குக் கட்டாய சமூக தாக்க ஆய்வு/ மதிப்பீடு (Compulsory Periodical Social Impact Study) தன்மையுடன் நடத்துதல்.
E பல்வேறு சமூகங்களின் பிரதிநிதித்துவத்துடன் தரவுத் தொகுப்புகளை உருவாக்குதல்.
E SC/ST, BC, MBC, பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் பங்கேற்பை AI ஆராய்ச்சியில் உறுதிப்படுத்துதல் மற்றும் அதிகரித்தல்.
பல்கலைக்கழகங்களின் பொறுப்பு
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் சார்பு நிலையை (bias) தவிர்த்திட பல்கலைக்கழகங்கள் பெரும் பங்காற்றிட முடியும். பல்கலைக்கழகங்களில்:
E Al Ethics, சமூகநீதி, அரசியலமைப்பு விழுமியங்கள், தரவுப் பாகுபாடு, டிஜிட்டல் மனித உரிமைகள் போன்ற பாடங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.
E தேசிய மற்றும் பன்னாட்டு கருத்தரங்குகள் நடத் துவதன் மூலம் இந்த தொழில்நுட்பத்தில் உள்ள உலகலாவிய பிரச்சினைகளை கண்டறிவதும் அதற்கான தீர்வுகளை நோக்கி ஆராய்ச்சியாளர்கள் உருவாவதற்கும் உதவிடும்.
E இன்றைய மனித சமூகத்திற்கு, தொழில்நுட்பக் கல்வி மட்டுமல்ல, மனிதநேயக் கல்வியும் அவசியம்.
தீர்வு
செயற்கை நுண்ணறிவு மனிதனை ஆளும் கருவியாக அல்ல, மனிதனை விடுவிக்கும் கருவியாக இருக்க வேண்டும். அதற்கு, தந்தை பெரியாரின் பகுத்தறிவு, சமூக நீதி, மார்க்ஸின் சுரண்டல் எதிர்ப்பு, அம்பேத்கரின் சமூகநீதி, ஆகிய மூன்றும் ஒன்றிணைய வேண்டும். அறிவியலை மனிதநேயம் வழிநடத்த வேண்டும்; தொழில்நுட்பத்தை அரசியலமைப்பின் சமத்துவக் கொள்கைகள் நெறிப்படுத்த வேண்டும். இல்லையெனில், செயற்கை நுண்ணறிவு புதிய காலத்தின் “டிஜிட்டல் மனுதர்மம்” என்ற ஆபத்தை உருவாக்கக் கூடும். AI என்பது எதிர்கால உலகை உருவாக்கும் சக்தி. அந்த உலகம், சமத்துவமானதாக, அரசியலமைப்பின் விழுமியங்களைப் பாதுகாப்பதாக அமைய வேண்டும்.
