சென்னை, ஜூலை 11- தமிழ்நாட்டில் இன்று (11.7.2026) முதல் ஜூலை 16ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வட தமிழ்நாடு கடலோரப் பகுதிகளை ஒட்டி சுமார் 0.9 கி.மீ. உயரத்தில், ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. தெலங்கானாவிலிருந்து கருநாடக கடலோரப்பகுதிக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் வரை சுமார் 1.5 கிமீ முதல் 3.1 கி.மீ. உயரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று (ஜூலை 11) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏனைய தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். 12, முதல் 14ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் இதர தமிழ்நாட்டில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 15ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதர தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 16ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழ்நாட்டில் 12 முதல் 14ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர்ந்தும், இதர பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.
