கண்ணீர்த் துளிகளா? பன்னீர்த் துளிகளா?

3 Min Read

 கண்ணீர்த் துளிகளா? பன்னீர்த் துளிகளா?

அரசியல்

1949இல் அறிஞர் அண்ணா அவர்கள் அய்யா அறிவித்த ‘திரு மணம்’ என்ற ஓர் ஏற்பாட்டினைக் காரணம் காட்டி, திராவிடர் கழகத்தை விட்டு வெளியேறியபோது, இக்கருத் தில் அண்ணாவின் முயற்சிக்கு ஆதரவு காட்டியோர்பற்றி  அண்ணா அவர்கள் தாம் நடத்திய “திராவிட நாடு” வார ஏட்டின் முதற் பக்கத்தில் “கண்ணீர்த் துளிகள்” என்றே தலைப்பிட்டு அதன்கீழ் பெயர் பட்டியலை வெளியிட்டு வந்தார்.

அதனால் அவரது கட்சிக்கு அய்யா அப்போது சூட்டிய பெயர் க.து. கட்சி என்பது – கண்ணீர்த் துளி கட்சி.

 முதலாம் தி.மு.க. மாநாட்டில் தலைமை உரையில் அண்ணா பேச்சைத் துவக்கும்போதுகூட,

“கண்ணீர்த் துளிகளே என்

கண்மணிகளே” என்றுதான் துவக்கினார்!

இது பழைய வரலாறு! அத்துடன் அன்னையார் எழுதிய (4.01.1974) ஓர் அறிக்கையையும் இணைத்துப் படித் தால் அய்யாவும், அன்னையாரும் உகுத்த ‘கண்ணீர்த் துளிகள்’ எப்படி இன்று நமக்கு மகிழ்ச்சிக்கான வரலாற்றில் நினைவு கூரத்தக்கப் பன்னீர்த் துளிகளாக மனம் நிறைந்து மணம் வீசுகிறது – புரியுமே!

“1972 செப்டம்பர் 17ஆம் நாள் ஈரோட்டிலே அவர் பிறந்து வாழ்ந்த ஊரிலே என்றும் இல்லாத அளவுக்கு வெகுசிறப்புடன் அவருடைய பிறந்த நாளைக் கொண்டாடி அவரது திருவுருவச் சிலையையும் திறந்து, கடலென மக்கள் திரண்டு வந்திருந்து மகிழ்ந்திருந்த வேளையிலே அம்மகிழ்ச்சியில் பங்கு கொண்டு, நானும் அது முடிந்ததும் அம்மகிழ்ச்சியின் வேகத்தைத் தாங்கும் சக்தி இல்லாததனாலோ என்னவோ அன்று இரவு 11 மணியளவில் இருதய வலி முதன்முதலாக ஏற்பட்டுப் படாதபாடுபட்டு அவதியுற்ற வேளையில், அய்யா அவர்கள் பயந்து துடித்த துடிப்பும் என் துடிப்பைவிட அதிகமாய் இருந்ததாகவும் அன்று வந்திருந்த நம் இயக்க அன்புத் தோழர்கள் பட்டபாட்டையும் பின்னர் என் உடல் நலம் தேறியவுடன் ஒவ்வொருவரும் சொல்வதைக் கேட்டு ஒருபுறம் வேதனையும், அதே நேரத்தில் பூரிப்பும் அடைந்து அய்யா அவர்களிடம் சென்று “நீங்கள் பயந்து விட்டீர்களாமே! நீங்கள் ஒன்றுக்கும் பயப்பட வேண்டாம். நான் பிழைத்தது ஏதோ காரணத்திற் காகத்தான். உங்களை விட்டுவிட்டு அவ்வளவு சீக்கிரம் போய்விட மாட்டேன். எத் தனையோ ஏளனப் பேச்சுகளையும், தூற்றுதலையும் கேட்டுத் தாங்கிய இந்த உள்ளம், உங்களுக்கு இன்று ஏற்பட்ட மகிழ்ச்சியைத் தாங்க முடியாமல் போய் விட்டது. அவ்வளவுதான், வேறில்லை” என்று கூறி அவரை மகிழ்வித்தேன். அய்யா அப்பொழுது சொன்னது இன் னமும் என் மனதில் அப்படியே இருக்கின்றது. “இயற்கையை வெல்வது கடினம்தான்! உனக்கு ஏதாவது இன்று நேர்ந்திருந்தால் அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால், என் எண்ணம் வீணாயிற்றே. வீண் பழிக்கும், பொல்லாப்புக்கும் ஆளானேனே. எந்தக் காரணத்திற்காக – என்ன நோக்கத்திற்காக இந்த ஏற்பாடுகள் (பல பேரின் அதிருப்திக்கும் வெறுப்புக்கும் ஆளாகி) செய்தேனோ அது நிறைவு பெறாமல் நீ போய் விடுவாயோ என்றுதான் கலங்கினேன்” என்று கூறிக் கண்ணீரை உதிர்த்தார். அப்போது நான் அவரை ஊக்கப் படுத்துவதற்காகச் சொன்னேன். “இதென்ன நீங்கள் இவ்வளவு பல வீனமானவரா? எல்லோருக்கும் மர ணத்தைப் பற்றித் தத்துவம் பேசுவீர். இயற்கையின் நியதியைப் பற்றி வண்டி வண்டியாய்ச் சொல்வீர், கடைசியிலே நீங்கள் இப்படி இருந்தால் மற்றவர் களுக்கு மட்டும் இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்கவேண்டும் என்று சொல்வதில் என்ன பொருள் இருக்கிறது? எனக்கு ஒன்றும் புரியவில்லையே உங்கள் பேச்சு” என்று சற்றுப் பொய்க் கோபத்துடன் கடினமாகச் சொன்னேன். உடனே தமக்கே உரிய சிரிப்புச் சிரித்து ஏதோ சமாதானம் செய்தார். உண்மையிலேயே அந்நிகழ்ச்சி எங்கள் இருவரையும் மிகவும் நெகிழ வைத்த ஒன்றாகும். மறக்க முடியாததும்கூட.”

‘விடுதலை’, 04.01.1974

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *