அறிவியலாளர்களால் ‘உயிரற்ற கோள்’ என்று கருதப்பட்ட செவ்வாய் கோளின் ஆழத்தில், ஒரு காலத்தில் அதன் முழு மேலோட்டிலும் பரவியிருந்த மாபெரும் மாக்மா வலைப்பின்னல் இருந்ததற்கான ஆதாரத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சூரியக் குடும்பத்திலேயே பூமிக்குத் தான் எப்போதும் மாபெரும் சிறப்பு. இங்கு தொடர்ந்து நகரும் கண்டத்தட்டுகள் (Tectonic plates), உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி என பூமி எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்கும் கோள். இதற்கு நேர்மாறாக, செவ்வாய்க் கோள் தன் பொற்காலத்தை இழந்து, அப்படியே உறைந்துபோன பாழடைந்த கோளாகவே பார்க்கப்பட்டது. அங்குள்ள எரிமலைகள் எல்லாம் அழிந்துவிட்டன; பூமியை போல கண்டத்தட்டுகளின் நகர்வும் அங்கு இல்லை. ஆனால், இப்போது செவ்வாயின் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உண்மை விண்வெளி ஆராய்ச்சியாளர்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தி யுள்ளது. செவ்வாய்க் கோளின் மேற்பரப்பிற்கு மிக ஆழத்தில், ஒரு காலத்தில் அந்தக் கோளின் முழு மேலோட்டையும் உலுக்கிய மாபெரும் மாக்மா (உருகிய பாறைக்குழம்பு) வலைப்பின்னல் இருந்ததற்கான ஆதாரங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.
இதுவரை விஞ்ஞானிகள் மனதில் அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. அது என்னவென்றால், பூமியில் இருப்பது போன்ற இவ்வளவு பெரிய மாக்மா அமைப்புகள் உருவாக வேண்டுமென்றால், அதற்கு கண்டத்தட்டுகளின் நகர்வு கட்டாயம் தேவை என்பதுதான். ஆனால், எந்தவொரு தட்டுகளின் நகர்வும் இல்லாமலேயே செவ்வாய்க் கோள் இவ்வளவு பெரிய உள் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது என்றால், பிரபஞ்சத்தில் உயிரினங்கள் தோன்றுவதற்கான சூழல் நினைத்ததை விட சாதாரண ஒன்றாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் இப்போது வியக்கிறார்கள்.
இந்த மிகப்பெரிய கண்டுபிடிப்புக்குக் காரணம் நாசாவின் இன்சைட் லேண்டர்தான். 2018இல் செவ்வாயில் தரை இறங்கிய இது, அங்கு அதிர்வுமானியை (Seismometer) நிறுவி, செவ்வாய் கோளின் ஆழத்தில் ஏற்படும் மெல்லிய அதிர்வுகளையும், விண்கல் மோதல்களையும், ‘செவ்வாய் கோளின் அதிர்வுகளையும்’ (Marsquakes) உன்னிப்பாகப் பதிவு செய்தது. இந்தத் தரவுகள் செவ்வாய் கோளின் நிலத்தடி அமைப்பை மிகத் துல்லியமாகக் காட்டின. செவ்வாய் கோளின் மேலோடு ஒரே பாறையாக இல்லாமல் அடுக்குகளாக இருக்கிறது என்பதும், மேல் பகுதியில் நீர் நிறைந்த பாறைகளும், கீழே செல்லச் செல்ல அதிக அடர்த்தியான பொருட்களும் இருப்பது ஏற்கெனவே தெரிந்த ஒன்றுதான். ஆனால், மேலோட்டிற்கு கீழே சுமார் 15 மைல் (24 கி.மீ) ஆழத்தில் ஒரு பெரிய புதிர் ஒளிந்திருந்தது. அந்த இடத்தில் நில அதிர்வு அலைகளின் வேகம் திடீரென மாறியது. அது என்னவென்று தெரியாமல் விஞ்ஞானிகள் நீண்ட காலம் குழம்பிப் போயிருந்தனர்.
இந்தப் புதிரை அவிழ்க்க, ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக புவியியலாளர் டாக்டர் டோபர்மோரி மெக்கே-சாம்பியன் (Dr Tobermory Mackay-Champion) மற்றும் அவரது குழுவினர் ஒரு புதிய வழியைக் கையாண்டனர். செவ்வாய் கோளின் உட்பகுதியில் இருக்க வாய்ப்புள்ள நூற்றுக்கணக்கான பாறை கலவைகளின் மாதிரிகளைச் சேகரித்து, புள்ளியியல் கணக்கீடுகள் மூலம் ஆய்வு செய்தனர்.
அதில் கிடைத்த முடிவுகள், 15 மைல் ஆழத்திற்கு மேலே உள்ள பாறைகள் பசால்ட் (Basalt) எனப்படும் இருண்ட எரிமலைப் பாறையாக இருக்க 86% வாய்ப்பு உள்ளது. அதற்கு கீழே உள்ள பாறைகளில் அலைகளின் வேகம் மிக அதிகமாக இருந்தது. அது சிலிக்கா குறைவாகவும், இரும்பு மற்றும் மெக்னீசியம் அதிகமாகவும் கொண்ட அல்ட்ராமாஃபிக் எனப்படும் அதிக அடர்த்தியான பாறையுடன் 91% கச்சிதமாகப் பொருந்தியது. செவ்வாய் கோளின் 15 மைல் ஆழத்தில் தொடங்கி, சுமார் 9 மைல் (14 கி.மீ) தடிமனுக்கு இரும்புச்சத்து நிறைந்த ஒரு பிரம்மாண்ட பாறை அடுக்கு பரவியிருப்பது ‘நேச்சர் அஸ்ட்ரானமி’ (Nature Astronomy) இதழில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த மாக்மா அமைப்புகள்தான் கோளின் தன் வளிமண்டலத்தை உருவாக்குவதற்கும், தண்ணீரைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் மிக முக்கியமானவை. கோளில் உயிரினங்கள் வாழ்வதற்குத் தேவையான வெப்பத்தைத் தருவதே இந்தச் சூழல்தான். பூமி இதற்கு மிகச் சிறந்த உதாரணம்.
– எஸ்.மீனாட்சி சுந்தரம்
