தீவிரப் பெண்ணியம்
தீவிரப் பெண்ணியம் என்பது பெண்ணியத்தின் ஒரு முக்கியமான பிரிவாகும். பெண்களின் ஒடுக்குமுறை சமூகத்தின் மேலோட்டமான சட்டம், கல்வி மற்றும் பொருளாதார அமைப்புகளில் மட்டுமல்ல, அதற்கு அடிப்படையாக உள்ள ஆணாதிக்க அதிகாரக் கட்டமைப்பிலேயே வேரூன்றி உள்ளது எனக் கருதும் பெண்ணியக் கோட்பாடாகும்.
பெண்களின் உடல், இனப்பெருக்கம், பாலியல், பொருளாதாரம் போன்ற நிலை களில் ஆணாதிக்கம் எவ்வாறு அதிகாரம் செலுத்துகிறது என்பது தீவிரப் பெண்ணியத்தை மய்யமாகக் கொண்டு ஆராயப்படுகிறது. இதன் கொள்கைகளாக ஆணாதிக்க நிறுவனங்கள், பெண்களின் உடல் மீதான கட்டுப்பாடு, பெண்கள் போகப் பொருளாக்கப்படுதல், பெண்களுக்கு எதிரான வன்முறை சார்ந்த நிலையில் தீவிரப் பெண்ணியம் ஆராயப்படுகின்றது.
1960-களில் தொடங்கிப் பெண்ணியத்திற்கும் அதன் அமைப்பிற்கும் புது விளக்கங்களை அளித்தது. தீவிரப் பெண்ணியக் கோட்பாட்டில் அணுகும்போது அதன் வேராக இருப்பது பெண்கள் ’ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினர்’ என்பதாகும். இதன்படி பாலினப் பாகுபாட்டின் அடிப்படையில் அமைந்த ஒடுக்குதல் பொருளாதார அடிப்படையிலமைந்த ஒடுக்குதலை விடச் சமூகத்தின் தன்மைகளை அதிக அளவில் பாதிக்கின்றது என்பதாகும். தமிழ்ச் சூழலில் தீவிரப் பெண்ணி யத்தின் முன்னோடியாகப் பெரியாரைக் கருதலாம். மேலை நாடுகளில் தீவிரப் பெண்ணியம் (Radical feminism) உருவாவதற்கு முன்பே அவர் ஆணாதிக்கத்தின் வேர்களாகக் கருதிய திருமணம், கருத்தரிப்பு, கற்பு சார்ந்த சிலவற்றைக் கடுமையாக எடுத்துக் கூறினார்.
சூழலியப் பெண்ணியம்
இலக்கியத்திற்கும் இயற்கைக்குமான உறவுகள் குறித்த உரை யாடல்கள் நீண்டகாலமாக இருந்து வந்தாலும், இயற்கை – இலக்கியம் – பெண் ஆகியவற்றிற்கிடையேயான தொடர்பு குறித்த சொல்லாடல்கள் இரண்டா யிரத்துக்குப் பிறகு தீவிரமடைந்தன.
இயற்கையை மனிதர்கள் தன் வயப் படுத்தியதால் சூழலியல்(Ecology) என்ற பார்வை தோன்றியது. மனிதர் களின் அகம், புறம் சார்ந்து இருக்கக் கூடிய செய்திகளை இயற்கையோடு பொருத்திப் பார்த்து அதனை விமர்சிப் பதனால் சூழலியத் திறனாய்வு (Eco-Criticism) நடைமுறையில் வந்தது. பெண்களும் இயற்கையும் ஒரே மாதிரியான அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். பெண்களின் விடுதலையும் இயற்கையின் பாதுகாப்பும் ஒன்றோடொன்று தொடர்புடையவையாக இருப்பதால் குழலியப் பெண்ணியம்(Eco Feminism) என்ற சொல் தோன்றி, பிறகு கோட்பாடாக வலுப்பெற்றது. இச்சொல் தி போனே(D eaubonne) என்பவரால் 1974-இல் அறிமுகம் செய்து வைத்ததைத் தொடர்ந்து, இந்தச் சொற்றொடர் மே ஃபிரான் சாய்ஸ் டி பார்னால்(Fran Chais de Parnaul) என்பவரால் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. அதன் பிறகு 1980-களில் வளரத் தொடங்கியது.
‘தமிழ் இலக்கியத்தில் சூழலியப் பெண்ணியம்’(Eco feminism Discourse in Tamil) குறித்து ஆய்ந்தவர் பேராசிரியர் வனத்து அந்தோணி ஆவார். இந்நூலில் இயற்கை மற்றும் பெண்ணியத்தை இணைத்துத் தமிழ் இலக்கியங்களில் நிலவும் சூழலியல் பார்வையைப் பகுப் பாய்வு செய்துள்ளார். சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியங்கள் வரை சூழலியப் பெண்ணியத்தின் தாக்கம் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.
– வெ.ரேவதி, முனைவர் பட்ட ஆய்வாளர், சென்னை.
– முனைவர் து.மேஷாக் தமிழ்த் துறைத் தலைவர், சென்னைக் கிறித்தவக் கல்லூரி, சென்னை.

