* நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தைத் தனியார் மயமாக்கக் கூடாது;
நிலம் கொடுத்தவர்கள் எல்லோருக்கும் வேலை கொடுக்க வேண்டும்!
* தனியார்த் துறையைத் தடுக்க வேண்டும்; தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு தேவை!
அதற்காக நாடு தழுவிய போராட்டத்தைத் நடத்துவோம்; அதுதான் உண்மையான சமூக நீதி!
நெய்வேலி, ஜூலை 12 நெய்வேலி நிலக்கரி நிறு வனத்தைத் தனியார் மயமாக்கக் கூடாது. நிலம் கொடுத்தவர்கள் எல்லோருக்கும் வேலை கொடுக்க வேண்டும். தனியார்த் துறையைத் தடுக்க வேண்டும்; அதே நேரத்தில் வளர்ந்திருக்கிற தனியார் துறை, வந்திருக்கிற தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு தேவை. அதற்காக நாடு தழுவிய போராட்டத்தைத் தமிழ்நாடு மட்டுமல்ல, எல்லா இடங்களுக்கும் தழுவிய போராட்டத்தை நடத்துவோம். அதுதான் உண்மையான சமூக நீதி என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகள் தனியாருக்குத் தாரை வார்க்கப்படுவதைக் கண்டித்துத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கண்டன உரை
கடலூர் மாவட்டத் திராவிடர் கழகம் சார்பில், நெய்வேலி நகரம் முக்கிய கடைவீதியில் – காமராஜர் சிலை அருகில் 7.7.2026 அன்று காலை 10.30 மணிக்கு, நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகள் தனியாருக்குத் தாரை வார்க்கப்படுவதைக் கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கண்டன உரையாற்றினார்.
அவரது கண்டன உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
எனக்கு நன்றாக இன்றும் நினைவில் இருக்கிறது, நான் அண்ணாமலை பல்கலைக் கழகத்திலே எம்.ஏ. கடைசி ஆண்டு படிக்கிறேன். சிதம்பரம் தலைவர் கிருஷ்ணசாமி அவர்களுடைய தலைமையிலேயே இங்கே கூட்டம் போடுவதற்காக வந்தோம். இந்த எல்லைக்குள்ளேயே கூட்டத்துக்கு அனுமதி கிடையாது. அதனால் என்ன செய்தோம் என்றால், பக்கத்து ஊரான மந்தாரக் குப்பம். அப்பொழுதெல்லாம் இவ்வளவு பெரிய இடம் கிடையாது, வசதி கிடையாது. அன்றைக்கு வேப்பாங்குறிச்சிக்குப் பக்கத்தில் – அங்கேதான் என்னுடைய நண்பரான அண்ணாமலை என்பவரின் வீடு இருக்கிறது. அங்கேதான் அய்யாவுக்குச் சாப்பாடு. இது ஒரு பழைய காட்சி.
போஸ்ட் மாஸ்டராக இருந்த நாராயணசாமி!
பல ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த ஒரு சம்பவத்தை உங்களுக்கு எடுத்துச் சொல்கிறேன். பெரியார் அய்யா கூட்டத்திற்கு வந்துவிட்டார். சிதம்பரம் கிருஷ்ணசாமி, கூட்டத்திற்குத் தலைமை தாங்குகிறார். இந்த ஊரில் உள்ளவர்கள், கூட்டத்திற்குத் தலைமை தாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை. அப்பொழுது நமக்கு ஆதரவாளர்களாக இருந்தவர்கள் – நம்முடைய முனைவர் துரை.சந்திரசேகரனுடைய மாமனார் நாராயணசாமி என்பவர் போஸ்ட் மாஸ்டராக இருந்தார். அவருடன், இன்னொரு போஸ்ட்மேன் இருப்பார், அவர் நம் இயக்கத்தினுடைய தீவிரமான நண்பர். அவருடைய பெயர் எத்திராஜ். அவர்கள் எல்லாம் இருந்தார்கள். தண்ணீர் கொண்டு வருவதுகூட அவர்கள்தான்; வேறு யாரும் ஆள் கிடையாது. நம்முடைய தோழர்கள் இங்கே, இந்த நிறுவனத்தில் வேலைக்கு வந்தவர்கள், எல்லோரும் பயந்து, ‘‘அய்யோ, எங்களை சி.அய்.டி.யை வைத்துக் கண்காணிக்கிறார்கள். அதனால், நாங்கள் யாரும் கிட்டே வர முடியாது’’ என்று சொல்கிறார்கள். நாங்கள் மூன்று பேரும் மேடையில் அமர்ந்திருக்கின்றோம். அந்தக் கூட்டத்தில் அய்யா பேசுகிறார், ‘‘இந்த ஊர்ல இவ்ளோ கொள்ளை அடிக்கி றாங்க, உத்தியோகத்துல; அதுக்குத்தான் நாங்க அச்சுப் போட்டு புஸ்தகம் கொண்டு வந்திருக்கோம்; இரண்டணா அதனுடைய விலை. ஆகவே இதை வாங்கிப் பாருங்க’’ என்றார்.
உரிமை முழக்கம் எழுப்புவதற்கு,
குரல் கொடுக்கக்கூடிய நெய்வேலியாக இருப்பதற்கு
இந்த இயக்கம்தான் காரணம்!
மேடையருகே வந்து கேட்பதற்கு ஆள் இல்லை; இப்பொழுது நீங்களெல்லாம் கேட்பது போன்று. ரொம்ப தூரத்தில் நின்று, அய்யாவின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவ்வளவு தூரத்திலிருந்து மெதுவாக ஒரு 10 பேர் வந்தார்கள்; அய்யா பேசத் தொடங்கியவுடன், 20 பேர் வந்தார்கள்; அப்புறம் 200 பேர் வந்தார்கள். அப்புறம் 2000 பேர் வந்தார்கள். ஆனால், கிட்டே வரவில்லை. தலைக்குமேல் துண்டைப் போட்டுக்கொண்டு, அய்யாவின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தனர். யாராவது அடையாளம் கண்டு கொள்வார்களோ என்று அன்று இருந்த இந்த நெய்வேலிதான், இன்றைக்கு உரிமை முழக்கம் எழுப்பு வதற்கு, குரல் கொடுக்கக்கூடிய நெய்வேலியாக இருப்பதற்கு இந்த இயக்கம்தான் காரணம். அதற்குப் பிறகுதான், தொ.மு.ச. அதற்குப் பிறகுதான் மற்ற மற்ற அமைப்புகள் – இப்படி எல்லாமே வரக்கூடிய வாய்ப்புகள் வந்ததன.
அந்த வகையில் தான், ஒருபோதும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்கு விற்கக் கூடாது என்று நாம் உறுதியாகச் சொல்கிறோம்.
சிறிய ஓட்டையை இன்றைக்கு அனுமதித்தால், அது பெரிய ஓட்டையாகிவிடும்!
நீங்கள் கேட்கலாம், என்னங்க 3.9 சதவிகி தம்தானே, 5 சதவிகிதம் தானே என்று. இது சிறிய ஓட்டை – அதனை முதலில் அனுமதித்தீர்க ளேயானால், பெரிய ஓட்டையாகி, அதில் யானையே நுழைந்துவிடும்.
இது ஒரு ஒத்திகை – யாருக்கு? முழுக்க அம்பானிக்கு. இன்றைக்கு இந்தியாவில் உள்ள துறைமுகங்களை எடுத்துக்கொண்டீர்களேயானால், தமிழ்நாட்டில் இருக்கும் சென்னைக்கு அப்புறம் இருக்கக்கூடிய பழவேற்காட்டில் தொடங்கி, கடைசியில் ராமேஸ்வரம் வரையில அதானிக்குத்தான் துறைமுகங்கள் சொந்தம்..
LGP என்றால் என்ன தெரியுமா?
மாநில அரசுகள் வருகிறது, போகிறது, அதைப் பற்றி அவருக்குக் கவலை இல்லை. அப்பேர்ப்பட்ட கொடுமைகள் நடந்து கொண்டிருக்கின்றன. எனவேதான் இந்த LGP என்று ஒன்றைத் தொடங்கினார்கள்.
LPG என்றால், சமையல் எரிவாயு உருளை என்று நினைக்காதீர்கள்.
LGP என்றால் என்ன தெரியுமா?
L என்றால், Liberalisation
G என்றால், Globalization
P என்றால், Privatization
தாராளமயமாக்கல், உலகமயமாக்கல், தனியார்மய மாக்கல் என்று அர்த்தம்.
அந்த LPG வந்ததினுடைய விளைவு, நமக்கு இழப்பும் வந்தது. சரி, தனியார் மயம் என்று சொல்லும்போது, இது அவர்களுக்குப் பொருளாதாரத்தில் தானே லாபம் என்று நாம் நினைக்கலாம்.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும்
69% இட ஒதுக்கீடு கிடையாது!
பொருளாதார ஆபத்தை விட, நமக்கு இன்னும் பெரிய ஆபத்து இருக்கிறது. அது என்னவென்றால், பொருளாதார நட்டம் ஏற்பட்டால், பொருளாதாரம் தனிப்பட்ட முதலாளிக்குப் போய், அவன் பணக்காரன் ஆகிறான் என்பது மட்டுமல்ல, அதைவிட அரசுத் துறை – பொதுத்துறை என்று சொன்னால், மண்டல் கமிஷனுக்காக நாம் போராடி, அதற்காக டாக்டர் அம்பேத்கர் போராடி, ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் – எஸ்.சி., எஸ்.டி. அதே மாதிரி பி.சி., ஓ.பி.சி. என்று சொல்லக்கூடிய தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியின மக்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று சொல்லக்கூடிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் காலங்காலமாக கல்வி மறுக்கப்பட்டு, பிறகு நம்முடைய திராவிட இயக்கத்தினாலே கல்வி கொடுக்கப்பட்டு, பிறகு படித்து வந்திருக்கிறார்களே, அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்காக, இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்து, அதிலும் 69% இட ஒதுக்கீடு என்று நம்முடைய தமிழ்நாட்டில் தான் இருக்கிறது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. அதே மாதிரி ஒன்றிய அரசாங்கத்தில் 50 சதவிகித இட ஒதுக்கீடு.
அந்த இட ஒதுக்கீட்டைக் கூட எப்படி கொடுத்தார்கள் என்றால், தாழ்த்தப்பட்ட சமுதாயம் என்று சொல்லக்கூடிய எஸ்.சி.க்கு 15 சதவிகிதம்.
அதே மாதிரி எஸ்.டி. என்று சொல்லக்கூடிய பழங்குடியின மக்களுக்கு 7.5 சதவிகிதம்.
தனியார்த் துறையிலும் இட ஒதுக்கீடு
தேவை என்ற போராட்டத்தை
இந்த இயக்கம் முன்னிறுத்தும்!
ஆகவே 15 சதவிகிதத்தையும், 7.5. சதவிகி தத்தையும் சேர்த்தால், 22.5 சதவிகிதம். ரவுண்ட் செய்தால், 23 சதவிகிதம். மண்டல் அவர்கள் போராடிய நேரத்திலே கூட, 50 சதவிகிதத்திற்குக் கீழே போகக்கூடாது என்று உச்சநீதிமன்றப் பார்ப்பனர்கள் தானே எழுதிக் கொண்டார்கள். அரசியலமைப்புச் சட்டத்தில் நிர்ணயம் கிடையாது. முதலில், அதுவாவது கிடைக்கட்டும் என்று நாம் முயற்சி செய்த நேரத்தில், 27 சதவிகிதம் இருந்தது. அந்த 27 சதவிகிதம் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வந்து, இந்த 50 சதவிகிதமாவது ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்குக் கிடைக்கும். எப்பொழுது தெரியுமா? பொதுத்துறை நிறுவனமாக இருக்கிற வரையில்தான். தனியார்த் துறையில் இட ஒதுக்கீடு கிடையாது. ஆகவேதான், அடுத்த போராட்டம், நம்முடைய போராட்டம் – தனியார்த் துறையிலும் இட ஒதுக்கீடு தேவை என்ற போராட்டத்தை இந்த இயக்கம் முன்னிறுத்தும்.
ஏனென்றால், பொதுத் துறை நிறுவனங்களை யெல்லாம் தனியார்த் துறையாக மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆகவேதான் நண்பர்களே, நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தைத் தனியார் மயமாக்கக் கூடாது. அடுத்து இதிலே ஒரு வேண்டுகோள் என்னவென்றால், நிலம் கொடுத்தவர்கள் எல்லோருக்கும் வேலை கொடுக்க வேண்டும். தனியார்த் துறையைத் தடுக்க வேண்டும்; அதே நேரத்தில் வளர்ந்திருக்கிற தனியார் துறை, வந்திருக்கிற தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு தேவை. அதற்கு என்று நாடு தழுவிய போராட்டத்தைத் தமிழ்நாடு மட்டுமல்ல, எல்லா இடங்களுக்கும் தழுவிய போராட்டத்தை நடத்துவோம். அதுதான் உண்மையான சமூக நீதி என்று கூறி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, இப்போது நீண்ட முழக்கத்தோடு நாம் இந்த நிகழ்ச்சியை நிறைவு செய்ய வேண்டும்.
ஆர்ப்பாட்டத்தில் முழங்கப்பட்ட முழக்கங்கள்!
(கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் முழக்கங்களைச் சொல்லச் சொல்ல, தோழர்கள் திரும்பச் சொன்னார்கள்).
ஆர்ப்பாட்டத்தில் முழங்கப்பட்ட முழக்கங்கள் வருமாறு:
நெய்வேலி நிலக்கரி நிறுவனம்
எங்கள் மண்ணின் வளத்தின் உறைவிடம்!
நெய்வேலி நிலக்கரி நிறுவனம்
நாட்டுக்கு மக்கள் தந்த அர்ப்பணம்!
விட்டுத் தரமாட்டோம் விட்டுத் தர மாட்டோம்!
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தைத்
தனியாருக்கு விட்டுத்தர மாட்டோம்!
ஒன்றிய அரசே, ஒன்றிய அரசே,
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தைத்
தனியார் மயம் ஆக்காதே!
அனுமதியோம், அனுமதியோம்
தனியார் மயத்தை அனுமதியோம்!
லாபத்தில் இயங்கும் நிறுவனத்தின்
பங்குகளை விற்பதா? விற்பதா?
பகற்கொள்ளையா, இல்லையா?
நாட்டுக்குச் சேர வேண்டிய
மக்களுக்குச் சேரவேண்டிய லாபத்தை
தனியார், கார்ப்பரேட் முதலாளிகள் தின்பதா?
பங்குகளை விற்பது என்றால்
வழங்கிடு வழங்கிடு!
என்.எல்.சி நிறுவனத்தின் பங்குகளை
தமிழ்நாடு அரசுக்கு வழங்கிடு!
ஏர்போர்ட் எல்லாம் அதானிக்கு!
ஏர் இந்தியா டாடாவுக்கு!
பெட்ரோல் கொள்ளை அம்பானிக்கு!
பட்டை நாமம் மக்களுக்கு!
சுரங்கமெல்லாம் அதானிக்கு!
சுடுகாடு மட்டும் மக்களுக்கு!
துறைமுகமெல்லாம் அதானிக்கு!
துப்புரவு வேலைதான் நம்மாளுக்கு!
ரயில் நிலையங்கள் அதானிக்கு!
சம்சா வியாபாரம் இளைஞர்களுக்கு!
மோடி சொன்ன பகோடா வியாபாரம்
நம்மவருக்கு!
டெலிவரி வேலை படிச்சவனுக்கு!
டெலிகாம் சந்தை அம்பானிக்கு!
என்.எல்.சி.யும் தனியாருக்கா?
நெய்வேலி நிலக்கரி தனியாருக்கா?
ஏற்கமாட்டோம், ஏற்கமாட்டோம்
தனியார் மயத்தை ஏற்க மாட்டோம்!
தமிழ்நாடு அரசே, தமிழ்நாடு அரசே!
ஒன்றிய அரசு விற்கும் பங்குகளை
வாங்கிடு, வாங்கிடு!
தனியார் மயம் என்பது
சமூகநீதிக்குச் சவக்குழி!
தனியார் மயம் என்ற பெயரால்
பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட
மக்களுக்குக் கிடைத்திடும்
இடஒதுக்கீட்டைப் புதைக்காதே!
விதை நெல்லை விற்பதுதான்
பொருளாதார உத்தியா?
விவசாயிக்குள்ள சிந்தனைகூட
இல்லாதது எல்லாம் புத்தியா?
நிலக்கரி வெட்ட இடம் கொடுத்த
குடும்பங்களுக்கு வேலையுண்டா? வேலையுண்டா?
நாணயமில்லை நாணயமில்லை
நிலக்கரி நிறுவனத்துக்கு நாணயமில்லை!
வெட்கக் கேடு வெட்கக் கேடு!
வெட்கம், வெட்கம் ஒன்றிய அரசே!
பங்கு விலக்கலுக்குத் தனித்துறையா?
லாபத்திலே இயங்குகின்ற
பொதுத் துறை நிறுவனங்களை
விற்பதுதான் வேலையா?
காப்போம் காப்போம்
சமூக நீதி காப்போம்!
போராடுவோம், வெற்றி பெறுவோம்
வெற்றி கிட்டும் வரை போராடுவோம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கண்டன உரையாற்றினார்.
