சென்னை, ஜூலை 14–- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பணிகளுக்கான தற்காலிகத் தேர்வர்கள் தங்களது சான்றிதழ்களைப் பதிவேற்றுவது குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தேர்வாணையச் செயலாளர் பனோத் ம்ருகேந்தர் லால் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட் டுள்ளதாவது:
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-2 (தொகுதி 2 மற்றும் தொகுதி 2ஏ) பணிகளுக்கான தேர்வு முடிவுகள், மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை விவரங்கள் கடந்த மாதம் 29-ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டன.அதனைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த தரவரிசை எண், இடஒதுக்கீடு விதி மற்றும் காலிப்பணியிடங்களின் அடிப்படையில், கணிவிழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு (Onscreen Certificate Verification) தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் ஜூலை 13-ஆம் தேதி அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தற்காலிகமாக அனுமதிக்கப் பட்டுள்ள தேர்வர்கள் தங்களது அசல் சான்றிதழ்களை இணைய வழியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்கான காலக்கெடு மற்றும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: பதிவேற்றம் தொடங்கும் நாள்: ஜூலை 15, 2026. பதிவேற்றம் செய்ய கடைசி நாள்: ஜூலை 24, 2026.
பதிவேற்றும் வழிமுறை: தேர் வாணைய இணைய தளத்தில் உள்ள ஒருமுறைப் பதிவு (OTR) பிரிவின் மூலம் சான்றிதழ்களைப் பதிவேற்ற வேண்டும்.
பரிந்துரைக்கப்பட்ட காலக்கெடு விற்குள் (ஜூலை 24-க்குள்) தங்களது சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யாத தேர்வர்கள், தேர்வின் அடுத்த கட்ட நிலைக்குப் பரிசீலிக்கப்பட மாட்டார்கள் என்று தேர்வாணையம் திட்ட வட்டமாகத் தெரிவித்துள்ளது.எனவே, தேர்வர்கள் இறுதி நாள் வரை காத்திருக்காமல் விரைந்து சான்றிதழ்களைப் பதிவேற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
